பலா பட்டறை: முட்டாள்.. (The Idiot) - Akira Kurosawa..

முட்டாள்.. (The Idiot) - Akira Kurosawa..


எல்லோருக்கும் மரணம் வருமென்று அறிந்தும், அடுத்தவருக்கு நிகழும்போது மட்டும், துக்கம் கொண்டு, அழுகையுடன், நமக்கும் வருமென்ற யோசனைகளின்றி, கூடி நின்று அழும் மக்களுடன் ஒருவராய், இறந்தவரின் சந்தோஷ நினைவுகளை, துக்கத்துடன் அசை போட்டு, மீண்டும் ’வாழ்வு’ என்றழைக்கும் சூழ்ச்சிகளில் ’பின்னப்பட்ட’ இன்ப, துன்ப போதைகளில் மூழ்கிப்போவது பொதுவில் எல்லோருக்கும் வாய்ப்பதுதான்.

வெட்ட வெளியில், சூரிய வெளிச்சத்தில் வரிசையாய் மரண தண்டனைக்காய் அமர வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொருவருக்காய் துப்பாக்கிக் குண்டில் வாழ்வு முடித்து வைக்கப்படுகிறது. மரணம் கண்ணெதிரே காணக்கிடைக்கிறது வரிசையில் வந்துகொண்டிருக்கிறது.

இதுவரை வாழ்வில், துக்கம், சந்தோஷம், துரோகம், அன்பு, காமம், காதல், கருணை என எல்லாம் கண்ட அவனுக்கு, இதோ இன்னும் சில நிமிடத்தில், வரிசையில் மரணம் நிச்சயம் என்ற நிகழ்வுகளின் நிஜத்தில் மரணம் சம்பவிக்கப்போவதற்கு முன்பான மன நிலை என்ன சொல்லும்?

அது வாழ்வின் முழுமையை புரியவைக்கிறது. இது வரை வாழ்ந்த வாழ்வின் நீள அகலங்கள் கண்களுக்குள் வருகிறது. இறக்கப்போவது நிச்சயம் எனும்போது வாழ்ந்தது நிறைவுதானா? என்ற கேள்வி வருகிறது. தவறுகளுக்கான மன்னிப்புகள் எழுகிறது. இதுவரை வரிசையில் அவனுக்கு முன்பாக இருந்தவர்கள் சுடப்பட்டு பிரேதமாய் கிடக்க, அவன் முறை வரும்போது, வாழ்வுக்கும் சாவுக்குமான சங்கிலி பிணைக்கும் நேரத்தில், உத்தரவு வருகிறது. மரண தண்டனை ரத்து செய்யப்படுகிறது. ஆஹா தப்பித்தோம், சாவினின்று கடைசி நொடியில் விடுதலை, இனி என்ன? கொண்டாட்டமா? குடியா? போகமா? மரணம் நிறுத்தச்சொன்ன உத்தரவு சில நொடிகள் தாமதமாகி இருந்தாலும், மண்டை பிளந்து சரிந்து கிடக்கும் அந்த சவங்களில் அவனும் ஒருவனாகி இருக்கக்கூடும். இப்போது சாவினின்று விடுதலை என்ற எண்ணம் அவனுக்கு வாழ்வின் மீதான மதிப்பை அதிகமாக்குகிறது. நினைவுகளின்றி போதனைகளின்றி குழந்தையாய் பிறந்து மரணத்தை கண்டவன் இப்போது, விவரம் தெரிந்து மீண்டும் பிறந்ததாய் உணர்கிறான், இன்னொரு வாழ்வு இப்போது கிடைத்தது. ஒவ்வொரு நொடியும் அதனை ரசிக்க, அர்த்தமுள்ள அதை மதிக்க இயல்பாகவே அவன் மனம் மாறுதலடைகிறது.

விடுதலையாகி வெளி உலகிற்கு வரும் அவனை, மரணம் கண்ணெதிரே தினம்தோறும் நிகழ்ந்தும் தனக்கு வராது என்ற நம்பிக்கையில், சூழ்ச்சிகளை, துரோகங்களை, பகட்டுகளை, நடிப்புகளை, தேனாய் குடித்து அதன் இனிப்புகளின் மயக்கத்தில் வாழ்வு நடத்தும் மக்கள் என்னவாய் எதிர்கொள்வார்கள்?

அவன் வந்து சேரும் அந்த நகரின் பேரழகியின் படத்தைப் பார்க்கிறான். அருகிலுள்ளவனுக்கு அவளின் அழகு முகம் கிளர்ச்சியை உண்டாக்குகிறது, அவனுக்கோ அவள் கண்கள் மரணத்தை நோக்கியவையாக அல்லது அனுபவிப்பதாய் சொல்கிறது.

வாழ்வது என்பது உயிரோடிருத்தல் மட்டும்தானா? வெறுமனே உயிரோடிருத்தல் மட்டுமே வாழ்வு என்பதாய் கொள்ள முடியுமா? உணர்வுகள் இறந்து வாழும் ஒருவரை எப்படி வாழ்வதாய்க் கொள்ள முடியும்? தன் தேவைகளுக்காய், ஆசைகளுக்காய், இரவுகளின், தனிமையின், காமத்தின் வேட்டைகளுக்கு, வேட்க்கைகளுக்கு இரையாக்கப்பட்டு தினம் கொல்லப்படும் ஒருவரின் கண்கள் இறப்பின் வலிகளை தாங்கி இருப்பதில் வியப்பென்ன? அதனை நேரில் கண்ட நம் நாயகனால் அவ்வாறு வாழும் ஒரு அழகியின் முக அழகும் கவர்ச்சியும் எப்படி கவர முடியும்?

இப்படி வாழ்வினை அர்த்தமுள்ளதாய் வாழ நினைக்கும் ஒருவன், அவைகள் மறந்த கூட்டத்தில் என்னவாய் காணப்படுகிறான்? அவனை விரும்பும் பெண்கள், வெறுக்கும் மனிதர்கள், கேலி பேசும் கூட்டம், ஒரு கொலை என பயணம் செய்யும் படத்தில் மேலே சொன்னதுதான் கதையின் சாராம்சமா? வேறு என்ன அந்தப் படம் சொல்ல வருகிறது?

கடினமாய் சிதைந்து போன ஒரு பாறையை செதுக்கும் பணியே வாழ்வென்றால், அது சிலையாய் முழுமை பெற்று, பூரணத்துவம் அடைவதுதான் மரணமா? எனில் அதனை துக்கமாய்ப் பார்ப்பது ஏன்? செதுக்கப்படும் ஒவ்வொரு நொடியும் கொண்டாடப்பட வேண்டாமா?

அகிரா குரசாவாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிழக்கு பதிப்பக அலுவலகத்தின் மாடியில் நேற்று திரையிடப்பட்ட 'THE IDIOT' படத்தினை கண்டதும் வந்த எண்ணங்களே மேலுள்ளது. ஆனால் படம் இதைத்தான் சொல்கிறதா? இதன் உண்மையான களம் என்ன? திரு. சிவராமனின் சிதைவுகள் பக்கத்தில் வெளிவரும் என்று நம்புகிறேன். 1951 ல் எடுக்கப்பட்ட இந்த கருப்பு வெள்ளைப் படத்தின் காட்சி அமைப்புகள், படத்தொகுப்பு, இசை, பிரமிக்க வைக்கிறது. தஸ்தாவெஸ்கியின் உணர்ச்சிகள் கொப்பளிக்கும் எழுத்துக்களை அப்படியே திரை வடிவமாக்கி உணரச்செய்யும் விதம், ஏன் இன்னும் அகிரா குரசாவாவை கொண்டாடுகிறார்கள்? என்று புரிந்தது.    

படம் முடிந்த பின் திரு.ராஜசுந்தரராஜன் அவர்களின் விவரிப்பு அற்புதம். அதனைக் கேட்ட பிறகு இந்தப் படத்தைப் பற்றி நான் எழுத முடியுமா? என்ற எண்ணம் தோன்றியது உண்மை. ஆனாலும் படம் தந்த பாதிப்பை பதிவு செய்து, இறக்கி வைக்கவே இதனை எழுதினேன்.

நன்றி!

26 comments: