பலா பட்டறை: வெண்ணை..(0.02) (ஞான மரம்)

வெண்ணை..(0.02) (ஞான மரம்)ஞானம் கிடைக்குமா? என்று போதி மரம் தேடி ஒரு வனாந்திரத்தினுள்ளே சுற்றி அலைந்தேன். வாழ்ந்து கொண்டிருக்கும் மரங்களை, வளர்ந்து கொண்டிருப்பதாய் மனம் கற்பித்துக்கொண்டிருந்தது.

மரம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதும் சரிதானா? என்ற கேள்வியை புறம் தள்ளி, ஞானம் தரும் அந்த மரத்தைத்தேடி அலையத்தொடங்கினேன்.

சுற்றிக்களைத்த நேரத்தில் ஒரு பெரு மரத்தின் பொங்கிய வேரின் மேல் அமர்ந்து, கற்பனையில் வளர்த்த அந்த போதி மரத்தின் அடையாளங்கள் பொருத்தி இன்னும் என் கண்கள் சுற்றிச் சுழன்று எல்லாப் பச்சையிலும் அந்த போதிப்பச்சையைத் தேடிக்கொண்டிருந்தது.

”என்னப்பா தேடுகிறாய்..?”

யாருமற்ற வனத்தில் என் உயிரியின் குரலே என்னை மிரளச்செய்த நொடிகளை மனனம் செய்யாது..

”யாரது?” என்றேன்.

”நான்தானப்பா, நீ உட்கார்ந்து இளைப்பாறிக்கொண்டிருக்கிறாயே அந்த மரம் என்று நீ அழைக்கும் நானேதான் அழைத்தேன்.”

மரம் பேசுமா? என்ற கேள்வியை போதிமரம் பேசும் என்ற பொதி சுமந்த போதையை உள்ளிருந்து வியந்தவாரே..

”நான் போதி மரம் தேடி ஞானம் பெற வந்தவன். எங்கிருக்கிறதென்று அறியாமல் அலைந்து கொண்டிருக்கிறேன்..”

போதிமரத்தை ஏன் தேடுகிறாய்?, கண்டு என்ன செய்யப்போகிறாய்? என்ற கேள்விகளை எதிர்பார்த்து பதில் தேடிக்கொண்டிருந்தது மனம். ஒருவேளை இதுவே, அதுவாயும் இருக்கலாம் என்று மனத்தை ஆயத்தப்படுத்தத்துவங்கிய நேரம்..

”ஓ போதி மரமா? அதனை அடைவது சுலபமே. ஆனால் அதற்கு முன் நான் சொல்லுவதை நீ செய்தால் அதனையடையும் வழி சொல்வேன்.” என்ற அந்த மரத்தைப்பார்த்து..

”நிச்சயம் செய்கிறேன்..” என்றேன்.

”சரி இந்த வனத்தினுள்ளே ஒரு கிராமம் உள்ளதை நீ அறிவாய் அல்லவா?”

”ஆம். ஆனால் அந்த மக்கள் ஒரு போதும் போதி மரத்தைப்பற்றி பேசுவதுமில்லை அது குறித்தான கேள்விகளையும் செவிமெடுப்பதில்லை ”என்றேன்.

”சரி போகட்டும். போதி மரம் பற்றியும் அதன் மூலம் ஞானம் பெறுவது பற்றியும் அறிய முதலில் எதிரில் இருக்கும் அந்த புதரின் அடியில் போய் அமர்ந்து கொள், சிறிது நேரம் கழித்து திரும்பி வா”

”சரி” என்றேன். இது ஏதோ பரிட்சையாக எனக்குப் பட்டது. என்ன ஆனாலும் சரி அடைந்தே தீர வேண்டிய ஞானம் என்னை புதரின் அடியில் போய் உட்கார வைத்தது.

தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்துவது. எண்ணங்கள் ஏதுமற்று இருப்பது, மனதை மூடினேன், புறமும் மூடினேன், ஒலிகள் எல்லாம் மக்கி, உள்ளே தெரியும் வண்ண ஜாலங்களும் ஒதுக்கி அதன் பின்னே வரும் வெறுமை என்னும் கருமையை அகற்ற இயலாது அப்படியே அமிழ்ந்து நொடிகளில் யுகங்கள் கடப்பதறியாது வெறுமனே அமர்ந்துவிட்டு மீண்டும் மரமருகில் சென்றேன்.

”என்ன நடந்தது?”

”எல்லாம் கடந்த பின்னும் கருமை என்னும் நிறமும் அகற்றி உள்ளே போக முடியாத நிலை சொன்னேன், வெறுமை என்பதும் என்ன என்ற அளவுகளும் என்னின் அடுத்த நிலையை கேலி செய்வதாய் உணர்ந்த நொடியில்...”

மரம் சொன்னது.. ”சரி போகட்டும் அந்த பாதை சரிவில் ஒரு மரம் இருக்கிறது கண்டாயா? ”

”ஆமாம்”

”அதன் அருகில் சரிவின் விளிம்பில் நில். என்ன தோன்றியது என்று வந்து சொல். இதற்கு மேல் கேள்விகளில்லை, தோன்றியது சொன்னபின் ஞான மர ரகசியம் சொல்லப்படும்..”

பரவசமான மன நிலையில் சரிவினை நோக்கி ஓடினேன். விளிம்பில் மரத்தின் அடியில் நின்றேன். வெறுமனே மரத்தைப்பார்த்துகொண்டிருந்தேன். பின் மீண்டும் என்னிடம் பேசிய மரத்தின் அருகில் சென்றேன்

”அந்த மரத்தின் அடியில் நின்றபோது என்ன தோன்றியது?”

”ஒன்றும் தோன்றவில்லை. வெறுமனே நின்றேன் இதன் பிறகு போதி மரம் காணக்கிடைக்கும் என்ற எண்ணமே மேலோங்கி நின்றது” என்றேன்.

”நல்லது நீ போய்வரலாம் உனக்கு போதி மரம் கிடைக்காது.”

விக்கித்து நின்ற என்னைப்பார்த்து ”விளக்கம் வேண்டுமா” என்றது..

தலையாட்டிய என்னிடம் ”சரி கேள்”

முதலில் நீ சென்ற புதரில் ஒரு தாய் நேற்று அமர்ந்து தன் குழந்தைக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள். சரிவிலுள்ள மரத்தில் அதற்கும் முன் ஒருவன் மலஜலம் கழித்தான். யாரோ ஒருவர் மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் கிடைத்ததால் அதன் கீழ் அமர்ந்தால் உனக்கும் ஞானம் கிடைக்குமென்று வந்த நீ சிறிது சிந்தித்துப்பார்..

மரத்தினடியில் அமர்ந்ததால் ஞானம் கிடைத்திருக்குமாயின் அந்த புதரினடியில் அமர்ந்தபோது உன் மார்பில் பால் சுரந்திருக்க வேண்டும், சரிவின் மரத்தினடியில் கழிவுகள் வெளிப்பட்டிருக்கவேண்டுமல்லவா??

எனில் போதிமரம் கிடைத்தால் மட்டும் அடியில் அமர்ந்தால் ஞானம் கிடைத்து விடுமா என்ன??

மண்ணின்றி வேர்களின்றி நிலையில்லாது நடக்கும் நானே ஒரு மரம்தான் என்ற எண்ணம் இப்போது உள் மண்டைக்குள் ஒலிக்க ஆரம்பித்திருந்தது..

ஞானம்?? 
.

34 comments: