பலா பட்டறை: வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது???

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது???



ஒரு இனத்தை அழிக்க போர் தொடுக்க வேண்டியதில்லை. பதிலாக ஒரு டிவி பொட்டியும் சரக்கு புட்டியும் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டால் போதும் போல!!

ஆமாம் அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. தமிழகத்தின் முதன்மையான ஒரு சானல் காலை முதல் இரவு வரை மக்களுக்கு உபயோகமே இல்லாத குடும்ப வாழ்க்கையை சிதைக்கும், மனித மனங்களில் நஞ்சை விதைக்கும் கேவலமான மெகா தொடர்களை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறது. இலவச தொலைக்காட்சி புண்ணியத்தில் இப்பொழுது பட்டி தொட்டி எங்கும் இதனைப் பரப்பும் (தொலைக்காட்சி பார்த்தால் பொது அறிவு வளருமாம்!) பகுத்தறிவு வேலையும் செவ்வனே நடக்கிறது. விளிம்பு நிலை மனிதரிலிருந்து மேல் தட்டு மக்கள் வரை இம்மாதிரி ஊடகங்களால் பரப்பப்படும் அபத்தக்கதைகள் மூலம் மனச்சிதைவு அடையும் மக்கள் ஏராளம்.

இவர்களால் தீண்டாமையையோ, கடவுள் மறுப்பையோ, இயற்கை வேளாண்மையையோ, ஹிந்தி எதிர்ப்பையையோ, தமிழ் மொழியின் சிறப்பையோ, சுய வேலை வாய்ப்புகளுக்கான வழிமுறைகளையோ, நுகர்வோர் உரிமைகளையோ, நகைச்சுவையையோ நிகழ்ச்சியாகக் காண்பிக்க முடியாது. ஏனென்றால் இவற்றிற்கு டிஆர்பி கிடைக்காது. எனில் இதெல்லாம் மக்கள் விரும்பவில்லை என்று அவர்களே ஒத்துக்கொள்கிறார்கள். (கொள்கை வேறு, டிஆர்பி வேறு ஹி ஹி)

கள்ளக்காதல், குடும்ப குழப்பங்கள், திருட்டு, கொலை, சூழ்ச்சி, அடிதடி, குடிக்கும் காட்சிகள், ரவுடியிசம், பழிவாங்கும் படலம், மர்ம மாந்த்ரீகம் மற்றும் இதர புண்ணாக்குகள். சுபம்! இதற்குத்தான் டிஆர்பி ரேட்டிங்குகள் உச்சம். முதன்மையான சானல். உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்காக இவர்கள் செய்யும் சேவைக்கான பரிசு டிஆர்பியில் முதலிடம்!! (என்னது நியூஸா? அடப் போங்க பாஸ் :-) )

அடுத்தது டாஸ்மாக். கோவிலில் கூடும் கூட்டம் கண்டு பொங்கி எழுந்தவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இங்கே அதை விட கூட்டம் பொங்கி வழிந்து வாந்தி எடுத்து வாசனை பரப்பிக்கொண்டு இருக்கிறது. இப்பொழுது நான் வசிக்கும் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் பாழடைந்து கிடக்கிறது. நூலகம் என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. ஆனால், ஊருக்குள் நுழையும் வாயிலிலேயே ஒன்றுக்கு இரண்டாக கடைகள். இது இங்கு மட்டுமல்ல மிகவும் ஒதுக்குப்புறமான கிராமங்களில் கூட நுழை வாயிலிலேயே சாராயக் கடைகள்தாம் நம்மை வரவேற்கின்றன. என்னே மகேசன் தொண்டு!

புறநகர், கிராமங்களில் கிடைக்கும் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தரம் குறித்து யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. மிட்டாய்களில் எந்த கம்பெனி பெயரும் இல்லை, எழுத்துக்கள் மாற்றி பிரபலமான நிறுவனங்கள் பெயரில் வரும் பிஸ்கெட்டுகள், கலப்பட பொருட்கள் என்று பரிதாபமாக இருக்கிறது. போதாதகுறைக்கு போலி மருத்துவர்கள். அது சரி போலி பண்டங்கள் தின்னும் மனிதர்களுக்கு போலி மருத்துவர்கள் போதுமென்று விட்டுவிட்டார்கள் போல. முள்ளை முள்ளாலே எடுப்பதுபோல போலியை போலியை விட்டே எடுக்கலாம். ஜெய் ஜக்கம்மா.

இது என்னமாதிரியான கலாச்சாரம் என்பது எனக்குப் புரியவில்லை. தமிழினம் என்று புளங்காங்கிதம் அடைபவர்கள் இம்மாதிரி குடித்து, சீரழிக்கும் கதைகள் கேட்டு இந்த இனம் இன்னும் தழைக்கும் என்று எண்ணுகிறார்களா?

தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்லுங்களேன்!


மைக் டெஸ்டிங்:

ஒன்று::

சரி விடுங்க. சோற்றால் அடித்த பிண்டம் என்று இனியும் சொல்ல முடியுமா? சோற்றைத் தாண்டி இப்பொழுது நிறைய விஷயங்களில் அடிக்க ஆரம்பித்தாயிற்று. அழிக்கும் வரை போர் தொடரும்.

இரண்டு::

ஏம்ப்பா உத்தமரே உனக்கு பிடிக்கலைன்னா உன்ன யாரு பாக்கச்சொன்னது? என்று கேட்கும் நண்பர்களுக்கு, நீங்கள் போராடும் எல்லா காரணத்துக்கும் இந்த பதில் பொருந்தும்தானே?.    

மூன்று::

அமெரிக்கா அரிசியை ஐம்பது காசுக்கு ரேஷனில் கொடுத்த தானைத் தலைவரை மீண்டும் முதல்வராக்குங்கள் என்ற கோஷம் விரைவில் கேட்கக்கூடும்.
(வயல்மேல் வீடு கட்ட நாங்கள் ரெடி. அமெரிக்க அரிசி தின்ன ஆர் யூ ரெடி?? )


.

33 comments:

Anonymous said...

நிஜம் வலிக்கும்.. ஷங்கர்..

vasu balaji said...

/cablesankar said...
நிஜம் வலிக்கும்.. ஷங்கர்../

ஆமாம் கேபிள்ஜி ஆனால் சுய நினைவிருக்கும். கோமாவில் ஃபாண்டஸி பார்த்து என்ன பண்ண?

ஸ்வாமி ஓம்கார் said...

ஜனநாயக துரோகி... மக்களின் நலத்திட்டதை எதிர்க்கும் எதிர் கட்சியின் கைக்கூலி சங்கர் ஒழிக..!

ஸ்வாமி ஓம்கார் said...

டிவிட்டரில் நான் பதிந்தது

செம்மொழி அப்டேட்ஸ் :
மாநாட்டை ஒட்டி பள்ளிகள் மூடப்பட்டன.
டாஸ்மார்க் திறக்கப்பட்டது.
வாழ்க தமிழ்...!

dheva said...

உண்மைதான்....! இந்த கொடுமைகளை எப்படி நிறுத்துவது...புரையோடிப் போய்விட்டது.

விழிப்புணர்வூட்டும் கட்டுரை பாஸ்!

butterfly Surya said...

அருமை.

இதையும் படிங்க ஷங்கர்.

http://thiruttusavi.blogspot.com/2010/05/blog-post_29.html

வினோத் கெளதம் said...

இவங்க எப்போதுமே இப்படி தான் பாஸு..

நாடோடி said...

உங்க‌ள் ஆத‌ங்க‌ம் புரிகிற‌து.... எல்லாவ‌ற்றையும் ச‌கித்து கொள்ள‌ ப‌ழ‌கியாச்சி..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை. உண்மை..

க.பாலாசி said...

என்னத்த சொல்ல.. படிக்கிறப்ப என்னன்னவோ நினைச்சேன்..

கலகலப்ரியா said...

||கள்ளக்காதல், குடும்ப குழப்பங்கள், திருட்டு, கொலை, சூழ்ச்சி, அடிதடி, குடிக்கும் காட்சிகள், ரவுடியிசம், பழிவாங்கும் படலம், மர்ம மாந்த்ரீகம் மற்றும் இதர புண்ணாக்குகள். சுபம்! இதற்குத்தான் டிஆர்பி ரேட்டிங்குகள் உச்சம். முதன்மையான சானல். உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்காக இவர்கள் செய்யும் சேவைக்கான பரிசு டிஆர்பியில் முதலிடம்!! ||

ஹ்ம்ம்... என்னத்த சொல்லி... என்னத்த...

கமலேஷ் said...

இது இங்க உள்ள சாபக் கேடு...என்னத்த சொல்ல ...

க‌ரிச‌ல்கார‌ன் said...

வேலை இல்லாத பட்டதாரித் தமிழ் ஆசிரியர்கள் தங்களுக்கென ஒரு சங்கமே வைத்திருக்கும் சோகமும் இந்த நாட்டில்தான் நடக்கிறது. சென்னையில் இதுவரை ஏழு தடவை உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். தஞ்சைப் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்கள். முதல்வரை ஒரு தடவை சந்தித்தார்கள். துணை முதல்வரை மூன்று முறை சந்தித்திருக்கிறார்கள். அதிகாரிகளுடனான சந்திப்புக்கு அளவே இல்லை. "புலவர் பட்டயம் படித்தோம். அதை ஒரு பட்டமாகக்கூட அங்கீகரிக்க மறுக்கிறார்கள். தாய் மொழி வாழவைக்கும் என்று நம்பிப் படித்த நாங்கள் தெருவில் நிற்கிறோம்" என்று சொல்கிறார் இந்த அமைப்பின் தலைவர் ராமு.
-விக‌ட‌ன்

ஜூன் என்ப‌தை சூன் என்று த‌மிழில் மாற்றி விட்டார் த‌மிழின‌த்த‌லைவ‌ர்,அது ம‌ட்டுமில்லாம‌ல் பெட்டிக்க‌டைக‌ள் வ‌ரை த‌மிழில் பெய‌ர்ப் ப‌ல‌கைக‌ள் வைக்குமாறு ஆணை.

ஆக‌வே இன்னுமொரு ப‌த்து வ‌ருஷ‌த்துக்கு த‌மிழ் நாட்டில் பாலாறும்,தேனாறும் ஓடும்!!
அடுத்து டாஸ்மாக் ச‌ர‌க்கு பாட்டில்க‌ளில் த‌மிழில் பெய‌ர் எழுத‌னும் என‌ சொன்னாலும் ஆச்ச‌ரிய‌ப் ப‌டுவ‌த‌ற்கில்லை.

AkashSankar said...

உரக்க கத்தினாலும்...யாருக்கும் புரியாது...

//இன்று
நான் கேட்பதும்...
இன்று
நான் பார்ப்பதும்...
என் விருப்பம்
இல்லை
இது மட்டுமே
இங்கு விற்பனைக்கு...
விருப்போ...வெறுப்போ
நுகர்வு கலாச்சாரம்
இதில் மட்டும்
மாய்மாலம்
செய்துவிடும்...
இன்று
என் மேல்
திணிக்கப்பட்டவை....
நாளை
என்
விருப்பு பட்டியலில்...
பாவம் தான்
தோல்வியையே....
பல காலம்
வெற்றியாய்
ருசித்ததனால்...
//

அன்புடன் நான் said...

ரொம்ப உணர்ச்சிவச படுறிங்க.... சங்கர்.
உணர்வற்ற தமிழினத்தை ஒரு”வாக்கு”வதுதான் அவர்களின் கடப்பாடு.


//அமெரிக்கா அரிசியை ஐம்பது காசுக்கு ரேஷனில் கொடுத்த தானைத் தலைவரை மீண்டும் முதல்வராக்குங்கள் என்ற கோஷம் விரைவில் கேட்கக்கூடும்.
(வயல்மேல் வீடு கட்ட நாங்கள் ரெடி. அமெரிக்க அரிசி தின்ன ஆர் யூ ரெடி?? //

இதுவும் கடந்து போகும்.
பகிர்வுக்கு நன்றி.

விக்னேஷ்வரி said...

ரொம்ப நல்ல பதிவு ஷங்கர். ஆனா என்ன சொல்லி என்ன பண்ண...

பாலா said...

அண்ணே...

நீங்களும் ஃபேமஸ் ஆய்டுவீங்க பாருங்க. சன் டிவி டிஆர்பி பத்தியா எழுதறீங்க??

யாருனே.. மேட்டரை அந்த ஏரியாவுக்கு அனுப்புங்கப்பா

VISA said...

விவாதிக்க வேண்டுமென்று ஆசை தான். நிறைய எழுதவேண்டியிருக்குமே என்ற பயத்தில் இப்போதைக்கு :)

ஷர்புதீன் said...

i agreed VISA's comment

Unknown said...

சொரணை கேட்ட சென்மங்கள் நாம் ...

க ரா said...

ஒன்னும் பண்ண முடியாது சங்கர். முடிஞ்சா நம்ம பார்க்காம இருக்கலாம். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டாய் ஒழிக்க முடியாதுன்ற மாதிரி மக்களே முடிவெடுத்து பார்க்காம விட்டாதான் இதுக்கெல்லாம் முடிவு.

பின்னோக்கி said...

உண்மை. கசக்கிறது.

அஹோரி said...

கருணாநிதிய விடுங்க இனிமே புத்தி சொல்லி ஆகபோறதில்ல. அதுக்கு சொம்படிக்கிற பதிவர்களை என்ன சொல்ல. குஸ்காவுக்கெல்லாம் ஆசைப்பட்டு செம்மறி மாநாட்டுக்கு ஆள் புடிக்கிரவனுங்கள என்னத்த சொல்ல ?

பனித்துளி சங்கர் said...

///////அமெரிக்கா அரிசியை ஐம்பது காசுக்கு ரேஷனில் கொடுத்த தானைத் தலைவரை மீண்டும் முதல்வராக்குங்கள் என்ற கோஷம் விரைவில் கேட்கக்கூடும்.
(வயல்மேல் வீடு கட்ட நாங்கள் ரெடி. அமெரிக்க அரிசி தின்ன ஆர் யூ ரெடி?? ).////////////


எப்பொழுதுதான் விழித்துக்கொள்ளப் போகிறார்களோ நாம் மக்கள் . நமது கடமையை செய்வோம் .
பகிர்வுக்கு நன்றி நண்பரே

மரா said...

என்ன சார்.செம்மொழி மாநாட்டு நேரத்துல என்ன இதெல்லாம்........கிளம்புங்க எதுன்னாலும் கோவையில் பேசிக்கலாம்.500ரூ தாராங்க.ரூ.1 சென்னை டூ கோவை :)

Chitra said...

ஒரு இனத்தை அழிக்க போர் தொடுக்க வேண்டியதில்லை. பதிலாக ஒரு டிவி பொட்டியும் சரக்கு புட்டியும் கிடைக்குமாறு பார்த்துக்கொண்டால் போதும் போல!!

..... punch!!!

Vidhoosh said...

ரிமோட் நம்ம கைலதான இருக்கு அப்படின்னு என் நண்பர் சொல்லி இருக்கார்.

ஆமா! பவர் கட் எல்லாம் ஆறதில்லையா??? அப்படியா???

அடுத்த கவுன்சிலர் பதவிக்கு தயாராகுங்கள்.. தொண்டர் படை தயாராகவே இருக்கோம்.

எங்கே எறும்புப் படை?????????

Romeoboy said...

மைக் டெஸ்டிங் கரெக்டா வேலை செய்யுது

ஹுஸைனம்மா said...

இதனால்தான் கிராமங்களைவிட்டு நகரத்திற்கு மக்கள் படையெடுக்கிறார்களோ, கொஞ்சமேனும் தரமான பொருட்கள் கிடைக்கட்டுமே என்று!!

டிவி - ரிமோட் மட்டுமல்ல டிவி பிளக்கின் ஸ்விட்சும் உங்கள் கட்டுப்பாட்டில்!! என் வீட்டில் ஆஃப் செய்து 3-4 மாசம் ஆச்சு!! ரொம்பவே நிம்மதி!!

மற்றவை: :-((((

Kumar said...

//என்ன சார்.செம்மொழி மாநாட்டு நேரத்துல என்ன இதெல்லாம்........கிளம்புங்க எதுன்னாலும் கோவையில் பேசிக்கலாம்.500ரூ தாராங்க.ரூ.1 சென்னை டூ கோவை :) //

SOLLAVAE ILLA!!!!...

Sari,Sari, ethuvaa irunthaalum friday'ku appuram pesallam...joot..

Paleo God said...

cablesankar
வானம்பாடிகள்
ஸ்வாமி ஓம்கார்
dheva
butterfly Surya
வினோத்கெளதம்
நாடோடி
T.V.ராதாகிருஷ்ணன்
க.பாலாசி
கலகலப்ரியா
கமலேஷ்
கரிசல்காரன்
ராசராசசோழன்
சி,கருணாகரசு
விக்னேஷ்வரி
ஹாலிவுட்பாலா
விசா
ஷர்புதீன்
கே.ஆர்.பி.செந்தில்
இராமசாமி கண்ணன்
பின்னோக்கி
அஹோரி
பனித்துளி சங்கர்
மயில் ராவணன்
Chitra
vidhoosh
Romeo
ஹுஸைனம்மா
Kumar


அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!! :))

Covairafi said...

செயற்கைக்கோள் தொலைகாட்சி மனித இனத்தை அழிக்க வரவில்லை. மாறாக ஓர் புதிய சமுதாயத்தை உருவாக்கியுள்ளது. ஆம். சுயசிந்தனை மறந்த, அநாகரீக உறவு முறைகளை வளர்க்கும், மறைவானவற்றை வெளிச்சம் போட்டு காட்டும், சோம்பேறித்தனமான, கோழைகளை உருவாக்கும் தளம் தான் அதன் சாதனை. நல்ல விஷயங்கள் இருந்தாலும் அது தேவை படாத ஒன்று. கவர்ச்சி, பாலுணர்வு தூண்டி, சோகங்களை நாள் முழுதும் காட்டி மன உளைச்சலால் அவதி பட வைக்கும் சமுதாயத்தை உருவாக்கும் சாதனம். சில நாட்கள் தவிர்த்து பாருங்கள். தெரியும் வித்தியாசம்.

ஜோதிஜி said...

ஷங்கர் அடேங்கப்பா என்னவொரு விளாசல். நன்றி புலவரே