பரபரப்பு செய்தி!
பிதற்றல்கள் முகிலன் ஒன்பதே மாதத்தில் 500 பதிவினை (இடுகைகளை) எழுதிமுடித்ததற்காய் வாழ்த்து சொல்லி இந்த கதையின் முதல் பாகத்தை உருவான விதத்தை படித்து விட்டு மேற்கொண்டு தொடரவும்.*
-----
"அந்த காலத்துல மாஹாத்மா 'வெள்ளையனே வெளியேறுன்னு' ஒரு வார்த்த சொன்னதுக்காக வெள்ளக்காரன்கிட்ட மண்டையில அடிவாங்கி காது கேக்காம போனமாதிரியே கண்ணும் தெரியாம போயிருக்கலாம்."
ஏன் உசிர்மட்டும் போகக்கூடாதாக்கும். ஸ்வாதி நினைத்துக்கொண்டாள். சப்தம் போட்டுக்கேட்டாலும் ஒன்றும் பிரயொஜனமில்லை. தாத்தாவுக்கு காது கேட்காது. இவரைப்போல தியாகிகள் மட்டுமென்று இல்லை, எல்லா பெரிசுகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் குழந்தைகள் போலவே. சொன்னதையே சொல்லிக்கொண்டு. காதில் வாங்காது ஸ்வாதி மெதுவாய் தாத்தாவை திரும்பப் படுக்க வைத்து முதுகை பரிசோதித்தாள். வெள்ளை நிறத்தில் படுத்துக்கொண்டே இருப்பதின் காரணமாய் ஒருவித வீச்சத்துடன் மூன்று புண்கள் பெரிய பள்ளங்களைப் போல ஆழமாய் இருந்தது. கட்டிலுக்கு மேலே மாட்டப்பட்டிருந்த அவரின் பழைய இளமைக்கால படம் அதனையொட்டியவாறே நேர் கீழே ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி. தாத்தாவின் புண்களுக்கு மருந்திடும்போதெல்லாம் அவள் தன் முகத்தையும் தாத்தாவின் புகைப் படத்தையும் பார்ப்பது வழக்கமாகிவிட்டிருந்தது.
ஒரு வேளை தானும் இப்படித்தான் பேரன், பேத்திகளெடுத்து முதுகில் சீழ் வந்து, வீச்சமடித்து அவஸ்த்தைப்படுவேனோ. இப்போது போடும் ஸ்னோவும், பவுடரும், எடுப்பான உடல்வாகும், இடுப்புவரை அடர்த்தியாய் கைவலிக்கப்பின்னும் தலைமுடியும், திருத்தமான முகமும், வெடிப்புக்கீறல்களில்லா பாதங்களும், இன்னும் ஷானுக்காக மறைத்து வைத்திருக்கும் என் அழகெல்லாம் இப்படித்தானாகுமோ?
நினைத்தவுடனே அனிச்சையாய் தலையாட்டிக்கொண்டாள். சேச்சே.. ஆரோக்கியமாய் இருக்கும்போதே போய்ச்சேர்ந்துவிடவேண்டும். என்னால் ஒருவருக்கும் சிரமம் வேண்டாம். மூத்திரம் போக அடுத்தவர் துணை வேண்டாமல் மிருகங்களே மடியும்போது எனக்கென்ன பிறர் அவஸ்தையில் ஒரு வாழ்வு நீட்டிப்பு?
"மஹாத்மாவ சுட்டப்பவே என் மூச்சும் நிற்காமப் போச்சே.." முருகேசன் தாத்தாவின் தினப்புலம்பல் ஆரம்பமாகிவிட்டது. இப்போதெல்லாம் ஸ்வாதி தனியாய் தவிக்க விட்டு தாத்தா போய் போய்விடுவாறோ என்ற கவலையை மறந்திருந்தாள். யாரை வெளியேற்ற மண்டையில் அடிவாங்கி இன்னும் புலம்பிக்கொண்டிருக்கிறாரோ அதே வெள்ளைக்காரனின் 'கால் சென்டர்’ கம்பெனியில் நல்ல சம்பளத்தில் தான் வேலை செய்து தாத்தாவைக் காப்பாற்றுவதை அவர் எப்படி எடுத்துக்கொள்வாரோ என்று நினைக்கும்போது ஸ்வாதிக்கு மெல்லிய சிரிப்பு வரும். உலக மயமாக்கல், அரசாங்க கொள்கைகள், பொருளாதாரம் என்றெல்லாம் சொன்னாலும் நவீன அடிமைத்தனம் மீண்டும் உணவு ருசியாய், ஆடைகளாய், மின்சாதனங்களாய், மருந்துகளாய், குளிர்பானங்களாய் முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்துக்கொண்ட ஆக்டபஸ் சூழ்ச்சியை தாத்தாவால் நிச்சயம் ஜீரணிக்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.
மெதுவாய் தாத்தாவின் முதுகில் மருந்துகள் தடவி, நிற்க வைத்து, விரிப்புகள் மாற்றி படுக்க வைத்தாள். மணி பார்த்தாள் 8.05 கிளம்ப வேண்டியதுதான். ரோஸி இன்னும் காணுமே. சம்பளத்திற்கு வரும் தாதி என்றாலாவது கடிந்துகொள்ளலாம். இவள் சேவை செய்பவள் இன்றைக்கும் தாமதமானால் ஷான் முகம் தூக்குவான். ஷான் அவன் பெயரை மெல்ல உச்சரித்தாள் சண்முகம் என்ற பெயருள்ள பணியிலுள்ள சக நண்பருக்கு அவள் கால் சென்டர் சூட்டிய நாமகரணம் அது. அட நல்லாருக்கே என்று சண்முகம் என்ற தன் மேல் மிகப் பிரியமாய் இருக்கும் காதலனுக்கும் அதே பெயர் வைத்துவிட்டாள் ஸ்வாதி.
“சாரி அக்கா” ரோஸியின் குரலில் கவனம் கலைந்து, எல்லாம் மறந்து, ”பரவாயில்ல ரோஸி தாத்தாவுக்கு..என்று ஸ்வாதி ஆரம்பிக்கும்போதே அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் அக்கா நீங்க வேலைக்கு கிளம்புங்க.” என்றாள் ரோஸி.
பஸ் பிடித்து தனது அலுவலகத்திலிருந்து ஒரு ஸ்டாப்பிங் முன்பாகவே இறங்கினாள் டாக்டரைப் பார்த்துவிட்டு ஷானை பார்க்க வேண்டும். மெதுவாய் ஏதோ யோசனையுடன் நடக்கத்துவங்கினாள்.
---
”ஏம்பா இந்த சர்வர் வேலைய விட்டா வேற வேலை கிடைக்காதா? ”அம்மா வழக்கமான கேள்வியை ஆரம்பித்தாள். எல்லா தாய்மாருக்கும் இருக்கும் அதே மகன் கனவுகள் அவளுக்கும் இருந்தது. ஒரு மருமகள் கிடைத்தால் சீரியலில் வருவதுபோல அவளைச் சீண்டும் தின பொழுதுகளின் தீனிகளுக்காய் அலைந்து கொண்டிருந்தாள். ஒரே மகனின் ஹோட்டல் வேலை வெளியில் கவுரவமாய் சொல்ல முடியாத அளவுக்கு அவள் தாயாரித்த அவளின் சமூக அளவுகோல் தடுத்துக்கொண்டிருந்தது.
”ஏம்மா சர்வர் வேலைன்னா அப்படி என்ன கொறைச்சல். சாப்பாடும் போட்டு, டிப்ஸோட, கை நிறைய சம்பளமும் கிடைக்குது. கொஞ்ச நாள்ல தொழில் கத்துகிட்டேன்னா நானும் ஒரு ஹோட்டல் வெச்சி முதளாளி ஆகிடுவேன் பாரு.”
”அதுக்கில்லடா யார் சர்வருக்கெல்லாம் பொண்ணு குடுப்பாங்க?” சண்முகம் என்ற ஷான் அவன் அம்மாவை மெதுவாய் திரும்பிப் பார்த்தான். அந்த கவலை உனக்கு வேண்டாம்மா நானே பார்த்துப்பேன் என்று சொல்ல வந்தவன் வெறுமனே சிரித்துவிட்டு ”நான் கிளம்பரேம்மா வேலைக்கு நேரமாச்சு” என்று சொல்லிவிட்டு பஸ் பிடிக்க நடந்தான். இன்றைக்கு ஸ்வாதி என்ன ட்ரெஸ் போட்டிருப்பாள் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஒரு சிரிப்பைக் கொடுத்திருந்தது. இன்றைக்கு அவளிடம் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லப்போவதாக இருக்கிறான். அதைக்கேட்டு அவள் என்ன நினைப்பாளோ என்ற என்ற அச்சமும் அவன் மனத்தில் எழுந்தது. அவன் பஸ் வரும்வரையில் இதே சிந்தனை ஈக்கள் அவன் கவனத்தை மொய்த்துக்கொண்டிருந்தது.
---
ஸ்வாதி டாக்டருகைய கிளினிக் அடைந்தபோது லேசாக தூரல் ஆரம்பித்திருந்தது. எப்போதுமே குடை கொண்டுவர ஸ்வாதி விருப்பப்படுவதில்லை. மழையோ வெயிலோ இரண்டிலும் முழுதாய் நனையப்பிடிக்கும். 15 நிமிடங்கள் ஆயிற்று அவள் டாக்டரை சந்திக்க.
டாக்டர் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார் ”சாரி ஸ்வாதி, உங்களுக்கு கர்ப்ப பையில சில பிரச்சனைகள் இருக்கு. ஹார்மொன் ப்ராப்ளத்துனாலன்னு இருந்தா மருந்துங்க கொடுத்து சரி பண்ணிடலாம். ஆனா..”
டாக்டர் சொன்னதைக் கேட்டு சிரிப்பதா, அழுவதா, பிரமிப்பதா என்ற எந்த உணர்ச்சியைக் காட்டுவதெனெத்தெரியாது ஸ்வாதி அமர்ந்திருந்தாள். பெரும்பாலான நேரங்கள் இப்படித்தான் அமைந்துவிடுகின்றன. அதிகமாய் டிவி அல்லது சினிமா பார்ப்பவர்களால் சட்டென உணர்ச்சிகளை முகங்களில் கொண்டுவர முடிகிறது. நான் ஏன் சராசரி பெண்களைப்போல இல்லை.
”வேற வழியே இல்லையா டாக்டர்.” டாக்டர் ஸ்வாதியின் கையைப் பற்றி ”சின்ன வயசுல அதுவும் கல்யாணமாகாத பெண்ணுக்கு இது கொஞ்சம் கஷ்டமானதுதான், ஆனா உன்னைப் புரிஞ்சவர் ஒருத்தர் உனக்குக் கிடைக்கும்போது, இது ஒரு பெரிய விஷயமா இருக்காதும்மா.” மெதுவாய் பேசினார். அவளுக்கு ஏனோ தன் அம்மாவின் நினைவு வந்தது.
இன்னாரெனத்தெரியும்போது தொடுதல்கள் பல அர்த்தங்களைத் தருகின்றன. வேறேதேனும் சந்தர்பத்தில் யாரேனும் இவ்வாறு கை தொட்டு பேசி இருந்தால் அந்நிகழ்வு சாதாரணமான ஒன்றாய் இருந்திருக்ககூடும். ஆனால் இப்போது அந்த தொடுதல் அவளுக்கு மிகத் தேவையானதும் ஆறுதலமாயுமிருந்தது.
தாய்மையே அனுபவித்தறியாத ஸ்வாதிக்கு தாயாக முடியாத நிலையை நினைத்து தன் மனசு அலட்டிக்கொள்ளாததை வியப்பாகவே பார்த்தாள். இறக்கப்போகும் தாத்தாவைப் பார்த்து வாழ்வின் நிலையாமை பழகிவிட்டதா என்று உள்ளுக்குள் கேட்டுக்கொண்டாள். சரி இதை ஷான் எப்படி ஏற்றுக்கொள்வானோ என்ற கேள்வி மட்டுமே அவளிடம் இருந்தது. உடல் பசி முடிந்ததும் வாரிசு பசி என்ற ஒன்று வருமே? என்னதான் உருகி உருகி காதலித்தாலும் இல்ல எங்கம்மா சொல்றாங்க என்று ஆரம்பிப்பானோ என்ற உறுத்தல் உள்ளே கிளை விடத்தொடங்கி இருந்தது.
”ஸ்வாதி” திடுக்கிட்டுத்திரும்பினால் ஷான் நின்றுகொண்டிருந்தான். வலது கையின் நான்கு விரல்களை காட்டிக்கொண்டிருந்தவனை என்ன என்று இரு புருவங்கள் நெறித்து ஸ்வாதி சைகையில் கேட்டாள். ”நாலு முறை உன்னக் கூப்பிட்டும் அப்படி என்ன இளவரசி யோசனை?”
”ஓ காட், சாரி ஷான் கவனிக்கல. காஃபி?” என்று கேட்டவளுக்கு ”ரைட்டோ” என்றவன் உள்ளுக்குள் தடுமாறிக்கொண்டிருந்தான். எப்படிச் சொல்வது?
---
அவளுக்காக அந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தான் அவன். இது மூன்றாவது நாள் அவள் இந்த பஸ்ஸ்டாப்புக்கு வருவதை நிறுத்தி. காரணம்? மூன்று நாட்களுக்கு முன் நடந்த அந்தச் சம்பவம். அதை நினைத்தால் அவனுக்கு அவன் மீதே கோபம் கோபமாக வந்தது.
“ஹாய் ஸ்வாதி”
“ஷான், எத்தன தடவ உன்கிட்ட சொல்றது. என்னை ஸ்வானு கூப்புடுனு?”
“எங்கப்பாம்மா எனக்கு அழகா சண்முகம்னு பேரு வச்சிருக்காங்க. நீ என்னடான்னா அத ஷான்னு ஸ்டைலா கூப்புடுற. இந்த கால் செண்டர்ல வேலைக்குச் சேந்ததுல இருந்து உன் போக்கே சரியில்ல”
“அமெரிக்கன்ஸ் எல்லாம் அப்பிடித்தான் ஷான். பேரைச் சுருக்கிக் கூப்புடுவாங்க. நாமும் அப்பிடிக் கூப்புடலாமே?”
“அது இருக்கட்டும். நான் உங்கிட்ட ஒன்னு கேக்கனும் ஸ்வாதி.. சாரி ஸ்வா”
“கேளு ஷான்” என்று இவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள். இவன் அதைக் கேட்டிருந்திருக்கக்கூடாது. கேட்டு விட்டான்.
இப்போது மூன்று நாட்களாக இவனைப் பார்ப்பதைத் தவிர்க்கிறாள். செல்லில் கூப்பிட்டாலும் எடுப்பதேயில்லை.
தூரத்தில் கடலை விற்கும் வண்டி மணியடித்துக் கொண்டே போனது. சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் பேட்டுகளோடு இன்று ஆடப் போகும் போட்டிக்கு ஸ்ட்ராட்டஜி டிஸ்கஷன் செய்து கொண்டிருந்தனர். காய்கறி வாங்கிக் கொண்டு செல்லும் மாமிகள் சலசலவென பேசிக்கொண்டே செனறனர். இவை எதுவும் அவனைப் பாதிக்கவில்லை. ஸ்வா ஸ்வா ஸ்வா. அவன் சுவாசம் முழுவதும் அவள் மட்டுமே நிரம்பியிருந்தாள்.
சட்டென நினைவுக்கு வந்தவனாகக் கலைந்தான். கையில் கட்டியிருந்த வாட்சில் மணி பார்த்தான். ட்யூட்டிக்கு செல்ல நேரமாகிவிட்டது. திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
அவன் வேலை செய்யும் இடம் வந்ததும் ஒரு நொடி நின்று நிமிர்ந்து பார்த்தான். “ஹோட்டல் சரவணபவன்” என்ற பலகையைப் பார்த்து ஒரு பெருமூச்சை வெளியிட்டு விட்டு உள்ளே நுழைந்தான்.
01.திகில் தொடரும்...!
02.சிறப்பான வகையில் எழுதியவர் யாரெனத்தீர்மானிப்பது உங்கள் பொறுப்பு.
03.மூன்று பேரில் சிறப்பாக எழுதியவரைத் தேர்ந்தெடுப்பவர்களில் 3 பேருக்கு பாரீஸ்/பர்மா பஜார் இன்ப சுற்றுலா பரிசு.*
*condition apply:)
.
15 comments:
“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது!”
உங்க வீட்டுப் பக்கத்துலே ஏதாவது சுனை இருக்குதுங்களா? கற்பனை இவ்வளவு சீக்கிரமா ஊற்றெடுத்துப் பெருகுதே! :-)
இப்பதாங்க அங்க படிச்சிட்டு வரேன் உடனே வா சூப்பர் .
இவ்வளவு சீக்கரமாவா?.... அதுக்குள்ள எழுதிட்டீங்க..
ஸ்வாதிய சுத்தி பிண்ணின குடும்பச்சூழல் நல்லாருக்கு... நல்லா யதார்த்தமா எழுதியிருக்கீங்க...
//அதிகமாய் டிவி அல்லது சினிமா பார்ப்பவர்களால் சட்டென உணர்ச்சிகளை முகங்களில் கொண்டுவர முடிகிறது•//
இது உண்மையாகவும் இருக்கலாம்....
சரி அந்த ஷான் என்னதான் கேட்டான்.. யாராவது சொல்லுங்களேன்....
நல்லா இருக்கு இந்த தொடர்(கதை) பதிவு.
//உலக மயமாக்கல், அரசாங்க கொள்கைகள், பொருளாதாரம் என்றெல்லாம் சொன்னாலும் நவீன அடிமைத்தனம் மீண்டும் உணவு ருசியாய், ஆடைகளாய், மின்சாதனங்களாய், மருந்துகளாய், குளிர்பானங்களாய் முழு வாழ்க்கையையும் ஆக்கிரமித்துக்கொண்ட ஆக்டபஸ் சூழ்ச்சியை தாத்தாவால் நிச்சயம் ஜீரணிக்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது.
//
அருமையான வரிகள். சட்டென்று அரசாங்கக்கொள்ளைகள் என்று படித்துவிட்டேன்.
அருமை
அடுத்த அதிரடி துவங்கியாச்சா ...
முத துண்டு யார்ன்னா போட்டுட்டாங்களா ...
--------------------
நல்லா கொண்டு போயிருக்கீங்க நண்பரே
02.சிறப்பான வகையில் எழுதியவர் யாரெனத்தீர்மானிப்பது உங்கள் பொறுப்பு.
...... சிறந்த எழுத்து நடை. சிறந்த கதை. சிறந்த இடுகை. சிறந்த பதிவர். சிறந்த தேர்வு. சிறந்த கமென்ட். :-)
Congratulations!
ஷங்கர் கதை தொடருமா ?ஆசையா வாசிச்சிடே வந்தா டொக் ன்னு அறுந்துபோச்சு !
###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி
http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################
ook..rightu.:)கேபிள் சஙகர்
Super.
ஏங்ணா...என்னமோ உண்மையான பாரீஸுக்கும் பர்மாவுக்கும் அனுப்பற மாதிரியே கெத்தா எழுதியிருக்கீங்க? அதுக்கு பேரு இன்ப சுற்றுலா வேறயா?
Post a Comment