பலா பட்டறை: வெண்ணை.. (0.04) மனித விலங்கின் சூத்திரங்கள்..

வெண்ணை.. (0.04) மனித விலங்கின் சூத்திரங்கள்..வ்வொரு மிருகத்துக்கும், பறவைக்கும் அதன் ஒலிகளே தொடர்புகொள்ளும் கருவியாக இருக்கிறது. கிடைக்கும் சுள்ளிகளைக்கொண்டு கூடு கட்டியோ, குகைகளில் பதுங்கியோ, தண்ணீரிலோ அவையும் வாழ்க்கை நகர்த்துகிறது.

என்ன பெரிய தேவை? உணவு, தண்ணீர், அச்சமில்லாது உறங்க ஓரிடம். நிம்மதியாய் கலவி, பின் சந்ததி வளர்க்க வந்த வாரிசுகளுக்கு சூழலின் அபாயங்கள் புரியவைக்கவும், உணவுக்கான போராட்ட முறைகள் தெரிய வைக்கவும் சில பயிற்சிகள். குட்டிகள் வளரும் வரை காபந்து. அதன் பின் அதனதன் வழி, அதனதன் வாழ்வு, அதனதன் போராட்டம்.

இதன் நடுவில்தான் ஆறறிவு கிளை பிரிந்து, அபத்தங்களைக் கட்டி அழத்தொடங்கியதோ?

குழந்தை பெற்று, பாலூட்டி சீராட்டி, வித்தைகள் கற்றுத்தந்து, அன்பினாலே விலங்கிட்டு, அதனூடே வாழ்வு நகர்த்தி, சாமர்த்தியங்கள் முதலீட்டில் ஒரு தனி உயிரின் பரிபூரண வாழ்வு சிதைக்கப்படுகிறதோ?

ஒரு விலங்கிற்கான வாழ்வு முறை சுதந்திரம் மனிதனுகில்லாமல் சார்புடையவனாக, எதையாவது பின்பற்றுபவனாக, பின்பற்றச்சொல்லுபவனாக ஏன் மாறிப்போனான்?

அதிகாரங்கள் யார் தந்தது? எல்லா தர்க்கங்களிலும் தன்னையே முன்னிருத்தி தனக்கானதே இவ்வுலகென்றும், மற்றெல்லா உயிரினமும் தன்னாலே பிழைக்கிறதென்றுமான தத்துவம் உயிர்பெற்றதெப்போது? வெறும் ஒலிகளை ஒழுங்கு படுத்தி வடிவங்கள் தந்த ஆணவமா?

ஒரு பறவைக்கோ, விலங்கினத்திற்கோ தெரிந்த குழந்தை வளர்ப்பும், அவை கற்றுத்தரும் வாழ்வு எதிர்நோக்கும் பாடங்கள் அளவுக்கு நாம் அறிந்து வைத்திருக்கிறோமா? அவைகள் அளவுக்கு சுய புத்தி உண்டா?

கூடலின் சுகம் மென்று, வலியுடன் குழந்தை ஈன்று, அன்புடன் அரவணைத்து, தனியே வாழ்வு சுவைத்துக்கொள் என்ற மற்ற உயிரினிங்களின் சுதந்திரத்தை மட்டும் எப்படி ஆறறிவு தவற விட்டது? எங்கே பிசகு? அதி மிகுந்த அன்பின் போதையா? சுயநலத்தின் சூழ்ச்சியா? வாழ்வுமுறை பயமா? பயமே அழிவிற்கான மூலதனமா? ஆளத்துடிக்கும் தூண்டுதலா?

சரி, தவறு என்ற நிகழ்வுகளின் தீர்ப்புகளில் உண்மையிலேயே அது சரிதான் அல்லது தவறுதான் என்று எதை முன் வைத்து முடிவுக்கு வருகிறோம்?      

எதுவரை போகும்? மனிதனைத்தவிர இறப்பினைப்பற்றி பயங்களும், யோசனைகளுமில்லாத உயிரினத்தில் மனித இனம் போகும் பயணம் எவ்வளவு தூரம் இன்னும் மிச்சமிருக்கிறது? மரணம் பற்றி பயம் கொள்ள வைப்பது எது?

--

பெயரில்லா கவிதை..


நிலவில்லாத இரவொன்றில்
காற்றினிலாடும்
மெழுகுவர்த்திச்சுடர்

மின் வெளிச்சம்
ஜடமாய்க் காட்டிய
பொருட்களுக்கும்
உயிர் தந்துவிடுகிறது...


.

35 comments: