பலா பட்டறை: கூடு..

கூடு..ஒருவழியாய் வீடு கட்டி 2-ம் தேதி குடி வந்தாயிற்று. கிராமம் சார்ந்த வாழ்வு நன்றாகத்தான் இருக்கிறது. இரவில் நிசப்தமாக குழந்தைகளுக்கு நட்சத்திரங்களைக் காண்பித்து.. அங்க போகறதுக்கு எவ்ளோ கிலோமீட்டர்ப்பா? என்று கேட்ட மகனிடம் எனக்குத் தெரிந்த லைட் இயர் கணக்கை சொல்லி புரியவைக்க முயன்றேன்.

வயல்களில் நாற்று நடுவதையும், பக்கத்து வீட்டு ஆட்டுகுட்டிகளையும், கொத்திக் கிளறும் கோழிகளையும் பார்த்து குதூகளிக்கின்றன பிள்ளைகள். நானும் என் சிறு வயதை இப்படி கழித்தவன்தான். பள்ளிப் படிப்போடு வாழ்க்கைக்கான Survival of the Fittest சூத்திரங்களை மெதுவாய் கற்றுக் கொடுத்துவிடலாம் என்ற தைரியமும், என்னை என் தந்தை சுதந்திரமாய் வளர்த்த பரிசை நானும் என் குழந்தைகளுக்குத் தர விரும்புகிறேன். வீடு மாற்றியது, பிள்ளைகளின் பள்ளி மாற்றல், பணிச்சுமை போன்ற காரணங்களும், இணைய இணைப்பு துண்டிப்பு, மாற்றலுக்கான காலதாமதம் ஆகியவை என்னை வலை உலகத்திலிருந்து முற்றாக துண்டித்தது.

கிடைத்த சந்தர்ப்பத்தில் படித்தவை பற்றி எதுவுமே சொல்ல முடியாத அளவுக்கு நொந்துபோனேன். நல்ல மதிப்பான நட்புகளைத் தவிர்த்து வேறொன்றும் பெரியதாக எண்ணமுடியாத இந்த வலை உலகில் எனக்கென கிடைத்த நட்புகளை மதிக்கிறேன். சமீபத்திய பதிவர் சந்திப்பும், அதற்கு முன் சந்தித்த பலரின் அன்பான நட்புகளைத் தாண்டி வேறெதுவும் கண்களுக்கு தெரியவில்லை. வலை உலகம் தவிர்த்து வேறெதிலும் இது சாத்தியமும் இல்லை.

எல்லா நண்பர்களுக்கும் என் நன்றியும், வந்தனமும்.

--

மீண்டும் முதல் வரிக்கு வருகிறேன். வீடு கட்டுவது என்பது அத்தனை எளிதாக இல்லை. பட்ஜெட்டை விட செலவு திமிறிக்கொண்டு போகிறது. ஆனாலும் சொந்த வீடு என்பது விவரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தருகிறது. ஏற்கனவே பகிர்ந்தபடி முன் பக்கம் தோட்டம் அமைக்க வேண்டும். நல்ல மரங்கள் நடவேண்டும், பறவைகளுக்கான வசிப்பிடமும்/குடிக்க நீரும் அதில் இருக்கவேண்டும். வேலைகள் இருக்கிறது நிறைய. போகப்போகும் தூரமும் அதிகம். நேரமோ குறைவு. பார்க்கலாம் பிறிதொரு நாளில் இதனைப் படிக்கும்போது என்ன கிழித்தேன் என்பது தெரியவரும். சிரிப்பேனா? சிந்திப்பேனா? அழுவேனா? தெரியாது. ஆனால் இப்பொழுது மவுனமாய் இருக்கிறேன். எனக்கென்று சொந்த முகவரி தாங்கிய என் வீட்டில் அடுத்தமாதம் வாடகை தரவேண்டுமே என்ற கவலை மட்டுமே தற்பொழுதைக்கு இல்லை:-)

--

நிழல் வளர்த்து நீண்டு
அடுத்த வீட்டின் மதில் தாண்டிய
வேப்பமரம் என்றேனும் எங்களுக்குள்
வரும் பகையில்
முதல் பலியாகக்கூடும்!
.

7 comments: