பலா பட்டறை: அமதி..

அமதி..எங்கிருந்தோ சந்ததி வளர்க்கவரும்
பட்டாம்பூச்சிக்காக ஒரு பூச்செடி வளர்த்தேன்
என் பட்டறையில்..

எதிரிக்காக வாலும், வாரிசுக்காக வாயும்கொண்டு
ஒரு பல்லியும் உலவிக்கொண்டிருக்கிறது உத்திரத்தில்,
பெய்த மழை நீரின் மிச்சத்தில்
வட்ட சுழற்சி தத்துவம், கனிவு, பாசம் என
வேண்டாதவைகள் மனதில் தேக்கி
ஆறறிவினால் கவலை எழுதிக்கொண்டிருக்கிறேன்..

என் இருப்பு சூழலை மாசுபடுத்துவதையும் பொறுத்துக்கொண்டு
சுவாசிக்க காற்றும் அவ்வப்போது நிரம்பிக்கொண்டுதானிருக்கிறது
உயிர் வளர்க்கும் வெற்றிடத்தில்.

மனமில்லாத குணங்கள் கொண்ட உயிர்களில் ஏனோ நான்
இரண்டும் கொண்டு ஏங்கிக்கொண்டிருக்கிறேன்..
பட்டாம்பூச்சியை பல்லி பிடிக்குமா? என்ற கவலை எனக்கு
பல்லி பிடித்தால் எனக்கு நீரூற்றுவானா? என்ற கவலை ஏதுமின்றி
பூத்துக்கொண்டேதானிருக்கிறது பூச்செடி..


.

38 comments: