பலா பட்டறை: கேபிள்சங்கரின் லெமென் ட்ரீ - ஒரு வாசித்த கோணம்..

கேபிள்சங்கரின் லெமென் ட்ரீ - ஒரு வாசித்த கோணம்..சிறந்த, மிகச்சிறந்த, கேவலம் என்பதெல்லாம் ஒரு எழுத்தாளனுக்கு தேவையில்லாத அடைமொழி என்பது எனது கருத்து. தான் பார்த்ததை, யோசித்ததை எழுத்தில் சொல்லத்தெரிந்த கலை எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. நாம் விக்கித்து போவதாலோ, கண்களில் தாரை தாரையாக நீர் வழிவதாலோ, அதுவே மிக உன்னதம் என சொல்வது மிகையே, உணர்ச்சிகளையும், உடலுறுப்புகள் எழுச்சிப்படுத்தும் வாக்கியங்கள் உள்ளடக்கிய எழுத்துக்கள் எல்லாமே படிக்கும் எல்லாருக்குமே அதே உணர்வைத்தருவதில்லை. அதி உன்னதமான எழுத்துக்கள் மட்டுமே நான் படிப்பேன் அதுவே மிகச்சிறந்தது என்று வாதிடும் எவரும் ஒரு முறை தனது வாழ் நாளில் கண்டதை அல்லது தான் வாழ்ந்ததை ஒரு படமாக எடுத்து பார்க்கும்போது உணர்ச்சிக்குவியலான தருணமாகவே இருந்தாலும் பார்ப்பதற்கு மிகவும் வறட்சியானதாகவே இருக்கும். யாரோ இறப்பது செய்தி, நம்மோடே இறப்பவரே துக்கம். எங்கோ மேலை நாட்டில் எழுதப்படும் புதினங்கள் கூட நம்மால் சிலாகிக்கப்படுவது நாம் அதனை நம்மில் பொறுத்திப்பார்ப்பதினாலேயே அன்றி வேறெதுவும் இல்லை. மிக உன்னதமான இலக்கியங்கள் ஒவ்வொரு நொடியும் உலகெங்கிலும் நிகழ்ந்துகொண்டேதானிருக்கிறது. நீங்களும் நானும் கவனித்தோ, கவனிக்காதோ தாண்டிய தருணங்களிலும் அவை நிகழ்ந்திருக்கக்கூடும், அந்த அலைவரிசையில் ஒத்துப்போன யாரோ ஒருவன் அதை ரசிக்கிறான், ஒரு படைப்பாளியாக அவனிருப்பின் அது வெறும் செய்தியாக இல்லாது புதினமாகவோ, படமாகவோ, ஓவியமாகவோ, கவிதையாகவோ, கதையாகவோ அது வெளியாகிறது. அல்லது அப்படி இல்லாதவனால் வெறும் தகவலாகவே சொல்ல முடிகிறது.           

நண்பர் திரு.கேபிள் சங்கர் என்கிற சங்கர் நாராயணன் அவர்கள் எழுதிய சிறு கதைகளின் முதல் புத்தக தொகுப்பான லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் என்பதில் உள்ள 13 கதைகளும் தின வாழ்வில் நாம் பார்க்க, கேட்கக்கிடைக்கிற, சாதாரன நிகழ்வாக கவனிக்கத்தவறுகிற சம்பவங்களின் கோர்வையாகவே நான் பார்க்கிறேன். திரைப்படங்களில் தீராத ஆர்வம்கொண்ட இந்த நண்பரின் எழுத்து குறும்படங்கள் இவை எனத்தோன்றுகிறது. ஒவ்வொரு கதையும் ஒரு காட்சியை விரிக்கிறது.

முதல் கதையான முத்தம் மேலோட்டமாக பார்க்கும்போது விலைமகளின் பால் தீராத ஆசை கொண்ட ஒருவனுக்கு வலிய வரும் அது போன்ற ஒருத்தி தான் அணிந்து கொண்டிருக்கும் அடுத்தவர்களின் வக்கிரக்காலணிகளை அவனறியாமலே அவன் காலில் அணிவிக்கிற ஒரு நிகழ்வை சொல்கிறதாய் படுகிறது. முள்ளால் ஆன அந்த காலணி தரும் வேதனை அவன் மோகத்தை விலக்கி அவளை பெண்ணாய் உணர்த்தும் தருணத்தை சற்றே மிகைப்படுத்தி இருந்திருந்தால், ஒரு வேளை சிலாகித்து படித்துவிட்டு பின் ஏதோ ஒரு நாளில் எங்கேனும் விலகிய மார்பங்கங்கள் பார்க்குப்போது நமக்கு இந்த கதை மறந்து போக வாய்ப்புண்டு. ஆனால் இவர் சொல்லிய எளிமை விதம் நீங்கள் இது உங்களுக்கோ அல்லது தெரிந்தவருக்கோ நிகழ்ந்த ஒரு நிகழ்வாகவே அடுத்தவரிடம் சொல்லி ஒரு கைத்தட்டலையோ, பாராட்டையோ உங்களுக்கு வழங்க வாய்ப்பிருக்கிறது. நம்மில் அந்த காலணி ஏறும்போது அவ்வலி உடையோரை நாம் பார்க்கும் விதம் வேறாகலாம். வாழ்வில் நாம் கற்ற பெரும்பாலான விஷயங்கள் இது போலத்தான். மேலும் என்றோ நாம் செய்யும் சில அசாதரணமான காரியங்களை நினைத்துப்பாருங்கள் அது எழுதப்படாத ஒரு புதினமாக நம்மால் அடுத்தவருக்கு சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும். அது நானும் நல்லவனாய் இருந்திருக்கிறேன் அல்லது நானும் இப்படியெல்லாம் கேவலமாக இருந்திருக்கிறேன் என்பதை சொல்லி நம் காலணிகளை அடுத்தவனுக்கு ஏற்றும் முயற்சி.

இரண்டாவதான லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் வேறு கோணம், இங்கே ஒரு மது அருந்துகிற ஒருவனுக்கு கிடைக்கிற ஆச்சரிய அனுபவம். இதிலென்ன ஆச்சரியம் அனுபவம் என்று எண்ணலாம். இருக்கிறது மது அருந்த போகிறவர்கள் யாருமே நடைமுறை அனுபவத்திலிருந்து விலகி தன் நிலை மறக்கச்செல்லும் இடமாகவே மது அருந்தும் இடம் இருக்கிறது. மது அருந்தாத ஒருவனின் பார்வையில் அந்த இடம் கோமாளிகளின் கூடாரமாக இருக்க அந்த பானம் அருந்துபவர்களுக்கோ அது போதிமரம். ஞானம் பிறக்கும், தெளிவில்லாத நிலையில் தெளிவு பிறக்கும், பிடிமானமில்லாத வாழ்வில் மன்னராய் முன்னிருத்தும், எது முடிக்கவும் உறுதி தரும், அழாதவனையும் அழ வைக்கும். நீங்களும் உங்கள் மனமும்தான் யாருக்கும் தெரியாத ரகசியம்தான் எனினும் உங்களுக்கே தெரியாமல் மனம் எதை தேடுகிறது என்பது அந்த திரவம் குடித்தவுடன் வெளிப்படும். அப்படியான ஒரு இளைப்பாரலுக்காக சென்ற ஒருவனுக்கு அங்குள்ள சூழ் நிலைகள் மீறி, உற்சாக ஒலிகள் மீறி, பரவச பார்வை விருந்துகள் மீறி யாரோ ஒருவனின் உரையாடல்களில் அவன் மனத் தேவை பசியாறி ஆச்சர்யமடைவதாக முடித்துள்ள விதம் அழகு. என்றேனும் இம்மாதிரியான ஒரு அசாதாரண தருணம் உங்களுக்கு வாய்ப்பின் இக்கதை படித்தபின் திரவம் தாண்டி மனிதர்கள் தேட நீங்கள் ஆரம்பிப்பீர்கள் என்பது நிச்சயம்.

மூன்றாவது கல்யாணம் முதிர்கன்னிகளின் வேதனைகள் என்ற தளத்திலிருந்து விலகி அதனை ஒரு ஆணின் பார்வையில் சொல்லி இருக்கும் விதம் இன்றைய சமகால நிகழ்வுகளுக்கும் பொறுத்தமாகவே இருக்கும். திருமணம் தள்ளிப்போன ஒரு ஆணுக்கு இச்சை தீர்க்க எத்தனையோ சந்தர்ப்பங்கள் இந்த சமூகம் வழங்கி உள்ளது. வெறும் பாலினம் மாறி பிறந்த ஒரே காரணத்திற்காக ஒரே வேதனைக்கு பெண்ணிற்கு விலங்கும், ஆணிற்கு கூடவே சாவியும் தந்துள்ள இந்த சமூக அமைப்பினூடே இன்னும் திருமணமாகாத அந்த இளைஞன் உடலியல் வேதனைகள் உந்த, இச்சை தீர்க்க சாவி கொண்டு செல்லும் இடத்தில் சமூக கட்டுப்பாடுகளின் விலங்கின் சங்கிலிக்கான காரணம் புரிந்து மேலுன் தானே விரும்பி ஒரு பூட்டு பூட்டி சாவியை தொலைப்பதாக முடிகிறது. உலகில் எல்லா உயிரினங்களுக்கும் உணவும், உறவும் சந்ததிக்காக இருக்க நாம் மட்டுமே அதை அனுபவமாக்கிக்கொண்டு அல்லாடுகிறோம். தேடி அலைகிறோம் ருசிக்கிறது, கசக்கிறது என்று வகைப்படுத்துகிறோம். நாடி அடங்கி தள்ளாடும் பொழுதில் மட்டுமே அவை இரண்டும் எதற்கு என்பதின் அவசியம் புரிகிறது. நாமே நமக்கொறு விலங்கிட்டு நாமே அதன் திறவு கோலையும் தாங்கி அதனை தேடுவது போல அல்லது தொலைக்காதது போல பாசாங்கும் செய்யும் வாழ்கையில் இந்த கதையில் வரும் கல்யாணம் அந்த கட்டுப்பாட்டை எப்படி கையாளுகிறான் என்பது சிறப்பு. மேலும் ஒரு பெயரினை கேட்ப்பதிலேயே அவனின் தேவை என்னவாக இருக்கமுடியும் அவன் தேடிவந்தது என்ன என்பதை அழகாக கதாசிரியர் நம்மக்கும் புரியவைக்கிறார்.

அடுத்த கதை ஆண்டாள் பால்ய கால நட்பு என்பது மறக்க முடியாததோ, மறக்க விரும்புவதோ அதல்ல விஷயம், ஆனால் அந்த நட்பினை ஒரு நீண்ட இடைவெளியின் பிறகு நீங்கள் எதேச்சையாக பார்க்கும்போது காலச்சக்கரம் என்னதான் இருவருக்கும் தேய்ந்திருந்தாலும் முன்பிருந்த புதிய நிலையிலேயே பார்க்க வைக்கும். தேய்மானங்களே தெரியாது அன்றுள்ளதையே மனம் காண விழையும், காணும், களிக்கும். இந்தக் கதையும் அதுதான் எத்துனை வருடங்கள் கழித்து ஒரு பழைய நட்பை, பகையை நீங்கள் பார்த்தாலும் கடைசியில் நீங்கள் அணைக்காது விட்ட அந்த தீயானது அதே வடிவிலேயே உங்கள் முன் வந்து நிற்கும் ஒரு பேரதிசயம் அது இருவரும் அதே தீயை சுமந்து கொண்டிருப்பின் அது அந்த உறவு ஒரு உன்னத நிலையை அடைகிறது, இல்லாது போயின் சட்டென அந்த தீ தன்னை சுறுக்கி மீண்டும் மன அடுப்பில் நினைவுகளை சமைக்கப்போய்விடுவதை ஆண்டாள் மூலமாக நமக்குள்ளும் எறிய விடுகிறார்.

ஒரு காதல் கதை இரண்டு கிளைமாக்ஸ் என்ற கதையில் நினைவுகளைத்தாங்கும் மனிதற்களுக்கான போராட்டம். நினைவுகளின் தொடர்பு அறுந்தவன் ஒருவன், நினைவே இல்லாதவன் ஒருவன், இருவரின் நினைவுகளின் சாட்சிகளை நினைவாக கொண்டு ஒருவள், ஒரு கணத்தில், ஒரு சேர நினைவு திரும்பும் இருவரும் உயிர்ப்போடு வைத்திருக்கும் இறந்தகால நினைவுகள் உயிர்ப்பிக்கும்போது என்ன ஆகிறது என்பதை நம் நிகழ்கால யூகத்திற்கு விட்டுவிட்டார். எது முக்கியம் இனி வரப்போகும் தருணங்களா? மாற்றமுடியாது மறித்த தருணங்களா? எது சிறப்பு எது பயன் தரும் என்ற பல கேள்விகள் இதில் உள்ளது. கழிந்துபோன கல்வெட்டுகளால் தேங்கிய நினைவுகளின் வக்கிரங்களோ, உக்கிரங்களோ, உன்னதங்களோ நம்மை வழி நடத்திச்செல்லும் வாழ்வின் அபத்தம் இக்கதை படிப்பின் உணர்வீர்.

தரிசனம்.. மாயையானானது இவ்வுலகு. பார்க்கும் கோணத்தில் நீளங்கள் அகலமாகவும், உயரங்கள் பள்ளமாகவும், உருண்டை தட்டையாகவும், நிறமில்லாதது நீலமாகவும் தெரியும் அறிவுக்கு. அந்த அறிவினாலேயே ஆக்கப்பட்ட ஆன்மீகம், அதன் சார்புடைய நிகழ்வுகள் எப்படித் தெரியும் என்பது களம். நீங்களும் நானும் பார்ப்பது ஒன்றேயானாலும் உள்ளே தைக்கும் விதம் எப்படி மாறுகிறது என்பதை சூழலை அழகாக விளக்கிப் பின் சொல்லி இருப்பது சிறப்பு. இது நீங்களும் நானும் கடந்து வந்த, அல்லது நமக்கே நிகழ்ந்த ஒன்றாயும் இருக்ககூடும், நாம் கவனிக்ககூடாது தாண்டவைப்பதில் கவனாமாயிருக்கிற, அப்படி நம்மை பழக்குவதில் முனைவாயிருக்கிற சமூக நிகழ்வுகளின் ஜாக்கிரதைகள் இங்கே அதிகம். ஒன்றைப்போவதும், மீறுவதும், மீறுவதை காயப்படுத்தாது ஒன்றிப்போனவரிடம் ஒன்றிப்போனதாகவே மீறுவதின் மொழியிலேயே சொல்வதாய் இருக்கிற த்வனி கதைக்கான சமன்பாட்டை அப்படியே வைத்திருக்கிறது.

போஸ்டர் என்ற இந்த 7 வது கதையில் வருங்கால ரகசியங்களின் சுவாரஸ்யத்தை பின்னி அமைக்கப்பட்டிருக்கிறது. நம்மில் நாம் கணிக்க இயலாத அடுத்த கணத்தை ஒரிரு நாளின் பாதை மாறிய சிலரின் இயல்புவாழ்க்கை நிகழ்வாக அமைக்கப்பட்டிருக்கிறது. காண்பதும், கேட்பதும் பொய்யெனப்படும்போது தீர விசாரிக்கப்படுவதை இயல்புகளின் அடிப்படையில் கேலியாக நம் மனதில் படுமாறு கதை நகருகிறது. மீண்டும் கற்றுணர்ந்த விஷயங்களும், அசட்டையான தருணங்களும், ஆச்சர்யத்திற்கும், அதிற்சிக்குமான விதையாக தூவப்பட்டு முடிவில் நமக்கும் பின்புலத்தில் நாம் மறந்த அல்லது நினைவில் கொண்ட நம்மால் செய்யப்பட்டது என்று நம்பப்பட்ட கோமாளித்தனங்களை அல்லது உன்னதங்களை  நினைவிற்கு கொண்டு வருகிறது. பார்வைகளின் மூலம் வளர்க்கும் கருத்தியல்புகளின் முடிவுகள் உண்மையில் அதன் சரியான முடிவுகளா என்பது இதை படிக்கும்போது உணரலாம்.

துரை நான் ரமேஷ் சார்.. துரோகங்கள் நமக்கு புதிதல்ல, நன்றாய் விழுங்கி, தினமும் மல ஜலம் கழித்துக்கொண்டுதானிருக்கிறோம். ரவுத்திரம் தரும் துரோகம் என்பது எது? நம்பிக்கைத்துரோகம். நம்மை நாம் இழந்து சொல் வாளோ வலிமை வாளோ எடுக்கும் தருணம் அதுதான். மன்னிக்க இயலா அந்த துரோகத்தை, துரோகங்கள் மூலமே சீரழிக்கப்பட்ட ஒரு பெண் அப்படி செய்தவனை, காதலின் பால் ஜீரணித்து தன் உதிரத்தால் உணவளித்து, உணர்வுகளால் உத்தமியாய் இருந்து நம்பிக்கை துரோகத்தால் பத்தினியாய் மாறி, உதவி செய்தவருக்கு துரோகம் செய்யாது அன்பால் உயர்த்துவதாய் சொல்லி இருக்கும் விதம் கதையின் பெயரிலேயே குறியீடாக சொல்லி இருப்பதாகவே படுகிறது. சொல்லப்பட்ட விதம், களம் இரண்டுமே வார்த்தைகளில் கலப்பின்றி நமக்குள் ஊற்றப்படுகிறது.

என்னை பிடிக்கலையா? கதை.. எதிர்பாலின உறவுகளின் இயல்பான வெளிப்பாடே காமம். முயங்குதலில் உணர்ச்சி மட்டுமே மேலோங்கி நிற்கிறது. காமம் கழிந்தபின்னே இயல்புகளின் கோர்வையில் அபத்தமோ, ஆச்சர்யமோ, அருவெறுப்போ தெரிய வருகிறது. உணர்வுகளின் உச்சகட்டத்தில் சூழ் நிலைகள் மறப்பதே ஒருவேளை இதனை ரகசியமாக்கிதற்கான காரணமாயும் இருக்கக்கூடும். அந்த சூழ் நிலைகள் மறக்க வேண்டியே உச்சகட்டம் நோக்கிய சில மனிதர்களின் பயணங்கள் அவர்களின் வாழ்வியலை மாற்றிப்போடுவதாயும் இருக்கக்கூடும், இயல்பு என்பதற்கான விதிமுறைகள் மீறும்போது மனம் இயல்பினை விட்டு அதாவது இயல்பான இச்சையின் பார்பட்ட காமத்தினின்று விலகி விதிமுறைக்கான இயல்பினை தேடத்துவங்கும் அதிசயம் பலருக்கு நிகழும். அப்படி ஒரு முறை தவறிய காமத்தில் ஒருவளுக்கு தேடுதலின் முடிவும் ஒருவனுக்கு தேடுதலின் ஆரம்பமும் ஒரு  சேர அவர்கள் ஒன்று சேர்ந்து முடிக்கும்போது எழுகிறது. நமக்குள்ளும் பல கேள்விகள் எழுப்பும் இந்த கதை என்பது நிச்சயம்.

காமம் கொல்..சில கதைகள் தலைப்பினை கிடப்பில் போடவைத்து கதையி மிதக்க வைக்கும், பாத்திரங்களே அதில் மிதக்கும் ஆனால் இந்த கதையில் தலைப்பு அப்படியல்ல, மறந்தாலும் கதை படித்து முடிந்ததும் மீண்டும் தலைப்பை படித்து விடுங்கள் ஏனெனில் அதுவே இதில் பிரதானம். பனியினால் சூழப்பட்டிருந்தாலும் உலகின் எதிர் எதிர் துருவங்கள் வேறானவை. உங்களின் ஏளனங்கள், புத்திசாலித்தனங்கள், அதனை செயல்படுத்தும்போதே, அதனின்பார்பட்டே, அதன் மூலமே அது உங்களை முட்டாளாக்கினால்? உங்களின் வலை விரிப்பிலேயே நீங்கள் மீளா வகையில் வீழும்போது ஏற்படும் ஓர் அதிற்சி இந்த கதையில் காத்திருக்கிறது. ஒருவனின் கேள்வியே அடுத்தவருக்கான பதிலாக, வாய்ப்பாக, விருப்பத்தின் இரையாக மாறும் வேடிக்கை.

ராமி, சம்பத், துப்பாக்கி.. உண்மை என்பது இரு புறமும் கூரான ஒரு கத்தி. அது சொல்பவரை விட கேட்பவரை அதிகம் காயப்படுத்தும். உண்மையால் காயப்படும் ஒருவனுக்காய் அவன் விரும்பும் ஒரு பொய் சொல்லப்படும்போது அந்த பொய் அவனால் விரும்பப்படுகிறதா? கேட்ட வரம் கொடுத்த தேவதை செய்தது தவறா? இந்த கதையின் சூழ் நிலையில் நீங்கள் விரும்பவது என்ன? உண்மையா? பொய்யா? விடை தேடுங்கள். உண்மை எப்போதுமே இனிப்பதில்லை எனில் எப்போதும் பொய்யும் இனிப்பதில்லை.

விருப்பமும் காதலும் ஒன்றா? என்ற கேள்வி மாம்பழ வாசனை என்ற இந்த கதையில் உங்களுக்கு வரக்கூடும். இருவரின் செயல்களும் ஒன்று விருப்பமாகவோ அல்லது காதலாகவோ இருந்தால் அதிகம் பாதிப்பில்லாது நகரும் நிகழ்வுகள் விருப்பமாயும், காதலாயும் எதிர்கொள்ளும் சூழ் நிலையில் அது எவ்வாறு கதையில் பெயரில் வரும் மாம்பழம் போன்றே இருக்கிறது. தோல் சுற்றி இருந்தாலும் அது உள்ளிருக்கும் இனிப்பு சதையினை தின்பதில்லை, அந்த சதைக்கும் உள்ளிருக்கும் விதையெனும் மாங்கொட்டைக்கான விதியோ இது போன்ற எண்ணற்ற தோல் சதை இனிப்புகளை உற்பத்தி செய்ய வேண்டிய கடுமை தவம். மூன்றையும் ஒன்றாய் பார்க்கும் நமக்கோ சதை மட்டுமே முக்கியம், தவம் கலையும் கொட்டைக்கோ இனி விதையாகவேண்டிய கட்டாயம். வழித்தெடுத்த தோல்தான் இரண்டு ஆதாரங்களை கட்டிக்காத்ததறியாது வீசி எறியும்போது அந்த தோலே தன்னிடமிருந்து பிடுங்கப்பட்ட சதையின் வாசனையை நுகர்ந்து மகிழ்வதாய் பெயரிட்டு வேறு வடிவில் எல்லா கதை போலவே எளிமையாய் சொல்லப்படுகிறது.

கடைசியாய் நண்டு இனி எப்போதும் உள்ளுக்குள் ஊறிக்கொண்டே இருப்பதற்காய் பெயரிடப்பட்டதோ என்னவோ!  காசே கடவுள் என்றாகிவிட்ட இவ்வுலகில் எல்லா சுற்றம், உற்றத்தின் அன்பும் அரவணைப்பும் செலவில்லாத வார்த்தைகளிலும், அறிவுறைகளிலும் கட்டற்று வழங்கப்படும்நேரம், பணம் என்ற அளவுகோல் வரும்போது அது பாத்திரம் அறிந்தே பிச்சை அளிக்கப்படுகிறது. முகம் தெரியாது உங்களை சுற்றும் கடக்கும் மனிதர்களில் பாதிக்கும்மேல் இக்கதையின் அனுபவம் ஏதோ ஒரு வடிவில் இருக்கக்கூடும். அடுத்தது என்ன செய்ய என்ற கேள்வியிலேயே உங்களை அறியாது காலம் உங்களை கடக்கவைக்கும் வினோதங்கள் இது போன்ற நிகழ்வுகளில் நீங்கள் காணக்கூடும். வெறும் கண் முன்னே நடக்கும் செயல்களில் நீங்கள் ஒரு காட்சி பொருளாக பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களோடே அது நழுவிப்போகும்,

இவ்வளவு படித்தும் விக்கித்துப்போவதையும், கண்கள் குளமாக, உதடு துடிக்க வாசிப்பதே எனக்கு பிடித்த அனுபவம் என்பதில் நீங்கள் பிடிவாதமாக இருப்பின், இந்த புத்தகத்தை கடைசியிலிருந்து படிக்கத்துவங்கலாம் நண்டு உங்களுக்கான கதையும் கூட.

இந்த புத்தகத்தை வாங்க இணையதளம் மூலம் வாங்க சுட்டி
திரு கேபிள் சங்கர் பக்கம்  

தொகுப்பு விலை :50.00 நாகரத்னா பதிப்பகம், 3ஏ , டாக்டர் ராம் தெரு, நெல்வயல் நகர்,பெரம்பூர், சென்னை 11.

***

பின் குறிப்பு : போன பதிவில் சொன்னதுதான் :)))


.

21 comments: