பலா பட்டறை: யாதும் ஊரே யாவரும் கேளிர்!!

யாதும் ஊரே யாவரும் கேளிர்!!



இன்றைக்கு இந்த அருமையான வலைபதிவு பார்க்கக் கிடைத்தது அதனை படித்து முடித்ததும் என்னுடைய பின்னூட்டத்தை இவ்வாறு பதிவு செய்தேன் மனிதனை தவிர்த்து இவுலகில் வாழும் எல்லா உயிரினங்களும் நமக்கு சொல்லாமல் சொல்லித்தருவது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை தான்.

//சிலை/உருவ வழிபாடு முறையை ஹிந்துக்கள் மட்டும்தான் பின்பற்றுகிறார்கள் என்று இல்லை. முஸ்லிம்கள் மெக்காவைக் குறித்த ஒரு காபாவையும், கிருஸ்தவர்கள் சிலுவையையும் ஒரு உருவம்/idol ஆக வரித்துக் கொண்டுதான் தத்தம் தொழுகைகைகளையும், பிரார்த்தனைகளையும் செய்கிறார்கள். படங்களும், ஓவியங்களும், சிலைகளும் இதைப் போன்ற தனிநபர் மன உருவங்களின் வெளிப்பாடுதான். பழுத்துப் போன ஆன்மீகவாதிகளுக்கு இறைவனைக் காண மீடியம்(medium) ஏதும் தேவைப்படுவதில்லை. ஆனால் என்னைப் போன்ற ஆரம்ப நிலை கத்துக்குட்டிகளுக்கு இதுதான் இறைவன் என்று சொல்லித்தான் தலை வணங்கவே கற்றுக் கொடுத்தார் என் தந்தை. பூஜையறையையும், கோவில்களையும் கடக்கும் போதெல்லாம் கன்னத்தில் போட்டுக் கொள்வதும், ஒரு ஆம்புலன்ஸ் அலறிக்கொண்டே போனால் கூட "கடவுளே அவர்களோடு இரு" என்று வேண்டிக் கொள்வதும் கூட, என் தந்தையார் எனக்குள் இறைவனாக வரித்த உருவங்கள் இருப்பதால் மட்டுமே. இல்லையென்றால் என் தலை வானை நோக்கியே பார்த்துக்கொண்டு, கர்வம் தலைக்கேறி, அடுத்தவர் உணர்வுகளை குனிந்தும் பார்க்காமல், அஹங்கார குழிக்குள் என்றோ விழுந்திருப்பேன். மனதிற்குள் மட்டும் உருவமே இல்லாத இறைவைனைக் காணும் அளவுக்கு நமக்கு பக்குவம் வந்து விட்டிருந்தால், நாம் இங்கு blog எழுதிக் கொண்டு, சாயந்திரம் சப்பாத்திக்கு தாலா இல்லை, உருளைக் கிழங்கு குருமாவா என்று கவலைப் பட்டுக் கொண்டிருக்க மாட்டேன். அடுத்த மாதம் வரும் அரியர்ஸ் பற்றியும், Activa மற்றும் Wagon-R சர்வீஸ் நாட்களையும் எண்ணிக் கொண்டு டைரியில் குறித்துக் கொண்டிருக்க மாட்டோம்.//

அற்புதமான பதிவு,

சுருங்க சொல்வதானால், மனித மனம் விசித்திரமானது உருவமில்லாத ஒன்றை அது ஏற்றுக்கொள்ள மறுக்கும் அதனால்தான் அண்டவெளி என்ற இந்த பிரபஞ்சத்தை அறிவியலில் இன்னும் ஆராய்ந்துகொண்டே இருக்கிறார்கள், ஒரு நொடிக்கும் இன்னொரு நொடிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்துகொள்ள கூட கடிகாரத்தில் இரண்டு புள்ளிகள் நமக்கு தேவை, அடர்ந்த இருட்டில் வைத்த பொருளை தடவி பார்த்து தெரிந்துகொள்ள நமக்கு தடையாய் இருப்பது நமது கண்கள் நன்றாக இருப்பதுதான், பார்வை இல்லாத ஒரு மனிதருக்கும் இதுதான் இது என்ற விளக்கங்கள் பார்வை உள்ள ஒரு மனிதராலேயே சொல்லித்தரபடுகிறது, அதை போலத்தான் இதுவும் இருட்டில் கருவாகும் நம்மை வெளிச்சத்திற்கு கொண்டுவருவது நம்மை சுற்றி நிகழும், நிகழ்ந்த காட்சிகள் தான். மற்றபடிக்கு எல்லா மதத்தில் (ஒரே நேரத்தில் பிரசவித்து அந்த) பிறந்த குழந்தைகளை ஒரு தாதி மாற்றிவைத்தால் எந்த கடவுளும் அந்தந்த மதத்தின் படி அக்குழந்தை வாழ வழி செய்வதில்லை, ஏனினில் எங்கு எல்லாமே நம்மாலேயே குழுக்களாய் தீர்மானிக்கப் படுகிறது. ஒவ்வொரு மதமும் இன்று ஒரு தெருவில் வசிக்கும் பல வீடுகளின் நிலையை அடைந்துவிட்டன, என்னை போலவே என் பக்கத்து வீட்டுகாரரும் இருக்க வேண்டும் என்ற நினைப்புதான் (மத) குழாயாடி சண்டைகள். ஊரெல்லாம் தண்ணி வந்து இரண்டாவது மாடியில் எட்டி பார்க்கும்போது 'எங்க வீட்டுல drainage எல்லாம் பக்கா ஆனா உங்க வீட்டுல ஏன் நாறுது? என்ற கேள்வி எழாது. அப்பொழுது உதவிக்கு வரும் நண்பனை நீங்க எந்த மதம் ன்னு கேள்வி கேட்க முடியாது, அப்போது அங்கே எப்போதும் காட்சி தரும் இறையை (நம்மை காப்பாற்ற வந்த அந்த மனிதனை - மனிதத்தை) ரொம்ப தேங்க்ஸ் ங்க என்று சிம்பிளாக சொல்லிவிட்டு குடும்பத்தோடு ஜாகை மாற்றி மீண்டும் மதம் பிடித்து இறை மறந்து இரை பிடிக்க போய்விடுவோம்.

ஆமாம் பாதை தொலைந்து பயனித்துகொண்டிருப்பவர்கள்தாம் நாமெல்லோருமே.. உருவமில்லாத, வெளிச்சமில்லாத அந்த பாதையில் நீங்கள் ஓய்வெடுத்த மரம் உங்களுக்கு சுகமாயிருக்கலாம், நான் ஓய்வெடுத்த ஓடை எனக்கு சுகமாயிருந்திருக்கலாம், நானும் நல்லா ஒய்வெடுத்தேன் நீங்களும் நல்லா ஒய்வெடுதேங்களா என்று கேட்டுவிட்டு நடை கட்டி பயணப்படுவது நல்லது, அன்றி உன் ஓடை நாத்தம், என் மரம்தான் வாசம் என்று சண்டை போட்டுக்கொண்டிருப்பது மூடத்தனம், ஏனென்றால் எல்லோருமே பயணப்படும் இந்த பாதை போய் சேருமிடம் ஒன்றே அன்றி வேறல்ல.


0 comments: