பலா பட்டறை: ஒரே கரு, பல முட்டைகள்.

ஒரே கரு, பல முட்டைகள்.

காலையில் அலாரம் அடித்து திரும்பிப் பார்த்தபோது ஜார்ஜி அங்கே இல்லை.

எங்கே போனான்? மெதுவாய் எழுந்திருந்து சோம்பல் முறித்தவாறே டேபிளை பார்த்தபோது, கவனித்தேன் லாப்டாப் காணோம். புரிந்து விட்டது. ப்ளாக், பதிவு, கவிதை, இலக்கியம் என்று ஒரு மூன்று மாதமாக புலம்பிக்கொண்டிருக்கிறான். இவனுக்கும் உள்ளூர எழுத ஆசை, தினமும் என்ன என்னவோ எழுதுகிறான், என்னிடமும் சிலாகிக்கிறான், எனக்குத்தான் கடுப்பாய் இருக்கிறது.

ஒவ்வொன்றையும் படித்துவிட்டு ஆஹா ஓஹோ என்று சொல்லும்போதெல்லாம், எனக்கு மண்டை காய்கிறது. ”உனக்கு இது புரியாது மச்சி” அவன் சொல்லும்பொதெல்லாம் எனக்கு வெறுப்பேறும்.

சரிப்பா நீங்கதான் ஒஸ்த்தி, ஆனா நான் ஒரு மேட்டர் சொல்றேன், அத நீ எப்படி பதிவா போடுறன்னு காமி நான் ஒத்துக்கறேன். எனக்கு புரியலன்னு, என்ன டீலா?

அவன் என்னைப்பார்த்து சிரித்தான், ‘மாட்டினியா’ என்ற தொனி இருந்தது.

சொல்லு உன் மேட்டர, ஒன்னு என்ன ஒம்போது விதத்துல எழுதறேன் பார்..

சரி பார்க்கலாம், இதுதான் என் மேட்டர், ராணின்னு ஒரு பொண்ணு பிள்ளையார் கோவிலுக்குப்போய் சாமி கும்பிட்டுவிட்டு சூரத் தேங்காய் உடைச்சிட்டு குழந்தை பிறக்கனுமேன்னு வேண்டிகிட்டு, திரும்பி வீட்டுக்கு போறா” இப்ப பதிவு எழுது.

--

ஸாகேதஸீம்நி பவதீ மணிபாதரக்ஷே
மாங்கல்ய லாஜநிகரை: அவகீர்யமாணா:
கீர்த்தி ஸ்வயம் வரபதே: பரதஸ்ய காலே
வைவாஹிகீ ஜநநி வஹ்நி சிகேவ ரேஜே

அதாவது பரதன், ராமருடைய பாதுகையை (காலணிகளை) எடுத்துக்கொண்டு அயோத்திக்குள் வரும்போது அங்கிருந்த பெண்கள், புனிதமாய்க் கருதி அதன்மீது, பொரிகளை வாரி இறைத்தனராம், ராமரிடைய பாதுகையின் கீர்த்தியை விளக்க, அது பரதனுடன் வந்ததை கொண்டாடியதாக சொல்லப்பட்டிருக்கிறது. அன்று அந்த பாதுகைக்கு தந்த அந்த அளவுக்காவது இன்று பெண்களுக்கு மரியாதை இருக்கிறதா? மருந்துகள் கை விட்ட நிலையில் ஒரு பெண் ஆறுதலுக்காய் கோவிலில் வேண்டிக்கொண்டால் என்ன தவறு?

அரசமரம் சுற்றி, தோப்புக்கரணம் போட்டு, தரையில் வீழ்ந்து வணங்கி, தேங்காய் உடைத்து, கொழுக்கட்டை செய்து வழிபடும் பெண்களின் வலி வழிபாடாக அதைப்பாருங்கள்.

வேதத்தின் அடிப்படையில் சொல்லுவதை, கேலி பேசி, தற்குறித்தனம் என்று கிண்டலடிக்கும் நாம், அதையே ஒரு ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ, அறிவியல்பூர்வமான ஆராய்ச்சியாக யூ-ட்யூபில் காண்பித்து சைண்டிஃபிக் பெயர் வைக்கும்போது, உடனே கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவிக்கிறோம்.

என்னமோ போடா மேடி..!

--

இப்படித்தான் ஒருமுறை எங்க மாமாவோட பைக்க எடுத்துகிட்டு, கிராமத்துலேர்ந்து, டவுனுக்கு போகச்சொல்ல, ஆத்தங்கரையில, தண்ணி கரை புரண்டு ஓடுதுன்னு, என் நண்பன் சைகையில் சொன்னான்,

சரின்னுட்டு, வேற வழியா போகச்சொல்ல ஒரு பொண்ண பிள்ளையார் கோவிலாண்ட பார்த்தேன், கண்ண மூடி சாமி கும்பிட்டுகிட்டு இருந்திச்சி, கையில ஒரு தேங்கா, இந்த வயசுல இப்படி ஒரு பக்தியான்னு யோசிச்சிகிட்டு இருக்கும்போதே, இடுப்புல குழந்தை பிறக்கறதுக்காக கட்டற தொட்டில் இருந்துச்சு, திடீர்னு படிக்கட்டு வழியா ஒரு பாம்பு கோவிலுக்குள்ள போச்சு, நான் ஐய்யோ தங்கச்சி பாம்புன்னு சவுண்டு விடறதுக்குள்ள, படால்னு தேங்காய தரையில அடிச்ச சவுண்டுல உடனே பாம்பு மெரண்டு, அப்படியே ஒரு பொந்துக்குள்ளார போயிடிச்சு.

நான் வண்டிய நிறுத்திட்டு என்னம்மா ஏன் தேங்காய கீழ போட்டீங்கன்னேன். குழந்தை பிறக்க வேண்டுதலுக்காக பிள்ளையாருக்கு நேர்ந்துக்கிட்டேண்ணே அப்படின்னு சொல்லி அதுபாட்டுக்கு தொட்டில மரத்துல கட்ட போயிடிச்சி.

அவருக்கே இன்னும் கல்யாணம் ஆகலன்னு நினச்சிகிட்டே பைக்க எடுத்துகிட்டு டவுனுக்கு பொறப்பட்டேன்.
--

கூசிய நாவுகளின் ஒலி கேட்டு
நாசியே கையான ஆலிலை சருகுகளின்
போர்வை கொண்டதோர் வடிவ கல்லின்
முன் நின்றிருந்த போகப்பொருள்
யாரையோ நினைத்து சில்லுகளாய்
சிதறவிட்டது
ரொளத்திரத்துண்டுகளை
பார்த்தபடி மவுனம் காத்தது பரம்பொருள்..

--

என்னடா மேக்ஸ் நெத்தில காயம். சரித்து வைக்கப்பட்ட அவன் டி.வி.எஸ் 50 -ல் கால் வைத்தவாறே கேட்டேன்.

கோவில்ல பார்த்தேண்டா,

அவன் தேன பத்தி சொல்கிறான். அடப்பாவி, அவளை இன்னுமா மறக்கவில்லை.

வில்ஸ்ஸா அடிப்பீங்க?
வேண்டாம்னு சொல்லு இப்பவே விட்டுடறேன்.
ச்சீ,, உங்களுக்கு பிடிக்கும்னா, அது எனக்கும் பிடிக்கும், அய்யய்யோ ஏன் அணைச்சிட்டீங்க.?
ஒரே உரையில ரெண்டு கத்தி இருக்கக்கூடாது தேனு.
ஏய் என் பேரு ராணிப்பா.

ஆனால் காலம் தேனை வேறொருவன் புறங்கையில் வழியவிட்டது. மேக்ஸ் எனப்படும் மேகனாதன் அவளை மறந்திருப்பானென்று நினைத்தேன்..

’டிங்’, கோவில் மணி சத்தத்தில் கவனம் கலைந்து, வெள்ளை சுவற்றில் காவி கோடுகள் போட்ட மதில் சுவர் தாண்டி, நிறைய வளையல்களோடு ஒரு கை மட்டும் தெரிந்தது, ஆவலுடன் யாராய் இருக்குமென்று மேக்ஸ்சின் வண்டியில் கால் வைத்து எம்பிப்பார்த்தேன்,

டேய் ராணிடா...

பைத்தியக்காரா, மேக்ஸ் சிரித்தான். பின் மண்டையில் அடித்துக்கொண்டு நானும் சிரித்தேன்.

நல்ல காலம் பொண்ணு அப்படியே அம்மா சாயல், மேக்ஸ் கண்ணைப்பார்த்தேன்,  எதுவும் எனக்குத் தென்படவில்லை.

---

திண்டிவனம் இறங்கி, கரும்பு சாரு குடித்திவிட்டு, கேட்டேன். இங்க குடிசையில் ஒரு ஜுனூன் சித்தர் இருக்காராமே, எப்படி பாட்டி போகனம் , தா அந்த ஆட்டோகாரன் கிட்ட கேளு என்று கேட்ட ஆட்டோகாரர்,

வழி தெரியாது சார், நிறைய பேர் இருக்காங்க, அந்த கோவில்ல கேட்டுக்கோ

கோவிலில் ஒரு பெண் கையில் தேங்காய் வைத்துக்கொண்டு கண் மூடி பிரார்த்தனையில் இருந்தது, இப்படி சிதறடிக்கும் தேங்காய்களால் சட்டினி விலை ஏறிப்போனதை நினைத்துக்கொண்டே, சித்தர் பற்றி கேட்க உள்ளே தேடினேன்.

---

சயின்ஸ்ல தேங்காய் உடைக்கிறதுக்கும், பிள்ளை பெறுவதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. எத்தனை முறை சொன்னாலும் புரியவில்லை. அன்றைக்கு பெரியார் சிலைக்கு முன்பாக ஒரு பெண் தேங்காயை கையில் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தது. என்னடா இங்கயும் கெடா வெட்ட ஆரம்பிச்சுட்டாங்களான்னு கிட்டப்போய் பார்த்தா, எதிர்க்க இருக்கற பிள்ளையார் கோவில்ல பிள்ளை பிறக்கறதுக்காக வேண்டிகிச்சாம்.

எங்க போய் முட்டிக்கிறதுன்னு தெரியல..

கீழ இருக்கற மரம் ஏன் இப்படி படுத்துகினு இருக்குன்னு யாருக்காவது தெரியுமா?
  
ஏன்னா அது புள்ள பெத்துடிச்சி.  அதுனோட புள்ளைய உடைச்சா உங்களுக்கு எப்படிய்யா புள்ள பொறக்கும்?

---

டேய் ஜார்ஜி, நிசம்மாவே பெரிய ஆளுடா நீயி. ஒன்னுமில்லாத மேட்டர எப்படிடா ஊதி பெரிசாக்குற?

இதென்ன பெரிய விஷயம், ரயில் பத்தி ஒரு தத்துவம் சொல்லட்டா?

சொல்லுங் அபீஸர்..

ரயிலே கண்டுபிடிக்கலன்னா என்ன ஆயிருக்கும் சொல்லு??

ஐய்யோ நான் வெறும் பொட்டி தட்டறவண்டா, அவ்வளவு மூளை இல்ல நீயே சொல்லு..
ஹும்ம்ம் இது கூட தெரியாதா தண்டவாளம் எல்லாம் வேஸ்ட்டா போயிருக்கும் மச்சி.


”ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ”


ஆட்டோ வரல்லன்னா, அப்பப்ப அப்பப்படும். (ஒன்லி சிரிப்ஸ் ப்ளீஸ்!) :)))
இதை யாராவது தொடர விருப்பமாயின் தொடரலாம்..:)


விதி முறைகள்: 


01.மேட்டர் மேல சொன்னதுதான், அத எப்படி சொல்றீங்கன்றதுதான் விஷயமே,  
02.உங்க ஸ்டைல்ல கண்டிப்பா இருக்ககூடாது.
03.குறைந்தது மூன்று விதமாக எழுதவேண்டும். 
04.பின்னூட்டம், மற்றும் ஓட்டளிப்பவர்களின் தீர்ப்பே இறுதியானது.:)))


 நான் அழைப்பது பிதற்றல்கள் முகிலன்’


.

29 comments: