பலா பட்டறை: சாலையோரம் - தொடர் இடுகை

சாலையோரம் - தொடர் இடுகை
ஸ்பென்சர் தாண்டி இடதுபுறம் திரும்பி பொறுமையாய் வந்துகொண்டிருந்தபோது எத்திராஜ் கல்லூரிக்கு முன்னால் சிக்னல் சிவப்பிலிருந்து அப்போதுதான் பச்சைக்கு மாறி கூவம் ஆற்றின் பாலத்தினை கடந்து எத்திராஜ் கல்லூரி நெருங்கும்போது, கல்லூரி வாயில் தாண்டி கூட்டமாய் இருந்தது. என்னவென்று நானும் எட்டிப்பார்க்க ஒரு இளம் பெண், மஞ்சள் நிற சுடிதார் போட்டு, மல்லாந்து கிடந்தார் அருகில் ஸ்கூட்டி (இங்கயுமா?!) ”ஆட்டோகாரன் இடுச்சிட்டு போய்ட்டாம்ப்பா, த இப்பதான் சிக்னல் வுட்டு பொறுமையாதான் வந்துனு இரிந்திச்சி இந்தம்மா”, நான் பார்க்கும்போதே சுட சுட ரத்தம் பின் மண்டை வழியே சாலையில் பரவியது, அழகான இளம் பெண், சுற்றிலும் ஆண்கள், தொட்டு தூக்க தயக்கம்.

பார்த்தேன் நீல நிற புடைவயில் கையில் ஃப்ளாஸ்க்குடன் ஒரு அம்மா நின்றிருந்தார், அருகிலிருக்கும் ஐ ஓ பி வங்கியில் கடை நிலை ஊழியர், ”அம்மா நீங்க ஒரு கை பிடிங்க ஆஸ்பிடல் கொண்டு போயிடலாம்”,

ப்போது அந்த பெண்ணிற்கு வலிப்பு ஆரம்பித்து விட்டிருந்தது. கையில் சாவி கொத்து தரவேண்டுமா?, உடைகளை தளர்த்த வேண்டுமா? கைப்பை திறக்கலாமா?, குடிக்க தண்ணீர் தரலாமா? இவர் வண்டி யார் பார்த்துக்கொள்வார்கள்? தாமதிக்க முடியாது, ”அம்மா நீங்கதான் லேடிஸ் கொஞ்சம் ஹெல்ப் பன்ணுங்க, பக்கத்துலதான் அப்பல்லோ, ஃபிட்ஸ் வந்திடிச்சி, மண்டை உடஞ்சி ரத்தம் வருது தாமதிக்கிறது ஆபத்து”, உடனே அந்த அம்மா, அந்த பெண்ணின் தோள் பிடித்து, நாங்களும் ஒரு உதவி செய்ய, ஒரு ஆட்டோவில் ஏற்றி அப்பல்லோ கொண்டு போய், அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தோம், உதவி செய்த அந்த அம்மா தன் புடைவையெல்லாம் ரத்ததுடன், பரவாயில்லைங்க என்றபடி அதே ஆட்டோவில் சென்றுவிட்டார். கைப்பையில் பன்னாட்டு வங்கியின் ஐடி கார்டில் அவரின் பெயர், மற்றும் படம், வங்கி பெயர் மட்டும் இருந்தது, பையில் தேடி அவரின் கணவரை தொடர்பு கொண்டு விவரம் சொல்லி வரச்செய்தோம்.

ருவருக்குமே 23 வயதுக்கு மேல் இல்லை, கணவர் சாஃப்ட்வேர்,மனைவி வங்கி, ஒரு ஹெல்மெட் போட்டிருந்தால் ‘ நாயிண்ட மோனே ’ என்று தாய் மொழியில் திட்டி, தூசி தட்டி வீடு போய் சேர்ந்திருக்க வேண்டிய பெண்,  மண்டை உடைந்ததற்கு, அறுவை சிகிச்சை செய்து அழகான தலை முடி மழித்து, பல மாதங்கள் அவஸ்தை அனுபவித்தார்.

டித்த மிருகம் காணாமல் போய்விட்டது. இந்த பெண் ஒரு தவறும் செய்யவில்லை. ஒரு பாதுகாப்பு தலைகவசம் அணியவில்லை அவ்வளவுதான்.

தே ஒரு இரவு நேரமாகவோ, மழை காலமாகவோ, தனிமையான சாலையாகவோ இருப்பின்...??

----------------------

ப்பிரிக்க ஊடூ வில் வருவதுபோல சாலையில் ஒரு வட்டம் வரைந்து, நடுவில் ஒரு மனித கை கால்கள் வரைந்து வைத்திருப்பதை பார்க்கும்போதெல்லாம், ஏதோ ஒரு குடும்பத்தின் தலைவிரி அழுகை காட்சி நினைவிற்கு வரும்.

“ இன்னிக்கு உனக்கு பிடிச்ச சாப்பாடு சீக்கிரம் வந்துடுப்பா, ”

“ரெடியா இரு சினிமாக்கு போய்ட்டு ஹோட்டலில் சாப்ட்டுட்டு அம்மா வீட்டுக்கு போய்ட்டு வந்திடலாம்,”

“ அப்பா ஒரு வருஷம்தான் காம்பஸ்ல செலக்ட் ஆயிட்டேன், நீ இதுவரை கஷ்ட்டப்பட்டது போதும்,”

“ என்னங்க சொந்த வீடு வாங்கிடலாங்க, லோன் ஓகே ஆயிடும், ஆபீஸ்ல சொல்லிருக்காங்க”

“குட்டி அப்பா சாயந்திரம் கண்டிப்பா ஐஸ் கிரீம் வாங்கிட்டுவரேன்”


த்தனை எத்தனையோ வாக்குறுதிகள் கடைசியாய் போகுமென்று யாருக்கு தெரியும்?, காதல், பாசம், நம்பிக்கைகள் அந்த வட்டத்துக்குள்ளேயே, சூழ்ய சூன்யமாய், அந்த மஞ்சள் வட்டத்தின் மேலே வண்டி ஓட்டுவது கூட எனக்கு பயமாய் இருக்கும். யாருடைய சொந்தமோ, யாருடைய நினைவிடமோ?

......

ஸ்டாலின் என் பள்ளி தோழன், என் உயிர் நண்பன், என் முதல் காதலுக்காய் என்னுடன் நெற்குன்றம் திரைஅரங்கில், அரங்கேற்றம் படம் பார்க்க வந்தவன், பள்ளியில் ஒன்றாய் திருக்குறள் சொல்லி இருக்கிறோம். அவன் அப்பா ஒரு சிறந்த ஓவியர், அண்ணனும், அழகான குடும்பம். பள்ளி முடித்து ஆளுக்கொரு திசையில் பிரிந்தோம்,

ன்றைக்கு தென்னக ரயில்வேயில் வேலை செய்துகொண்டிருக்க வேண்டியவன், கோயம்பேடு ரவுண்டானாவில் லாரியில் அடிபட்டு சொல்லாமல் கொள்ளாமல் காற்றில் கரைந்தான். ஒரு நல்ல நட்பு இழந்தேன், முதல் காதலும், முதல் நட்பும் ஒரு சேர இழந்த என் வாழ்க்கை தராசில் நடு முள் மட்டும் குத்திக்கொண்டே இருக்கிறது. :( அந்த இடங்களை சாதா’ரண’மாக என்னால் ஒருபோதும் கடக்க முடிவதில்லை.

.........

சாலை பயணங்களில் பல விபத்துகளை பார்த்தாயிற்று, வண்டியில் விழுந்த விழுப்புண்கள் அங்க அடையாளத்துக்காய் ஏராளமாக இருக்கிறது. அதில் என் தவறுக்கானவை மிக குறைவு. சொல்லிக்கொண்டே போவதில் மனது வலிக்கும்.

துவும் நிச்சயமில்லை ஓடும் ரயிலில், கழிவரையில் பிரசவித்து அதிலுள்ள ஓட்டை வழியே கீழே விழுந்த குழந்தை சிறு கீறலும் இல்லாமல் சிரித்து பிழைத்திருக்கிறது. மல்லாக்க விழுந்ததில் வெறும் பின் மண்டை திறந்து சிரித்தபடியே இறந்துபோய் ”அய்யோ அவன எழுப்புங்க தூங்கரான் சாவல” என்று மாரில் அடித்த தாயையும் பார்த்தாயிற்று.

விவேகமில்லாத வேகம், ஒரு நொடி தவறு. ஒரே ஒரு நொடி சிந்தித்தால் போதும். தேவை நிதானம் மட்டுமே.

திரே போகும் வண்டி திடீரென நிற்காது என்ற ஒரு நம்பிக்கை மட்டுமே நாம் வண்டி ஓட்டுவதின் சாமர்த்தியம் அன்றி வேறெதுவும் இல்லை. நமக்கு பின்னாடியும் அதே நம்பிக்கையில் பலர் வருகின்றனர். வாழ்க்கை சக்கரமும் அதே நம்பிக்கையில்தான் சுழன்றுகொண்டே இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை. சந்தர்ப்ப சூழ் நிலையால் நிகழ்பவைகளை மட்டுமே விபத்து என்று சொல்லலாம். மற்றவைகள் மிக கடுமையாய் தண்டிக்கப்பட வேண்டியவை.

பகிர அழைத்த சகோதரி வித்யா அவர்களுக்கு நன்றி. நிரம்ப பாரங்களை என் பக்கத்தில் இறக்கி வைத்துள்ளேன். இதுவும் அதில் ஒன்று.


வித்யா அவர்களின் பதிவு::

சாலையோரம் - தொடர் இடுகை

எனக்கும் யாரையாவது அழைக்க விருப்பம்தான்... படித்து பின்னூட்டமிடும் நண்பர்களோ, படித்துவிட்டு மட்டும் போகும் நண்பர்களோ, தயவு செய்து இது பற்றி பதிவிடுங்கள், நாமோ நமை சார்ந்தவர்களோ தினம் தினம் சந்திப்பதுதான் இது, யாருடைய பதிவையாவது படித்து தவறு செய்யும் ஒருவர் திருந்தினாலும் மகிழ்ச்சியே.
.

31 comments: