பலா பட்டறை: நூற்றுக்கு பூஜ்யம்..

நூற்றுக்கு பூஜ்யம்..

படம் நன்றி: வித்யாஜி.


100 வது பதிவில் வாழ்த்தி பின்னூட்டமிட்டு, மின் அஞ்சல் மற்றும் தொலைபேசியிலும் வாழ்த்திய அனைத்து நட்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். :))நேற்று திரு.பாஸ்கர் சக்தியின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போயிருந்தேன். வழக்கம் போல பதிவர் சந்திப்பாக முடிந்தது:) கேபிள்ஜி, தண்டோராஜி, அடலேறு, பெஸ்கி, யுவகிருஷ்ணா, அதிஷா மற்றும் எனது நண்பர் பைத்தியக்காரன் அவர்களையும் சந்தித்தேன்.

குறுகிய கால அவகாசத்தில் இட மாற்றம் செய்திருப்பினும், நிகழ்ச்சிக்கு நிறைய மக்கள் வந்திருந்தது மகிழ்ச்சியாய் இருந்தது. இயக்குனர் திரு.மகேந்திரன் அவர்கள் பேச்சை முதல் முறையாக கேட்கிறேன், வசீகரமான ஒரு குரல், நடை. திரு.ஞாநி அவர்களும் பாஸ்கர் சக்தியை பற்றி பேசினார். சமீபகாலங்களாக அவர் கூட்டங்களில் வலியுறுத்திவரும் ஹாலிஸ்டிக் அப்ரோச் எனப்படும் முழுமையான ஒரு பார்வை, ஞானம், அறிவு, செயல் இப்போதுள்ள சமூகத்திற்கு வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக சொன்னார்.

முன்னேற்ற கடிவாளங்கள் நம்மை சிறை படுத்தியதின் விளைவுதான் அந்த முழுமையான பார்வையை குருடாக்கியது என்று நினைக்கிறேன். இனி ஒரு மாதத்திற்கு மின்சாரம் கிடையாது. பெட்ரோல், டீசல் கிடையாது என்ற ஒரு அறிவிப்பு காலை செய்திகளில் வந்தால் அடுத்து என்ன என்ற ப்ளான் ‘பி’யாரிடமும் இல்லை.

மருந்துகளும், மின்சாரமும் நமக்கான தின வாழ்க்கையின் எஜமானர்களாக ஆகிவிட்டது. இதை சார்ந்தே எல்லா இயக்கமும், தனி மனித தனித்துவமும் வெளிப்பாடும் நடை போடுகிறது. அறிவியல் முதலில் ஒன்றை புகுத்துகிறது, நம்மை பழக்க வைக்கிறது, அடிமையானதும் அதற்கு விலை வைக்கிறது, பின் தொடர்ந்து நம்மை ஏதாவது ஒரு கண்டுபிடிப்பின் பெயர் கொண்ட ஸ்ட்ரா போட்டு உறிந்துகொண்டிருக்கிறது.

ஆயிரத்தெட்டு உரிமைகள் பேசினாலும், ஏதோ ஒன்றை சார்ந்திருப்பது என்பதை தவிற்க இயலாத வாழ்வு சூழலில் நாம் இருப்பதை மறுக்க இயலாது. அறிவியலை என்னதான் புகழ்ந்தாலும் அது நம்மை, மனித இனத்தை ஒரு காட்சிப்பொருள் ஆக்கி ஸூவில் வைத்துதான் பார்க்கிறது.

 அறிவியலை குறை சொல்லவில்லை. ஆனால் அது சாஸ்வதமான எதையும் தரவில்லை. எல்லாமே இதுவரை Trial & Error. ஆனால் Errorகளுக்கான பதில்கள் எப்போதும் தயாராய் இருப்பது அறிவியலின் புத்திசாலித்தனம். யூசர் மேனுவல் வழங்கும் அதன் விற்பனைகளில் நாம் வெறும் வாடிக்கையாளராய் இல்லாது அடிமையாய் ஆனதுதான் நம்மை புத்திசாலி முட்டாள்களாக வைத்துள்ளது. எல்லாவற்றையும் கேள்விகள் கேட்ட விஞ்ஞானம் பதில் சொல்லும் அளவுக்கு புத்திசாலியா? தெரியவில்லை.

நூற்று சொச்ச ஆண்டுகளில் நாம் இயற்கையை விட்டு வெகு வேகமாக ஓடி வந்த தூரம் என்பது வளர்ச்சியா? நம்முடன் ஓடி வராத மற்ற உயிரினங்களுக்கு நாம் அறியாமலும் அறிந்தும் அளித்த அநீதிகள்தான் நமது முன்னேற்றமா?
முன்னேற்றத்திற்கான கண்டுபிடிப்புகள் நம்மை சார்ந்ததாகவே இருப்பதின் சுயநலம் மிகவும் அபத்தமாக இந்த குறுகிய காலத்திலேயே எதிர் விளைவுகளின் மூலம் நாம் அனுபவித்துக்கொண்டு இருப்பதுதான் நாமது ஆறறிவு தேர்வுக்கு கிடைத்த மதிப்பெண். அது..

நூற்றுக்கு பூஜ்யம்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. மனிதர்களை தவிற மற்றெல்லா ஜீவராசிகளும் மொழியே தெரியாமல் கடைபிடிக்கிற வித்தை.  

மிக விரைவான பரமபத ஆட்டம் முதல் சுற்று முடிந்து, ஏணிகளில் ஏறி, பாம்புகளில் இறங்கி இரண்டாவது ஆரம்பம்,  தாய கட்டைகள் வீசுகிறேன்..

எனக்கான சோழி எடுத்து வைக்க, ஏணிகளுடனும், பாம்புகளுடனுமான எனது பயணம்..

தாயம் ஒண்ணு....
பெயர்..இனி பலா பட்டறை அல்ல ஷங்கர்தான் ::))

51 comments: