பலா பட்டறை: எங்கே செல்லும்...பாகம்-2

எங்கே செல்லும்...பாகம்-2
எங்கே செல்லும்....எங்கே செல்லும்....
முன் குறிப்பு: கலைஞரின் ஓய்வு அறிக்கையைப் போல இழுத்துக் கொண்டே இருக்காமல், விசா அவர்கள் கொடுத்த யோசனையின் படி ஒரே கதையை ஆளுக்கொரு பகுதியாக எழுத ஒரு முயற்சி. நான் துவங்குகிறேன் அடுத்து தொடர நினைப்பவர்கள் கையைத் தூக்கிவிட்டு தொடரலாம்.
இப்படித்தான் முகிலன் ஆரம்பித்தார் முதல் பாகம்..
முதலில் முகிலனின் முதல் பாகத்தை படித்துவிட்டு இதை தொடரவும்..RULES:
1. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
2. கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார். 
3. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாரவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
4. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
5. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர் 
எழுதிவிடக்கூடாது என்பதற்காகவே.(பாகம் - 2)


”நிஜமா என்ன பிடிச்சிருக்கா ஸ்வா,”

 2 நாள்ல பத்தாவது முறையா கேட்டேன். தாமரை மொட்டு மாதிரி என் வலது கை விரல்களை ஒன்றாக தன் இடது உள்ளங்கையால் பிடித்து தனது நெஞ்சினில் வைத்துக்கொண்டே, உள்பக்கம் உதடு குவித்தவாறு ஒரு மோனப்புன்னகையோடு அவள் சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை

நான் திரும்பவும் நிஜமா என்று ஆரம்பித்தேன்...
”ஏய் இப்பதானே சொன்னேன், திரும்பவும் அதயே கேக்காதப்பா.”  மெதுவாய் இடது கையால் என் தலை கோதி இன்னும் நெருக்கம் காட்டினாள்.

எனக்கு பேரவஸ்த்தையாய் இருந்தது. நிறைய பூக்கள் மலர்ந்த மரத்தின் அடியில் திடீரென நம் மீது பூக்கள் மழையாய் பொழியும்போது ஏதோ ஒரு சந்தோஷம் உணர்வோமே, அட அதை விடுங்கள் பூக்களில்லாத மழையில் நனைந்திருந்த ஒரு மரத்தினடியில் காற்றின் வேகத்திற்கு மரம் சிலிர்த்து நீர்த்துளிகளால் சட்டென்று ஒரு  குளுமையுடன் சிலிர்ப்பு தருமே கிட்டத்தட்ட சாதாரணத்திற்கும், பைத்தியத்திற்கும் இடையிலான ஒரு நிலை.

தம்பிடிக்காசுக்கு பிரயோஜனமில்லாத வறிய இளமைக்காலம் என்னுடையது. என்ன எதிர்பார்த்து இந்த பேரழகி என்னிடம் இழைகிறாள்? ஐயோ யாராவது இப்ப போய் இதை நினைப்பார்களா? நிஜமாவே நீ லூசுதாண்டா மனசு அவளை பாரேன், பார்ரா என்று மைக் வைத்து உள்ளே அலறிக்கொண்டிருந்தது.

”என்ன யோசிக்கற நான் நல்லவளான்னுதானே? பொண்ணுங்களா வந்து உன்ன எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லக்கூடாதா, ம்..?”

அந்த மாநகராட்சி பூங்காவில் நிறைய பேர் எங்களை பார்த்தபடி நடை போட்டுக்கொண்டிருந்தார்கள். அவள் அணிந்திருந்த சட்டையின் முதலிரண்டு பித்தான்களை அழுத்திக்கொண்டு இன்னும் எனது வலது கை விரல்களை தாமரை மொட்டாகவே வைத்திருந்தாள்.

”ஏய் என்னாச்சு, யாரையும் பார்க்காத, த பார் நானே கவலபடல, நீ ஏன் பொண்ணுங்க மாதிரி சுத்தி சுத்தி பார்த்துகிட்டிருக்கற.”

 வரிசையான, கறைகளில்லாத வெண்மை நிற பற்கள் தெரிய ஸ்வா என்னை பார்த்து சிரித்த சிரிப்பில் நான் மெதுவாய் என் கைகளை அவளிடமிருந்து விடுவித்துகொண்டேன். கையில் கர்ச்சீப் இல்லை வியர்த்த முகத்தை கைகளால் துடைத்த போது அவளின் வாசம் என் உள்ளங்கைகளின் மூலம் என் முகத்தில் பரவியது.

”என்ன பவ்டர் யூஸ் பண்ற ஸ்வா?”
“ நத்திங் ஸ்பெஷல் இங்க கிடைக்கிறதுதான்.” அவள் பெயர் சொன்னாள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது, நானும் யூஸ் பண்னி இருக்கிறேன் ஆனால் இந்த வாசம்.

எனக்கு எல்லாமே புதுசாக இருந்தது, அவளுக்கு எதிலும் பயமில்லை, என் பயங்களை அந்த உள்ளுதட்டு மோன சிரிப்பில் ஊடே குருகுருப்பாய் பார்த்துக்கொண்டிருந்தாள். சேர்ந்தார்போல நான்கு வார்த்தை ஆங்கிலத்தில் பேச வராது எனக்கு, அவளோ தடி தடியாய் ஆங்கில கதை புத்தகங்கள் படிப்பவள்.

”சரி இப்ப என்ன எனக்கு உன்ன நிஜமா பிடிச்சிருக்கான்னு தெரியனும் அவ்ளதானே?” இப்பொழுது நான் சிரித்தேன், ஆமாம் என்று தலை ஆட்டினேன்.

”சிம்பிள்டா அடிக்கடி உன்ன பஸ் ஸ்டாப்ல பார்த்திருக்கேன், உன் ஃப்ரெண்ட்ஸ்லாம் ஸூப்பரா டாவடிக்க நீ மட்டும் தலை கூட நிமிர்த்தாம அமைதியா நின்னுகிட்டிருப்ப.”

” அப்ப நீயும் பஸ்ல டைய்லி என்ன பார்ப்பியா?”

“ ம்ஹும்.. சில சமயம்தான், எங்க அப்பாகூட மோஸ்ட்லி கார்ல போய்டுவேன், ஆனா அப்பவும் உன்ன பார்த்திருக்கேன்.”

“ அது மட்டும்தானா? ”

“ஹேய்..இது என்ன காதல் பிஹெச்டியா? ஹாங்..”மீண்டும் சிரிப்பு.

 ” அது மட்டும்னு இல்ல நான் போல்டான பொண்ணுதான், என் வீட்டு பாக் ஸைட்ல என்ன டாவடிக்கிற பக்கத்து வீட்டு பையன கலாட்டா பன்றதுக்காக, பொறுமையா ஒரு தம் அடிச்சிருக்கேன். என்ன பஸ்ல இடிச்சவன்கிட்ட இன்னும் பக்கத்துல வந்து இடிங்க உங்க அம்மாவ இடிக்கறமாதிரியே இருக்கும்னு சொல்லிருக்கேன்.”

நான் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்துகொண்டேன். திரும்பவும் சிரித்தாள், இந்தமுறை மொத்த பார்க்கும் எங்களை பார்த்ததுபோலவே இருந்தது எனக்கு.

”ஆனா உன்ன பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிரிச்சு, ஐ டோண்ட் நோ,,சம் திங் ஸ்ட்ரேன்ஜ், இட்ஸ் டோட்டலி நியூ ஃபார் மீ டூ...”

 என் முகம் மாறுவதை கவனித்து ..

”ஓகே ஓகே உனக்கு இங்கிலீஷ் தெரியாது, நீ ரொம்ப படிக்கல, எனக்கு பஸ் டிக்கெட் எடுக்க கூட காசில்ல ப்ளா ப்ளா சாரி சாரி சாரி.”

 எனக்கு உள்ளே குத்தியது. அப்போதுதான் கவனித்தேன் இரண்டு போலீஸ்காரர்கள் எங்களை நோக்கி வருவதை. ஸ்வா என் கையை பிடித்து ”உட்கார் எழுந்திருக்காத” என்றாள்,

”டேய் நீ இங்க இருக்கியா?”

ஒரு கான்ஸ்டபிள் கொத்தாய் என் சட்டையை பிடித்து பளார் என்று அடித்தார், கீழே விழும்போதே தலை சுற்றியது, சுதாரிப்பதற்குள் நங் கென்று எதோ தலையில் பட்டது..ப்ளாக் அவுட் டோட்டல் நிசப்த்தம்

“சொல்லு ஏன் ஸூப்பர் மார்கெட்ல குழந்தைய தூக்கிட்டு போன?”

மெல்ல சுற்று முற்றும் பார்த்தேன், எப்போது இங்கே வந்தேன், இவர் என்ன கேட்கிறார்? உடலெல்லாம் வலித்தது, இன்ஸ்பெக்டர் டேபிளில் இந்தியா அபார வெற்றி பாகிஸ்தானை வீழ்த்தியது தினசரியில் பெரிய போட்டோவுடன் படபடத்துக்கொண்டிருந்தது இந்த படம் எங்கயோ பார்த்தோமே..

”டேய் உன்னதான் கேக்கறேன்.. ”

விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினைமலர்
தெரி திர டெரி யுருளிகன மிகு முரண் மிகு
கடறரு மணியொடும் முத்து யாத்த நேரணி
நெறி செறி வெறி உறு முரல் விறல் வணங்கு அணங்கு வில்
தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மலர்மார்பின்
எரி வயிர நுதி நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினிற்
றுணி படல் இன மணி இயலெறும் எழிலின்
இசை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்மலர்
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை

பெரும் குரலெடுத்து யார் பாடுவது? அட எப்போது மேசையில் ஏறினேன், எதிரில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில்,, நானா..னா நானா பாடுகிறேன்...அப்படியே எகிறி குதித்து வாசலை நோக்கி ஓடினேன்..

”ய்யேய் அவன பிடிங்கப்பா...”

யாரோ துரத்திக்கொண்டு வரும் சத்தம் கேட்டது, என்னை தாண்டி சென்ற காரில் ஒரு ஆள் என்னை பார்த்து ”அவந்தான் வண்டிய திருப்பு பிடி..”

 நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தேன். வெளிச்சம் கண்ணை கூசியது . ஆமா நான் ஏன் ஓடிக்கிட்டிருக்கேன், எங்க போயிடிருக்கேன்.. திடீரென்று வளைவில் திரும்பிய பஸ்சில் ரன்னிங்கில் ஏறி மெல்ல எட்டிப்பார்த்தேன்...

”ஹலோ.”.பஸ்ஸில் யாரோ கூப்பிட்டார்கள்.
      

(தொடரும்)


அடுத்தது யாருங்க.. பதிவு போட்டுட்டு லின்க் முகிலனுக்கு அனுப்பிடுங்க அப்படியே எனக்கும். ( தினத்தந்திலதான் கன்னி தீவு வரனும்னு சட்டம் இல்லீங்களே:) ) 33 comments:

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

என்ன நடக்குது? ஒரு முடிவோட டெரராக் கெளம்பீட்டீங்க போல! நடத்துங்க.இதுவும் நல்லா இருக்கு.
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்.

பிரபாகர் said...

முகிலனையும் படிச்சிட்டு உங்களையும் இப்போதான் படிச்சேன்... சூப்பரா கொண்டு போறிங்க... கொஞ்சம் யோசிக்கிறேன்.... யாரும் முந்திக்கலன்னா தொடருகிறேன்...

பிரபாகர்.

பலா பட்டறை said...

முகிலன் பக்கத்தில் முதல் பாகம் படித்தீர்களா சகோதரி?::)

பின்னூட்டம் இடும்/இடாத அனைவரும் அதனையும் படித்து தொடர விருப்பமிருப்பின் சும்மா கலக்குங்க...::)))

பலா பட்டறை said...

வாங்க பிரபாகர்..முதல்லயே தொடர்ந்துட்டா தல சுத்தாது..::)))))))

அதனாலதான், சீக்கிரம் வாங்க.::))

எப்படி போனாலும் முடிவையும் யோசிச்சு வெச்சிருக்கேன். பார்க்கலாம். பிரியா வேற கலகலன்னு கடைசியா வாங்கப்பான்னு நான் முடிக்கறேன்னு சவால் விட்டிருக்காங்க..:))

பட்டாபட்டி.. said...

அண்ணா.. என்ற அறிவுக்கும், ஏத்த மாறி
ஏதாவது பண்ணுங்கண்ணா...
இந்த ஆட்டத்துக்கு நான் தகுதியில்லாதவன்.

சாரிங்கோ..

பிரபாகர் said...

நான் தொடருகிறேன்... இடுகையை நாளைக்கு இடுகிறேன்... சரியா?

பிரபாகர்.

செ.சரவணக்குமார் said...

நல்ல முயற்சி நண்பா. கலக்குங்க‌

ஹாலிவுட் பாலா said...

இது மாதிரி.. முன்னாடி, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் & சுபா மூணு பேரும் சேர்ந்து எழுதியிருந்தாங்க.

இப்ப நீங்களா??! :) :)

கலக்குங்க. ஆனா.. யார் தொடரப் போறாங்கன்னு.. அந்த பாகத்தை எழுதினவங்க முடிவு பண்ணினா நல்லாயிருக்குமே.

அல்லது முதல்ல கை தூக்குறவங்க பெயரை, பதிவிலாவது அப்டேப் பண்ணலாமே.

பிரபாகர் மாதிரி இன்னொருத்தர் இதோட மூணாவது பாகம் எழுதினா.. ஏற்படும் குழப்பத்தை நினைச்சிப் பாருங்க. :) :)

அப்புறம்.., இன்னுமொரு 10-15 பதிவுகள் போனப் பின்னாடி.. இதோட ஃபாலோஅப் இன்னும் பிரச்சனையாகும். அதுக்கெல்லாம்.. எதாவது ஐடியா வச்சிருக்கீங்களா?

(சைடில் ஒரு HTML கேட்ஜெட் போட்டு.. லிங்க் அப்டேட் பண்ணுற மாதிரி)

Sangkavi said...

இதுவும் நல்லாத்தான் இருக்குங்க...

பலா பட்டறை said...

பட்டாபட்டி.. said...
அண்ணா.. என்ற அறிவுக்கும், ஏத்த மாறி
ஏதாவது பண்ணுங்கண்ணா...
இந்த ஆட்டத்துக்கு நான் தகுதியில்லாதவன்.

சாரிங்கோ//

நண்பரே அப்படி ஒன்றும் இல்லை.. நீங்களும் முயர்ச்சி செய்யலாம்..:))

பலா பட்டறை said...

பிரபாகர் said...
நான் தொடருகிறேன்... இடுகையை நாளைக்கு இடுகிறேன்... சரியா?

பிரபாகர்//

ரைட்டு..:))

த்

பலா பட்டறை said...

தொடர விரும்பும் மக்கள் நான்காவதா அல்லது அடுத்ததா என்பதை தெரியப்படுத்தவும்..

பலா பட்டறை said...

செ.சரவணக்குமார் said...
நல்ல முயற்சி நண்பா. கலக்குங்க‌//

வாங்க சரவணக்குமார்..நன்றி.:)

பலா பட்டறை said...

ஹாலிவுட் பாலா said...
இது மாதிரி.. முன்னாடி, ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் & சுபா மூணு பேரும் சேர்ந்து எழுதியிருந்தாங்க.

இப்ப நீங்களா??! :) :)

கலக்குங்க. ஆனா.. யார் தொடரப் போறாங்கன்னு.. அந்த பாகத்தை எழுதினவங்க முடிவு பண்ணினா நல்லாயிருக்குமே.

அல்லது முதல்ல கை தூக்குறவங்க பெயரை, பதிவிலாவது அப்டேப் பண்ணலாமே.

பிரபாகர் மாதிரி இன்னொருத்தர் இதோட மூணாவது பாகம் எழுதினா.. ஏற்படும் குழப்பத்தை நினைச்சிப் பாருங்க. :) :)

அப்புறம்.., இன்னுமொரு 10-15 பதிவுகள் போனப் பின்னாடி.. இதோட ஃபாலோஅப் இன்னும் பிரச்சனையாகும். அதுக்கெல்லாம்.. எதாவது ஐடியா வச்சிருக்கீங்களா?

(சைடில் ஒரு HTML கேட்ஜெட் போட்டு.. லிங்க் அப்டேட் பண்ணுற மாதிரி)//

ஒரு வெப் சைட் ஓப்பன் பண்ணி தரலாம்ல..:))

தகவலுக்கு நன்றி தல.. போட்டுடலாம்..:))

நீங்க ஆட்டத்துக்கு வரலயா..??

வானம்பாடிகள் said...

நல்லாக் கெளப்புறாய்ங்கப்பா பீதிய..கதையச்சொன்னேன்...கதையச்சொன்னேன்.

பலா பட்டறை said...

Sangkavi said...
இதுவும் நல்லாத்தான் இருக்குங்க..//

அப்புறம்... 5ஆவதோ, 6ஆவதோ நீங்கதான் சங்கவி..:)) தயாரா இருங்க.:)

VISA said...

பிரசன்ட் சார். முழுசா படிச்சிட்டு வர்றேன்...

VISA said...

//நான் தொடருகிறேன்... இடுகையை நாளைக்கு இடுகிறேன்... சரியா?//

ஆஹா ஆட்டம் கள கட்டுது. நானும் ஆட்டத்துல இருக்கேன். நான் எழுதுறதுக்குள்ள கதையை முடிச்சிடாதீங்க....அப்படியே இழு இழுன்னு இழுத்து ஒரு வருஷத்துக்கு எழுதுறோம்.

பலா பட்டறை said...

ஆஹா ஆட்டம் கள கட்டுது. நானும் ஆட்டத்துல இருக்கேன். நான் எழுதுறதுக்குள்ள கதையை முடிச்சிடாதீங்க....அப்படியே இழு இழுன்னு இழுத்து ஒரு வருஷத்துக்கு எழுதுறோம்//

வாங்க விசா..:)

அவ்வளவுதானா..::)))))))) நான் கன்னித்தீவு ரேஞ்சுக்கில்ல எதிர்பார்த்தேன்.

VISA said...

செமத்தியா கொண்டு போயிட்டீங்க. ரொம்ப எதிர்பார்ப்ப கிளப்பிட்டீங்க. பதிவுலகத்துல இத பத்தி விளம்பரம் பண்ணுங்கப்பு. செம பிக் அப் ஆகுது.

கலகலப்ரியா said...

superb....!!! asaththitteenga..

Chitra said...

”ஆனா உன்ன பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிரிச்சு, ஐ டோண்ட் நோ,,சம் திங் ஸ்ட்ரேன்ஜ், இட்ஸ் டோட்டலி நியூ ஃபார் மீ டூ...”

என் முகம் மாறுவதை கவனித்து ..

”ஓகே ஓகே உனக்கு இங்கிலீஷ் தெரியாது, நீ ரொம்ப படிக்கல, எனக்கு பஸ் டிக்கெட் எடுக்க கூட காசில்ல ப்ளா ப்ளா சாரி சாரி சாரி.”
............ha,ha,ha,ha......

அசத்துங்க. .....

தொடர் பதிவு ஐடியா நல்லா இருக்கு. அடுத்து யாருங்கோ?

பிரியமுடன்...வசந்த் said...

செம்ம...!

விசா சார் பயபுள்ளைக உங்கள பீட் பண்ணிருவாக போலியே...!

அதுக்குள்ளாற உங்களோட பார்ட் போட்டுடுங்க....!

பா.ராஜாராம் said...

நல்லா எழுதி இருக்கீங்க சங்கர்.

seemangani said...

நல்லாத்தே இருக்கு...
நமக்கு வரும் ஆனா வராது....வர்ர்ட்டா...

ஹாலிவுட் பாலா said...

நான் எழுதினா... கதை பெட்ரூமை விட்டு வெளியே போகாது. பரவாயில்லையா?? :)

நட்புடன் ஜமால் said...

நல்லதொரு முயற்சி

வாழ்த்துகள் அனைவருக்கும்.

S.A. நவாஸுதீன் said...

அட!

இது ஒரு நல்ல முயற்சிதான். திறமையுள்ளவர்கள் அனைவரும் பங்கேற்கனும். அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நிறைய விசாக்கள் வரட்டும் பதிவுலகத்திற்கு.

பலா பட்டறை said...

வானம்பாடிகள் said...
நல்லாக் கெளப்புறாய்ங்கப்பா பீதிய..கதையச்சொன்னேன்...கதையச்சொன்னேன்//

நன்றிங்க சார்..:))

ஹாலிவுட் பாலா said...

இங்கே நாலாவது பாகம்.. உங்களை குதற ரெடி..

http://www.hollywoodbala.com/2010/01/4.html

ஜெஸ்வந்தி said...

நல்லாக் கெளப்புறாய்ங்கப்பா

நாஞ்சில் பிரதாப் said...

முதல் பாகம் டெரர்னா இது கவிதை...

எலே பாண்டி அடுத்தது பிரபாகரண்ணே வூட்டுக்கு வண்டிய விட்றா...

thenammailakshmanan said...

”ஆனா உன்ன பார்த்த உடனே எனக்கு ரொம்ப பிடிச்சிரிச்சு, ஐ டோண்ட் நோ,,சம் திங் ஸ்ட்ரேன்ஜ், இட்ஸ் டோட்டலி நியூ ஃபார் மீ டூ...”

என் முகம் மாறுவதை கவனித்து ..

”ஓகே ஓகே உனக்கு இங்கிலீஷ் தெரியாது, நீ ரொம்ப படிக்கல, எனக்கு பஸ் டிக்கெட் எடுக்க கூட காசில்ல ப்ளா ப்ளா சாரி சாரி சாரி.”

enakum intha varikaL idiththuirukku Shankar

nalla flow irukku kathaiyil

fantastic....asathuriingka SHANKAR