பலா பட்டறை: ஊற்றம்..

ஊற்றம்..
ஸ்பரிசம் ஆயிரம்.. தாயில் ஆரம்பித்து, குழந்தையின் விரல்களினூடே அது என்னை உயிர்ப்பித்தே வருகிறது. ஒரே உடல்தான், உரசல்கள் யார் மூலம் என்பதே சிலிர்ப்புகளின் இன்பத்தை தீர்மானிக்கிறது. ஸ்பரிசத்தின் மொழி சொல்லும் நேரம் சிறியதாய் இருப்பினும், வார்த்தைகளற்ற உணர்ச்சிகளின் குவியல் உள்ளே உலுக்கிப்போடுகிறது.

யிரில்லாத துப்பட்டாக்களும் உயிருள்ள என்னை சித்திரவதை செய்திருக்கிறது. எங்கோ கூட்டத்தினூடே எல்லார் ஸ்பரிசமும் ஒன்றாகவே இருக்கிறது கண்கள் நிறம் பிரிக்கும்வரை. அதை நான் உணர நெடு நாட்கள் ஆயிற்று. வேட்க்கைக்கான நடுக்கங்களுக்கான உடலின் ஆயத்தத்தில் ஸ்பரிசங்கள் தேடி அலைந்தது மனது. உணர்ச்சிகளை திரியாய் உருட்டி பாலின எண்ணங்கள் எண்ணையாய் ஸ்பரிசக்குச்சி கொண்டு உரசல்களில் தீப்பிடித்து உணர்வுகள் வெந்து, தணியாமல் தணல் கனன்று, பிடித்தவைகள் கடக்கும் காற்றில் சாம்பல் விலகி கங்குகள் ஒளிர்ந்த வெளிச்சத்தில் மற்றெல்லாமும் மக்கிப்போனது.

மாய உயிர்ச் சுழலின் தந்திரம், அழியா விதைகளுக்கான சூட்சுமம், வட்டத்தின் தொடர் பயணம், நானும் நீந்த, தீண்டல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது, அன்பாய் வந்த தீண்டல்கள் முடிந்து, விரகத்தின் தீண்டல்கள் தீர்ந்து, பாசத்தின் தீண்டல்கள் முடிய இருக்கும் தருணத்தில் ஸ்பரிச சுவர்களின் பூச்சுகள் விரிசல் விட ஆரம்பிக்கிறது. இனி அன்புத்தீண்டல்கள் வேண்டி தவங்கள் தேவைப்படலாம், ஸ்பரிசம் உணர குத்திப்பார்க்கும் பரிட்சைகள் தேவைப்படலாம், நிரந்தர ஸ்பரிசங்கள் வேண்டிய, வேட்க்கையின் கணங்கள் நீண்ட விரும்பிய சயனத்தின் வரம் இப்போது கிடைத்திருக்கிறது. நினவுகளில் ஸ்பரிசத்தின் இன்பத்தினை மீட்டெடுக்க முடியவில்லை, அசை போட முடியவில்லை. தொடர் சயனத்தின் அழுத்தங்கள் கொப்புளித்து வரலாம், வலியில்லா ரணத்தின் வீச்சங்கள் என் தொடர் விதையின் ஸ்பரிசங்களுக்கு வேதனையோ, அருவெறுப்போ தரக்கூடும். ஒரே போல்தான் உடல் நடுங்குகிறது. வேட்கையிலும், வேதனையிலும் தளர்ச்சி மட்டுமே ஏளனம் செய்கிறது இருப்பை.
32 comments: