பலா பட்டறை: யாசகம்..

யாசகம்..

பல வருடங்களாக கவனிக்கும் ஒரு நபர் ஜி.பி ரோடும், அண்ணா சாலையும் சந்திக்கும் அந்த ஒரு வழி சாலையில் வெலிங்டன் ப்ளாஸா அருகில் யாசகம் பெரும் ஒரு பாட்டி. சிக்னலில் வண்டிகள் நிற்கும் சில நொடிகள் அவருடைய அன்றைய பொழுதிற்கான வாழ்வாதாரத்தை தீர்மானிக்கிறது. ஒவ்வொருவராய் சென்று கையை நீட்டுவார், இல்லை என்று லேசாக தலையை ஆட்டினால் கூட போதும், அடுத்த நபரை பார்க்க போய் விடுவார் (Time management) முகம் சுளிப்பதோ, இன்னொரு முறை கெஞ்சுவதோ ஒரு போதும் பார்த்ததில்லை.

சோர்வு ஏற்படும்போது அருகில் உள்ள டீ கடையில் ஒரு டீ யை போட்டுவிட்டு மறுபடியும் யாசகம். ஒரே இடம், ஒரே வேலை, வித விதமான மனிதர்கள், வித விதமான அவமதிப்புகள் இருப்பினும் ஒரு போதும் அந்த மூதாட்டியை சலிப்பாய் பார்த்ததில்லை, சுற்றி நடக்கும் எதுவும் அவரை பாதித்ததாக தெரியவில்லை, எத்துனையோ முறை நான் டீ குடித்துக்கொண்டிருக்கும்போது கவனித்திருக்கிறேன், வருவார் காசு கொடுப்பார், தனியே வாங்கிப்போய் டீ குடிப்பார் அவ்வளவுதான் பக்கத்திலிருக்கும் யாரிடமும் அப்போது யாசகம் கேட்டு நான் பார்த்ததில்லை. அவருக்கு போட்டியாய் சில சமயம் சில பேர் வந்தும் அவர்களை ஏதும் சொல்லாது தன் பாட்டுக்கு ஒவ்வொருவராய் அனுகி யாசகம் கேட்டுக்கொண்டே இருப்பார்.

என்னிடம் வேலை செய்த மார்கெட்டிங் இளைஞர்களுக்கு நான் எப்போதும் உதாரணம் காட்டியது இவரைத்தான். தயங்காமல் வாடிக்கையாளரை அனுகுவதற்கும், பல பேரை நேர விரயம் இல்லாமல் சந்திப்பதன் மூலம் சில வியாபாரமாவது கிடைக்கும் என்றும், சமய சந்தர்ப்பம் பார்த்து விற்பனை விஷயங்கள் பேசுவதும், ஏதேனும் முக சுளிப்பான பதில்கள் வந்தால் புறம் தள்ளி, அடுத்த வாடிக்கையாளரை மலர்ச்சியுடன் அனுகவும், போட்டிகள் இருந்தாலும், செய்யும் வேலை ஒன்றாகவே இருப்பது சலிப்பை தர அனுமதிக்காது அடுத்த இடத்திற்கு நகரவும் இவரையே உதாரணம் காட்டுவதுண்டு.

என்ன சார் பிச்சைகாரங்களை போய்..உதாரணம் காட்டுரீங்க என்று கேட்கும் கேள்விகளுக்கு என்னுடைய பதில்..அவங்களும் நாமளும் கிட்டத்தட்ட ஒன்றுதான் சொல்லப்போனால் அவங்க நம்மள விட ஒரு படி மேலதான் பாருங்க அவங்க எடத்துக்கு எல்லாவிதமான வாடிக்கையாளர்களும் வராங்க..சுலபமான வழி..ஆனா நம்மளோடது அப்படி இல்ல நாமதான் ஒவ்வொரு வாடிக்கையாளரா தேடிப்போறோம்... இன்னும் சரியா சொல்லப்போனா நம்மளோட ரீச் அவங்களோடத விட ரொம்ப கம்மி. ஒவ்வொரு நாளும் அவங்க வேலை சென்சாதான் அவங்களுக்கு சாப்பாடு, நமக்கு அது இல்லங்கறதுதான் நம்மளோட மைனஸ் என்பதாய் இருக்கும்.
யோசித்துப்பார்த்தால் நம்மில் யாசகம் பெறாதவர்கள் யாரும் உண்டா? உயிர் வாழ இயற்கை தரும் எல்லாமே இயற்கையிலிருந்து நாம் பெறும் யாசகமே. .


கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே என்பது இவரிடம் நேரில் கற்ற ஒன்று. வேலைக்கு வருவதற்குத்தான் சம்பளம், வேலை செய்வதற்கு என்னா தறுவீங்க? என்று கேட்பவற்களுக்கு இவர் ஒரு முன்னுதாரணம். அடுத்த முறை அந்தப்பக்கம் போக நேர்ந்தால் துணி மூடிய தலையுடன் கொம்பு ஊன்றி வரும் அந்த நிராயுதபாணிக்கு ஏதேனும் கவச குண்டலம் தந்துவிட்டு போங்கள் நண்பர்களே.                 
          

புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதிருக்கலாம், மனிதத்தில் நம்பிக்கை உண்டுதானே??

47 comments: