பலா பட்டறை: அங்காடித்தெரு - சுடும் நிஜம்..

அங்காடித்தெரு - சுடும் நிஜம்..
அம்பை நாணில் பூட்டி குறிபார்த்துக்கொண்டிருந்த சிஷ்யனைப்பார்த்து வித்தை சொல்லித்தந்த குரு கேட்டார்.

"என்ன தெரிகிறது? "

"மரம்"

"பிறகு?"

"கிளை"

"ம்ம்.. பிறகு"

"ஒரு பறவை"

”சரி வேறு”

”அதன் கண்கள்..”

அடுத்த சிஷ்யனைப்பார்த்து கேட்டார்..

”உனக்கு??”

”பறவையின் கண்கள் மட்டும்..”

”இதுவே சரியான பார்வை. அம்பை விடு இலக்கு விழும் வெற்றி உனதே.”

--

ஆனால் அங்காடித்தெரு படம் முதல் கோணத்தை சொல்கிறது. இப்படித்தான் பல தேவைகளுக்காக பலதரப்பட்ட மனிதர்களை நம் அன்றாட வாழ்வில் சந்திக்கிறோம். நம் குறி நமது தேவைகள் மட்டுமே. அதில் தவறில்லை ஆனால் அதனை நிறைவேற்றும் மனிதர்களுக்கும் நம் போலவே ஒரு வலியுண்டு, வாழ்வுண்டு, ஆசைகளுண்டு அதனையும் புரிந்துகொள்வோம், மதிப்போம் என்று உணரவைக்கிறார் இயக்குனர் திரு.வசந்த பாலன்.  

இயல்பான காட்சிகள், பாத்திரங்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடு, திரு.ஜெயமோகன் அவர்களின் வசனம், போன்றவை படத்தின் பலம். உயர் ரக காரில் காலில் செறுப்பு கூட இல்லாது கடைக்கு வந்திறங்கும் முதலாளி (இவர்களின் வியாபார சூத்திரங்கள் அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு புரியும். என்ன இவர் வாட்ச் கட்டி இருக்கிறார், நான் பார்த்தவர்களுக்கு அது கூட கிடையாது!!)

 ஆண்டாண்டு காலமாய் இன்வெஸ்டிகேஷன் ஜர்னல்கள் (என்று சொல்லிக்கொள்ளும்) கூட முழுமையாய் சொல்லமுடியாத/இயலாத/சொல்லாத ஒரு களம் இங்கும் முடிந்தவரையில்  காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கே ஒரு பெரிய சபாஷ் போடலாம்.    

சின்னச் சின்ன கதா பாத்திரங்கள் மூலம் பெரிய விஷயங்கள் சொல்லப்பட்ட விதம் அருமை. முக்கியமாய் கதாநாயகியின் தங்கைக்கு வரும் ஒரு பிரச்சனை/கையாண்டவிதம். கண் தெரியாத பெரியவர், குள்ளமான மனிதரும் அவர் மனைவியும், நாயகியின் தோழிகள், நாயகன்/நாயகியின் முறிந்த காதல், கடையின் கண்கணிப்பாளர், இப்படியாக படம் முழுவதும்.

படம் இயல்பாகவே சில கேள்விகளை உள்ளுக்குள் எழுப்பும்? அது நம்மின், மனிதத்தின் சுயபரிசோதனை பற்றியதாக, அது புரிய விரும்பாதவர்கள்/தெரியாதவர்களுக்கு மேலே சொன்ன பறவையின் கண்கள் மட்டுமே தெரியும்.

கற்றுக்கொடுக்கப்பட்டவை தாண்டி கற்றலும் நல்லதுதானே.

வாழ்த்துகளும், நன்றியும்..

திரு.வசந்த பாலன் அவர்களுக்கும்,
மற்றும் கண்ணில் நிறைந்த அத்துணை கதாபாத்திரங்களுக்கும்.


மிகச் சில படங்களுக்கே நான் என்னை அறியாமல் அழுதிருக்கிறேன். அங்காடித்தெரு அதில் ஒன்று. கண்டிப்பாய் ’திரை அரங்கில்’ உணருங்கள்.


.

24 comments: