பலா பட்டறை: சுந்தர கண்டம்

சுந்தர கண்டம்உரையாடல் சார்பாக கிழக்கு மாடியில் நேற்றைக்கு திரையிடப்பட்ட THE BEAUTIFUL COUTNRY படம் மனதை தொட்டுவிட்டது. அமெரிக்க வியட்நாம் போரில் ஒரு வியட்நாம் பெண்ணிற்கும், அமெரிக்க ராணுவ வீரனுக்கும் காதல் வந்து பிறந்த குழந்தை வளர்ந்து பெரியவனாகி கள்ளத்தோணி ஏறி முதலில் மலேசியா சென்று, அங்கிருந்து கப்பலின் மூலம் அமெரிக்கா சென்று தன் தந்தையை காண செல்லும் கதை.


அமெரிக்கா வியட்நாமின் எதிரி ஒரு அமெரிக்கனின் மூலம் பிறந்த குழந்தை எதிரியின் குழந்தை. சுற்றமும் நட்பும் தரும் வேதனைகள், அலட்சியங்கள், எதிரே உள்ளவர் பாதங்கள் மட்டுமே பார்க்க முடிந்த சுதந்திரங்கள், தனது தாய் வேலை செய்யும் மேட்டுக்குடி குடும்பத்தில் அவளுக்கு தன் கண் எதிரே நிகழ்த்தப்படும் பாலியல் தொந்தரவுகள் எல்லாவற்றையும் தலை நிமிர்த்திபார்க்கமுடியாத, கேட்கமுடியாத அவல நிலையை அமைதியான, இறுக்கமான முகத்தினூடே கதையின் நாயகனாக வரும் இளைஞன் படம் முழுவதும் வெளியிட்டிருப்பது நம்மை அப்படியே பட களத்திற்கு எடுத்துச்செல்கிறது.

இடையில் கிடைக்கும் ஒரு சீனப்பெண்ணின் நட்பும் ஒரு அகதியாய் அனாதையாய் இருக்கும் இளம் பெண்ணிற்கு அதிகார வர்க்கம் தரும், இச்சை பிச்சைகளும் அதையும் வெறுமனே கண்டும் காணாமல் இருக்கும் கதாநாயகனின் நிலையும், உடலை வைத்தே நாயகனையும் அவனது தம்பியையும் அமெரிக்காவிற்கு கப்பலில் தப்பிக்க வைக்க அவள் செய்யும் உதவியின்போது "நீயும் கூட வா"  என்று அவன் அழைக்க "உள்ளே இறந்து நெடு நாள் ஆயிற்று நீச்சல் தெரியாததால் வெளியே இறக்க விருப்பமில்லை" என்று கூறும் காட்சிகள், மீறி அவளையும் தன்னுடே கப்பலுக்கு அழித்து செல்லுதல், இரண்டாயிரம் டாலர் பத்தாது என்று கப்பலில் முனையில் நிற்க வைத்து ஏஜென்ட் பேசும் பேரங்கள் போன்றவை படமக்கப்பட்டவிதம் அற்புதம்.


எந்த விதமான அடிப்படை வசதிகளுமின்றி கப்பலில் அமெரிக்காவிற்கு செல்லும் அகதிகள் படும் துயரங்கள் சமகால நம் இன மக்களின் அவலங்களை நிச்சயம் நினைவு படுத்தும். அதிலும் பாதிவழியில் இறந்து போகும் தன் தம்பியின் உடலை துணி சுத்தி கடலில் வீசும்போது ஒரு விசும்பல் கூட இல்லாமல் சோகத்தை நம்மில் காட்சிகள் ஏற்றுகின்றன. 

தன் கூடவே வரும் சீனப்பெண் அமெரிக்காவில் தனது வாழ்வாதாரத்துக்காய் சட்டென அமெரிக்க சூழலுக்கு மாறிப்போவதையும், தன் தந்தையை காணவேண்டுமென்ற நோக்கத்தில் வந்தவன் அதை மட்டுமே நோக்கி போவதையும் இருவருக்குமான காதலின் பிரிவின் மூலமே அழகாக படத்தில் சொல்லப்படுகிறது.

தன் தந்தையை காணப்போகும் வழியில் அவன் பார்க்கும் வியட்நாம் போரில் கண்ணி வெடியில் கை இழந்த முன்னாள் ராணுவ வீரர்கள், வழியில் லிப்ட் கொடுக்கும் மனித நேயமிக்க கார் ஓட்டுனர், அத்தனை வருடங்கள் தந்தையின் மீது வெறுப்பை சுமந்தவன், தனது தாயை பற்றி தந்தை சொன்னதை கேட்டு சட்டென மாற்றமடையும் மன நிலை, அகதியாய் ஜெயிலில் இருக்கும்போது திடீரென உடையும் குழாய் நீரில் எல்லா கவலையும் மறந்து சேற்றில் விளையாடுவது. சிறுவனாய் இருக்கும் தம்பி கப்பலில் உடல்நிலை சரியில்லை என்பதை "அம்மாவ பாக்கணும் போல இருக்கு" என்ற டயலாக்கில் தெரிய வைப்பது. அமெரிக்கா வரை வந்த முதியவர் ஒருவர் கப்பலிலிருந்து கரைக்கு வரும் வழியில் இறந்து போவது என பல்வேறு விஷயங்கள் படம் நெடுக்க மிக சிறப்பான முறையில் கதையோடே படமாக்கப்ப்ட்டிருப்பது அழகு. இன்னும் நிறைய விஷயங்கள் நான் இதில் கூறவில்லை அது நீங்களும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே.                

நல்லதொரு படத்தினை காண அழைத்த நண்பர் சிவராமனுக்கு நன்றிகள் பல.

வழக்கம் போல பதிவர் மாநாடு பிரபல பதிவர்களுடன் படம் முடிந்ததும் நடந்தது என்பதை கூறவும் வேண்டுமோ??    புதியதாய் ஒரு யூத்து பதிவர் (நிஜமாவே யூத்துங்க ) இரைச்சலும் இரைச்சல் சார்ந்ததும் (இது பதிவுலக உள்குத்துக்காக வெச்ச பெயர் இல்லையாம்:) ) வயலினோடு படம் பார்க்க வந்திருந்தார். அவர் கையில் இருந்த ஆறு விரல்கள் பார்த்து அப்போதே வந்த கவிதையை சங்கர் கேட்டு மயக்கமடைந்ததால் சற்று மாற்றி இங்கே..:))    


ஆறு விரல் ஞானமா?
அதிர்ஷ்டமா? தெரியாது..
ஆனால் நீ என்னை சுட்டி
குறை கூறியபோது 
ஒரு விரல் மட்டுமே என்னை காட்டியது 
நான்கு விரல்கள் உன்னை காட்டியது 
உன் ஞான விரலோ 
மண்ணை காட்டிக்கொண்டிருந்தது... .

56 comments: