பலா பட்டறை: வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது???

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது???ஒரு இனத்தை அழிக்க போர் தொடுக்க வேண்டியதில்லை. பதிலாக ஒரு டிவி பொட்டியும் சரக்கு புட்டியும் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டால் போதும் போல!!

ஆமாம் அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. தமிழகத்தின் முதன்மையான ஒரு சானல் காலை முதல் இரவு வரை மக்களுக்கு உபயோகமே இல்லாத குடும்ப வாழ்க்கையை சிதைக்கும், மனித மனங்களில் நஞ்சை விதைக்கும் கேவலமான மெகா தொடர்களை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறது. இலவச தொலைக்காட்சி புண்ணியத்தில் இப்பொழுது பட்டி தொட்டி எங்கும் இதனைப் பரப்பும் (தொலைக்காட்சி பார்த்தால் பொது அறிவு வளருமாம்!) பகுத்தறிவு வேலையும் செவ்வனே நடக்கிறது. விளிம்பு நிலை மனிதரிலிருந்து மேல் தட்டு மக்கள் வரை இம்மாதிரி ஊடகங்களால் பரப்பப்படும் அபத்தக்கதைகள் மூலம் மனச்சிதைவு அடையும் மக்கள் ஏராளம்.

இவர்களால் தீண்டாமையையோ, கடவுள் மறுப்பையோ, இயற்கை வேளாண்மையையோ, ஹிந்தி எதிர்ப்பையையோ, தமிழ் மொழியின் சிறப்பையோ, சுய வேலை வாய்ப்புகளுக்கான வழிமுறைகளையோ, நுகர்வோர் உரிமைகளையோ, நகைச்சுவையையோ நிகழ்ச்சியாகக் காண்பிக்க முடியாது. ஏனென்றால் இவற்றிற்கு டிஆர்பி கிடைக்காது. எனில் இதெல்லாம் மக்கள் விரும்பவில்லை என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். (கொள்கை வேறு, டிஆர்பி வேறு ஹி ஹி)

கள்ளக்காதல், குடும்ப குழப்பங்கள், திருட்டு, கொலை, சூழ்ச்சி, அடிதடி, குடிக்கும் காட்சிகள், ரவுடியிசம், பழிவாங்கும் படலம், மர்ம மாந்த்ரீகம் மற்றும் இதர புண்ணாக்குகள். சுபம்! இதற்குத்தான் டிஆர்பி ரேட்டிங்குகள் உச்சம். முதன்மையான சானல். உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்காக இவர்கள் செய்யும் சேவைக்கான பரிசு டிஆர்பியில் முதலிடம்!! (என்னது நியூஸா? அடப் போங்க பாஸ் :-) )

அடுத்தது டாஸ்மாக். கோவிலில் கூடும் கூட்டம் கண்டு பொங்கி எழுந்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இங்கே அதை விட கூட்டம் பொங்கி வழிந்து வாந்தி எடுத்து வாசனை பரப்பிக்கொண்டு இருக்கிறது. இப்பொழுது நான் வசிக்கும் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பாழடைந்து கிடக்கிறது. நூலகம் என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. ஆனால், ஊருக்குள் நுழையும் வாயிலிலேயே ஒன்றுக்கு இரண்டாக கடைகள். இது இங்கு மட்டுமல்ல மிகவும் ஒதுக்குப்புறமான கிராமங்களில் கூட நுழை வாயிலிலேயே சாராயக் கடைகள்தாம் நம்மை வரவேற்கின்றன. என்னே மகேசன் தொண்டு!

புறநகர், கிராமங்களில் கிடைக்கும் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தரம் குறித்து யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. மிட்டாய்களில் எந்த கம்பெனி பெயரும் இல்லை, எழுத்துக்கள் மாற்றி பிரபலமான நிறுவனங்கள் பெயரில் வரும் பிஸ்கெட்டுகள், கலப்பட பொருட்கள் என்று பரிதாபமாக இருக்கிறது. போதாதகுறைக்கு போலி மருத்துவர்கள். அது சரி போலி பண்டங்கள் தின்னும் மனிதர்களுக்கு போலி மருத்துவர்கள் போதுமென்று விட்டுவிட்டார்கள் போல. முள்ளை முள்ளாலே எடுப்பதுபோல போலியை போலியை விட்டே எடுக்கலாம். ஜெய் ஜக்கம்மா.

இது என்னமாதிரியான கலாச்சாரம் என்பது எனக்குப் புரியவில்லை. தமிழினம் என்று புளங்காங்கிதம் அடைபவர்கள் இம்மாதிரி குடித்து, சீரழிக்கும் கதைகள் கேட்டு இந்த இனம் இன்னும் தழைக்கும் என்று எண்ணுகிறார்களா?

தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்லுங்களேன்!


மைக் டெஸ்டிங்:

ஒன்று::

சரி விடுங்க. சோற்றால் அடித்த பிண்டம் என்று இனியும் சொல்ல முடியுமா? சோற்றைத் தாண்டி இப்பொழுது நிறைய விஷயங்களில் அடிக்க ஆரம்பித்தாயிற்று. அழிக்கும் வரை போர் தொடரும்.

இரண்டு::

ஏம்ப்பா உத்தமரே உனக்கு பிடிக்கலைன்னா உன்ன யாரு பாக்கச்சொன்னது? என்று கேட்கும் நண்பர்களுக்கு, நீங்கள் போராடும் எல்லா காரணத்துக்கும் இந்த பதில் பொருந்தும்தானே?.    

மூன்று::

அமெரிக்கா அரிசியை ஐம்பது காசுக்கு ரேஷனில் கொடுத்த தானைத் தலைவரை மீண்டும் முதல்வராக்குங்கள் என்ற கோஷம் விரைவில் கேட்கக்கூடும்.
(வயல்மேல் வீடு கட்ட நாங்கள் ரெடி. அமெரிக்க அரிசி தின்ன ஆர் யூ ரெடி?? )


.

33 comments: