பலா பட்டறை: பாலிசி...

பாலிசி...

என்னை சார்ந்து இருப்பவர்களுக்கான, என் குடும்பத்திற்கான பாதுகாப்பாக ஒரு ஆயுள் காப்பீடும் எடுத்துவிடலாம் கூடவே மருத்துவ காப்பீடும் என்று நான் முடிவு செய்து, பல விதமான அலசல்களுக்கு பிறகு ஒரு நாள் காசோலைகளுடன் நான் கிளம்பி போய் சேர்ந்தது அண்ணாநகரில் உள்ள தனியார் காப்பீடு நிறுவனத்தின் கிளை ஒன்றில், கிளையின் துணை மேலாளரை சந்தித்தேன்

”யெஸ் சார், ஐ ஆம்”.. என்று அவர் பெயர் சொல்லி பலவிதமான திட்டங்கள், பயன்கள் என்று ஆரம்பித்ததும்.. நான் சொன்னேன் சார் எனக்கு இப்பொதைக்கு 15 லட்ச ரூபாய்க்கு எடுக்கவேண்டும் அதுவும் டேர்ம் பாலிசி போதும், அதற்கான வழிமுறைகள் சொன்னால், காசோலை தந்துவிட்டு வேலை முடிக்கலாம். புதை பொருள் அராய்ச்சி நான் முடித்து வந்திருப்பது அவருக்கு புரிந்தது, உடனே தேவையான படிவங்கள் எடுத்து வந்து கையெழுத்து வாங்கும்போது, நான் கேட்டேன்..
“அவ்வளவுதானா?, எப்போது முதல் எனக்கு காப்பீடு உறுதி செய்யப்படும்?”
“ சார் பேப்பர்ஸ் மும்பைக்கு போகவேண்டும், மேக்சிமம் 10 நாட்கள்,”

சரி என்று காசோலை தந்து வேறு வேலை பார்க்க கிளம்பினேன். மூன்றாவது நாள் சரியாக தொகை என் கணக்கிலிருந்து எடுக்கப்படிருந்தது, நான் பாலிசி டாக்குமெண்ட்டுக்காக காத்திருந்தேன். ஒரு மாதம் கழித்தும் எந்த பதிலும் வராமல் நான் திரும்ப அண்ணா நகர் அலுவலகத்தில் துணை பார்டியை தேட அவர் சிங்கப்பூர் டூர் போயிருப்பதும் வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்ற பதில் கிடைத்தது. என் விவரங்களை சொல்லி என் பாலிசிக்கான தற்போதைய நிலை குறித்து கேட்க

”சாரி சார், அவர் ட்ராவ பூட்டிட்டு போய்ட்டாரு, வேற எங்கயும் உங்க டாக்குமென்ட் இல்ல, அவர் வந்தாதான் தெரியும்”
”என்ன சார் இது நான் என்ன பைக், இல்ல க்ரெடிட் கார்டா அப்ளை பண்ணியிருக்கேன், ஒரு லைஃப் பாலிசி அதுவும் ஒரு மாசத்துக்கு முன்னாடி, காசு கூட அப்பவே என் கணக்குலேர்ந்து எடுத்தாச்சு, இன்னும் டாக்குமெண்ட் வரல, என் அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் யாருக்கும் தெரியல, இத்தனைக்கும் நான் பார்த்தது அஸிஸ்டெண்ட் மேனேஜர். இதுதான் உங்க சர்வீசா? ஒரு வாரத்துல எனக்கு பதில் சொல்லுங்க, முடியலையா, பணத்த திருப்பி குடுங்க, வேற கம்பெனில பாலிசி வாங்கிக்கிறேன்.” ம்ஹூம் ஒரு தகவலும் இல்லை பத்தாவது நாள் நான் அந்த அஸிஸ்டெண்ட் மேனேஜருக்கு போன் செய்தேன். ஒன்றுமே தெரியாதது போல பேசிய அவர், 3 நாட்களில் எல்லாம் முடிந்துவிடும் என்றார். 4 ம் நாள் நான் அவர்களுடைய தலைமை அலுவலகத்துக்கு மெயில் அனுப்பினேன், எனக்கு அவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்ய இயலாது என்பது தெரிவிக்கப்பட்டது, நாக்கை பிடுங்கி நாண்டுகிட்டு சாவது போல சில கேள்விகள் கேட்டதும், சென்னை கிரீம்ஸ் ரோடிலுள்ள அவர்களுடைய அலுவலகத்தை தொடர்புகொள்ளுமாறு தெரிவித்தனர், கவனக்குறைவு, வாடிக்கையாளரிடம் சரியான தகவல் சொல்லாதது, ஒரு மாதத்திற்கும் மேலாக என் பணத்தை முடக்கி வைத்தது போன்றவறிற்க்காக வருத்தப்பட்ட ஒரு உயர் அதிகாரி, ஒரு வாரத்தில் காசோலை திரும்ப வரும் என்று உறுதி அளித்தார், காசோலையும் வந்தது கூடவே ஆதங்கமும், வன்மமும்.

நிறைய தகவல்கள் தேடினேன், புத்தகங்கள், இணையம் இன்ன பிற, சரியான தகவல் பெற இயலாது முடிவெடுத்தேன் எல் ஐ சி யில் 10 நாட்கள் வகுப்புக்கு போய், தேர்வெழுதி முகவரானேன். எப்போதும் எல்லாவிடத்திலும் கேட்கப்படும் பட்டும் படாமல் குத்திக்காட்டப்படும், அதே கேள்வி முழு நேர தொழிலாய் செய்பவர்கள் மூலம் என்னிடமும் கேட்கப்பட்டது..

”ஏன் சார் நீங்கதான் ஒரு தொழில் பண்றீங்க, காசு வருது, எங்களுக்கு இதுதான் எல்லாமே, நீங்களும் போட்டிக்கு வந்தா நாங்க என்ன பண்றது? முழு நேரமும் எடுத்து பண்றவங்கதான் இதுக்கு லாயக்கு தெரியுமா, இது ஹாபி கிடையாது..”
நான் பொறுமையாக பதில் சொன்னேன்.. இத்தனை வருடத்தில் யாரும் என்னை வந்து பாலிசி எடுப்பதின் மகத்துவம், அத்தியாவசியம் எதுவும் சொல்லவில்லை ஒரு முகவர் கூட என்னை சந்தித்ததில்லை, இது ஒரு வகையில் சமூக சேவைதான் எனக்கு. அதுவும் எனக்காக நான் இதை பற்றி அறிந்துகொள்ள இங்கே வந்து, இதன் முக்கியத்துவம் புரிந்ததால் முகவரானேன். மற்றபடி என் தொழிலில் நான் சம்பாதிப்பதே எனக்கு போதுமானது.

என்னுடைய வளர்ச்சி அதிகாரி ஒரு அற்புதமான மனிதர், நிறைய கற்றுக்கொள்ள வகுப்புகள் ஏற்பாடு செய்வார், பெரிய பெரிய கார்பொரேட் மனிதர்கள் மார்க்கெட்டிங், காப்பீடின் அவசியம், அதற்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வழிமுறைகள் இன்ன பிறவற்றை பற்றி வகுப்புகள் எடுப்பார்கள். அப்படியான வகுப்புகளில் நான் கற்றது நிறைய. போன வாரத்தில் ஒரு வகுப்பில் என்னை கவர்ந்த ஒரு விஷயம் உங்களுடன் பகிர விருப்பம்::

'ATTEND THE LAST NEED FIRST'


பயிற்சி முகாமில் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட வாசகம் மேலே உள்ளது. ’கடைசி தேவைகளை முதலில் கவனியுங்கள்’ சரியாக மொழி பெயர்த்துள்ளேனா தெரியாது. ஜல்லிக்கட்டு காளை போல நம் தின பொருளாதாரம் வித்தை காட்டுகிறது. மென் பொருள் வல்லுனர். கை நிறைய சம்பளம், கேட்ட பணம் உடனே கிடைக்கும், இனி அவர்களே உலகம் என்று போன வருட உலக பொருளாதார சுனாமிக்கு முன்புவரை நம்பி கல்லா கட்டிக்கொண்டிருந்த துறைகள் நிறைய. 25 லட்சத்திற்கு ஃப்ளாட்டா அற்பமாய் பார்த்த காலங்களில் முதல் மரியாதை 50 லகரத்ததிற்கு மேல் கடனில் வீடு வாங்க வந்த மனிதர்களுக்கு மட்டுமே. எனக்கு மிகவும் ஆச்சரியமாய் இருந்த காலம் அது. ஒரு சிறிய வட்டம் அது, ஆனால் எல்லா கவனிப்பும் அவர்களுக்கானதாய் இருந்தது. குப்பை மேடெல்லாம் கோபுரங்களாக்கி, வைர வைடூரியமாய் ஜொலிக்க வைத்து வியாபாரிகள் சந்தையில் அவர்களுக்கான கடை விரித்திருந்தார்கள். சாதாரணமாக கலர்ப்ளஸில் பாதி கழிவில் சிறப்பு விற்பனையில் நான் பார்த்த ஒரு சாதாரண சட்டை விலை ரூ.4500/- எனக்கு சிரிப்புதான் வந்தது. பாம்பின் கால் பாம்பறியும் நானும் தொழில் செய்பவன் தான். ஆனாலும் விலைகளின் போக்கு எனக்கு பயத்தை தந்தது. நடுத்தர குடும்பங்கள் சென்னையில் வீடு வாங்கும் நினைப்பை குழி தோண்டி புதைத்து விடுங்கள், இந்த இடம் உங்களுக்கானதல்ல, சப்தமாய் சொல்லப்பட்டது. இத்துனை நாள் இந்த வியாபாரிகளை வாழ வைத்த நடுத்தர மக்கள் அம்போ என்று விடப்பட்டு, பேராசைக்கான திட்டங்கள் அமோகமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.

உயரே போகும் எதுவும் கீழே வந்துதானே ஆகவேண்டும், அமெரிக்காவில் ஆட்டம் கண்டதும் விஷயம் தெரிந்து ஆடாமல் வாழ்க்கை நடத்திய மனிதர்கள் கலங்கவில்லை, மற்றவர்கள் கதை, சொல்லி மாளாது, ஒரு தொலைக்காட்சியில் ஒரு நபர் ஒரே நாளில் தான் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டது சொல்லி அழுது கொண்டிருந்தார் அப்போது சொல்லப்பட்ட ஒரு அறிவுறை மனதில் நின்றது.

“வேலை போய்விட்டது க்ரெடிட் கார்ட் முதல் மற்ற எல்லா கடனையும் எப்படி அடைப்பேன் என்று இப்போது அழும் நீங்கள் அளவுக்கும் தகுதிக்கும் மீறி வருங்கால சம்பாதியத்தை இப்படி செலவு செய்திருக்கிறீர்களே, எவ்வளவு சேமித்திருக்கிறீர்கள்? பதில் சொல்ல எதுவும் இல்லை அவரிடம்.

குறைந்தது 2 வருடங்கள் வேலை இல்லாவிட்டாலும் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சேமிப்பு வைத்திருப்பவரால் மட்டுமே எந்த சூழ் நிலையையும் தாக்கு பிடிக்க முடியும். ஆயுள் காப்பீடும், மருத்துவ காப்பீடும் தேவையான அளவுக்கு குடும்பத்தில் எல்லோருக்கும் எடுத்திருக்க வேண்டும். நல்ல வேலையில் இருந்தாலும் உங்களின் கடைசி காலத்திற்காக இப்போதே நீங்கள் தயாராக வேண்டும்.

ஆம் சம்பாதிக்கும்போதே ஓய்வு காலத்திற்காய் முன்னேற்பாடுகள் செய்வது, குறைந்த பட்சம் குடும்பத்தில் மரியாதையாவது நமக்கு கிடைக்க வழி செய்யும். (மரு)மகனிடமோ, (மரு)மகளிடமோ ஒரு வாய் காபிக்காக கை ஏந்த வேண்டிய நிலை வராது, எவரும் எப்படியும் மாறலாம், நம்மை சார்ந்திருப்பவர்களை காப்பதோடு நம் கடைமை முடிவடைவதில்லை, நம்மையும் காத்துக்கொள்ள ஒரு திட்டமிடல் அவசியம் வேண்டும். ஆமாம் ’பெண்னும் - சன்னும்’ கொடுகாததை ’பென்சன்’ நமக்கு தரும். வேண்டியது அதற்கான திட்டமிடல் மட்டுமே.

கடைசி காலத்திற்கான சேமிப்பு அறிவியல் சார்ந்தும் பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் மருத்துவ வசதிகள் மேம்படுத்தப்படலாம், கண்டுபிடிப்புகள் மூலம் வாழ்க்கை முறை மேம்படும் 'LIVING LONG IS ALSO A RISK'. ஓரு காப்பீட்டு முகவர் தன் வாடிக்கையாளரிடம் சொல்ல முடியாதது இதுதான். ஒரு குடும்பத்தலைவரின் திடீர் இழப்புக்கு பிறகு அந்த குடும்பத்தின் கதி??

நம் யாராலாவது ஒரு லிஸ்ட் தயார் பண்ண முடியுமா? நம்மின் இறப்புக்கு பிறகு நம் குடும்பத்தை இன்னார் இன்னார் காப்பாற்றுவார், நம் குழந்தைகளுக்கான செலவுகள் இவரால் செய்யப்படும், இவர் என்னுடைய கடன்களை அடைத்துவிடுவார். அந்திம காலத்திற்கான செலவுகள் வரை பட்டியலிட முடியுமா? சுய பரிசோதனைகள் செய்தால் உண்மை சுடும். அவர் அவர் இருப்பு அவரவர்க்கு முக்கியம். இப்போது நாம் வாழ்வதும் அதுபோலத்தான். இல்லாவிடின் அனாதை ஆஸ்ரமங்களும், குழந்தை இல்லாதவர்களுக்கான சிகிச்சைகளும் தொடர்கதையாக இருக்குமா? போகட்டும் இன்றிலிருந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவ செலவுகள்? கல்வி செலவுகள்? தின வாழ்க்கைக்கான செலவுகள்? சரி இப்போதுக்கான மருத்துவ செலவுகள் திடீரென எதிர்பாராமல் ஏதாவது சுகமில்லை என்றால் எங்கு போய் நிற்பது? அல்லது எதிர்காலத்திற்கான சேமிப்பை உடைப்பதா? சிகிச்சைக்கு பிறகு? சிகிச்சை காலத்தில் வேலை போனால்? முடிவில்லாத கேள்விகள் தவறான நம் வாழ்க்கை கணத்தின் பரிட்சைக்காக தயாராய் இருக்கிறது.

ஐயா உங்களுக்கு இவ்வளவு ரூபாய் சம்பளம். இத்தனை வருடம் வேலை மிச்சமிருக்கிறது, உங்களுக்கான கடன் இவ்வளவு, உங்கள் குழந்தைகள் எதிர்காலத்திற்க்காக இவ்வளவு பணம் தேவைப்படும், ஏதேனும் மருத்துவ செலவுகள் வந்தால் அதற்கும் பணம் தேவை. இவ்வளவும் நீங்கள் திடீரென்று இறந்துவிட்டால் யார் பொறுப்பேர்ப்பார்கள்? அப்படி ஒரு இழப்பு ஏற்படின் யார் தயவும் இல்லாது உங்கள் குடும்பம் கரை சேர நீங்கள் குறைந்தபட்சம் இவ்வளவு ரூபாய்க்கு உங்களை காப்பீடு செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

ஒரு முகவரின் கேள்வி வாடிக்கையாளரை பார்த்து இதுதான். அப்படியே சொன்னால் பருப்பு வேகாது. உண்மை யாருக்கும் பிடிக்காது. அலட்சியமும், தவறான புரிதல்களும், இவ்வளவு முக்கியமான ஒரு விஷயத்தை ஒரு சாதாரணமான டார்கெட் விஷயமாக, வரி சேமிப்பிற்கான குறுக்கு வழியாக, மிக மிக முக்கியமாய் அற்ப செலவாக பார்கப்படுவது வேதனை.

ஒவ்வொரு பாலிசிகளும் வருங்கால தனிமனித நிகழ்வுகளின் ஆராய்ச்சியின் அடிப்படையில் வகுக்கப்பட்டதுதான். முக்கியமாய் 11 லட்சம் கோடி சொத்து வைத்துள்ள LIC அரசாங்கத்திற்கு பதில் சொல்ல கடமை பட்ட ஒரு நிறுவனம். 98 சதவிகிதத்திற்கும் மேல் இழப்புகளுக்கான தொகைகள் பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. 50 ஆண்டுகால வரலாறு அதற்கு இருக்கிறது. அலுவலகங்கள் சாதா தோசையாக இருக்கலாம், அனால் உள் செயல்பாடுகள் உலக தரதிற்கு சவால் விடுபவை. வாடிக்கையாளரின் தவறான தகவல்கள், முகவரின் தவறுகள் போன்றவை சரி செய்துகொள்ளக்கூடியதுதான். சாதா தோசை ஆபீஸ்கள் மூலம் இந்த முறை இவ்வளவு பொருளாதார சுனாமியிலும் பல கோடி ரூபாய் லாபமீட்டியிருக்கிறது. ஸ்பெஷல் சாதா தோசை கம்பெனிகள் பல கோடிகள் மைனஸ் ஓட்டு வாங்கி செலவுகளை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறது. இந்திய பங்கு சந்தையில் அதிக முதலீடுகள் LIC மூலமே செய்யப்படுகிறது. தட தடவென்று சென்செக்ஸ் விழுகிறதா கை கொடுத்து காப்பாற்றுவது LIC தான். தேன் தடவி மார்கெட் செய்ய முடியாது, ப்ரபலங்களை வைத்து சீன் காட்ட முடியாது, மக்கள் பணம் சூறையாடமுடியாது பல கட்டுப்பாடுகள். ஆழ்ந்து செல்ல செல்ல காப்பீடு திட்ட வரை முறைகள் நிறைய மூளை உள்ள மனிதர்களால் எல்லா காரண காரியங்களுடன் வகுக்கப்படுகிறது. ரிசப்ஷனில் போனில் பேசியோ, குரல் மட்டும் கேட்கும் குரளி வித்தைகள் இங்கே இல்லை, நேரே சென்று கிளையின் மேலாளரிடம் கேள்வி கேட்க்கலாம்,

மீண்டும் உணர்ச்சிகளுக்கு வேலை வைக்காமல் மேலே உள்ள 'ATTEND THE LAST NEED FIRST' திரும்ப படியுங்கள். வரும் காலம் வேறானது. இதுவரை அலட்சியம் காட்டியிருந்தால் உடனே ஆவன செய்யுங்கள், வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை பற்கள் பாதுகாப்பு, தேவையான அளவு ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீடு, ஓய்வு காலத்திற்கான சேமிப்பு, போன்றவை செலவுகளல்ல சேமிப்பு.

"வர காசு இந்த மாசத்துக்கே பத்தல இதுல பென்சன பத்தி பேச வந்துட்டான்" என்று யாராகிலும் கேட்டால்..

"வேலை செஞ்சு காசு சம்பாதிக்கிற, இப்பயே முடியலயே .. தம்பிடிக்கு வழியில்லாத அப்ப என்ன பண்ணுவீங்க???"

பதிலும் இருக்கிறது. எடுத்துக்கொள்ளுங்கள்....

  01.Hunt for a Job. 02. Depend on Children. 03. Live in Deprivation.

நம் வாழ்க்கை, நம் கையில்..

34 comments: