பலா பட்டறை: ஆடம்பர திருமணங்களும் பெண் குழந்தை வெறுப்புகளும்

ஆடம்பர திருமணங்களும் பெண் குழந்தை வெறுப்புகளும்
திருமணங்கள் அவரவர் வசதிக்கேற்ப எளிமையாகவும் ஆடம்பரமாகவும் பல விதங்களில் நடத்தப்படுகிறது. அநேகமாய் எல்லா மதத்திலும் இதற்கு விதிவிலக்கில்லை. உறவினர்கள் கூடி, மகிழ்ச்சிகளின் சங்கமத்தில் ஒரு ஆணும் பெண்ணும் கூட்டாய் ஒரு வாழ்க்கை நடத்த செய்யப்படும் அந்த திருமண நாளில் அவர்களுக்கு சிக்கனத்தை போதித்து சிறப்பான வாழ்வு சொல்லிதருகிறோமா என்றால் பெரும்பாலும் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. 

இப்போதெல்லாம் ஆடம்பரமும், பகட்டும், ஒப்பீடுமே திருமணங்களில் கோலோச்சுகிறது.. வாழ்க்கையில் ஒருநாள் வரும் திருமணத்தில் என்ன கணக்கு பார்ப்பது என்ற எண்ணமும் ஆடம்பரத்தின் வேர்களுக்கு உரமாகிவிட்டன. இங்கே உறவினர்கள் கூடுவதையும், களிப்பதையும் திருமணத்தை கொண்டாடுவதையும் குறை சொல்ல இதை நான் பதியவில்லை. ஆடம்பர போதை அழகான இந்த வைபவத்தை ஒரு நாள் கூத்தாக ஆக்கிவிட்டது தான் வேதனை. நன்றாக சாப்பிடும் ஒரு மனிதனால் கூட முழுவதும் உண்ண முடியாத வகையில் இலை நிறைய பதார்த்தங்களும், உணவு வகைகளும், காது கிழியும் இரைச்சல் பாட்டு கச்சேரிகளும், வெடிகளும் வான வேடிக்கைகளும் அனாவசியம் என்பது என் கருத்து. இரண்டு குடும்பங்களுக்குள் சரியான அறிமுகங்களும், வாழ்ந்து பார்த்தவர்களின் அனுபவ பகிர்தல்களும், எதிர்கால திட்டமிடலுக்கான எண்ண பகிர்தல்களுக்கும் இடமில்லாமல் இரைச்சல் ஆடம்பரங்கள் இரண்டு மனங்களின் புதிய வாழ்க்கை தொடக்கத்தை கூட்டத்தில் தொலைந்த குழந்தையாக ஆக்கிவிட்டது தான் கொடுமை.

பெண் குழந்தை பிறப்பது செலவின் ஆரம்பமாக பார்க்கப்படும், பல பெண் சிசு கொலைகளுக்கு காரணமாகும், தேவைக்கு அதிகமான ஆரோக்கியமில்லாத உணவு வகைகளுக்கு காரணமாகும் ஒரு (பெண்ணுடைய) குடும்பத்தின் நிதி வளத்தையே நிர்மூலமாக்கும் இத்தகைய ஆடம்பரங்கள் குறையும் நாளே, நல் மனித சமூகத்தின்  தொடக்க நாளாகும்.            


5 comments: