பலா பட்டறை: லெட்சுமி பசு..

லெட்சுமி பசு..


லெட்சுமி பசு..

திருவேற்காடு போயிருக்கிறீர்களா?

கோயம்பேடிலிருந்து பூந்தமல்லி செல்லும்போது வேலப்பன்சாவடி வலதுபக்கம் ஒரு சரிவு இறங்கி வளைவுகளில் வண்டி ஓட்டி போனால் வரும் கோவில் சார்ந்த ஒரு சின்ன ஆனால் எல்லா இடங்களுக்கான பேரூந்து வசதிகள், அமைதியான வாழ்க்கை எப்போதும் கோவிலுக்கு வரும் மக்கள் கூட்டம் கல கல தேரடி வீதி என்று ஒரு பரபரப்பான ஊர், இங்கே கட்டும் பூ மாலைகள் பிரசித்தம், பெரிய தலைகளுக்கெல்லாம் ஆர்டர் செய்து வாங்கிப்போவார்கள்.

என்னுடைய பெரியம்மா வீடு அங்கேதான். 9 மற்றும் 10 வகுப்புகள் அங்கேதான் படித்தேன். சினிமா பார்க்க தோன்றியதே இல்லை அப்படி ஒரு கலகலப்பான ஊர் ஒரு அப்படியே பார்க்கவேண்டும் என்றால் பேரூந்து நிலையம் எதிரே உள்ள ஒரு கண்மாயை தாண்டி வயல் வெளிகள் ஊடே சைக்கிள்லில் பூந்தமல்லி சுந்தர் தியேட்டர்க்கு போவோம் இரவு காட்சி முடிந்து கும்மிருட்டில் பயம் தெரியாத மாதிரி நடித்துக்கொண்டே வீடு வருவோம்.

அப்போது என் பெரியம்மா வீட்டில் நிறைய பசு மாடுகள். மாடுகளுடனான அனுபவம் எனக்கு புதுசு. அதிலும் பால் கறக்கும் போது அந்த கன்றுக்குட்டியை பிடித்துக்கொள்ளும் பொறுப்பு என்னுடையது. அதன் துள்ளலில் அந்த குட்டி குளம்புகள் எத்தனையோ முறை என் பாதங்களை பதம் பார்த்தாலும் எப்போதும் ரசிக்க முடியும் அந்த கன்றின் அழகும் வேகமும். "லெட்சுமி" அதுதான் இருப்பதிலேயே மூத்த பசு, மகா புத்தி சாலி அழகான கொம்புகளுடன் பழகாமல் யாரும் அதனருகில் போய் விட முடியாது. வீட்டிலிருக்கும் மாடுகளுக்கு அதுதான் தானை தலைவி. காலையில் அவிழ்த்து விட்டால் தானாகவே தொண்டர் படையுடன் மேய்ச்சலுக்கு போய்விடும், சாயங்காலம் போய் கூட்டிவருவது என் வேலை.

நான்கைந்து இடங்கள் உள்ளது எங்கு மேய்ந்தாலும் குறிப்பிட்ட அந்த இடங்களில் எது அருகில் இருக்கிறதோ அங்கு சரியாய் ஒய்வெடுத்துக்கொண்டிருக்கும் 'லெட்சுமி' என்று அழைத்தால் போதும் மெதுவாய் தலை தூக்கி என்னை பார்க்கும் 'வா' என்ற ஒத்தை வார்த்தையில் கூப்பிட்டுவிட்டு நான் பாட்டுக்கு நடையை கட்டுவேன். அழகாய் தன் கூட்டத்தோடு பின்னாடியே வரும். கூடப்படித்த நண்பர்கள் எல்லோருக்குமே பெரும்பாலும் அதுதான் ஊர் அந்த கடைவீதிதான் முக்கிய வழி, மாடுடகளுடன் வீடு திரும்பும்போது, என்னா மச்சி இந்தபக்கம் என்று கேட்கும்போது மாடுகளை கூட்டிப்போக வந்திருப்பதை எப்போதும் பெருமையாகவே சொல்லி இருக்கிறேன். அவர்கள் கேலி செய்யும்போதும் எனக்கு அது குத்தலாகவே படாது, உங்களுக்கு என்னடா தெரியும் மாடுகள பத்தி என்பதாய் என் நினைப்பு இருக்கும்,  என்னமோ லெட்சுமியின் அந்த புத்திசாலித்தனம் எனக்கு மாடுகளின் மீது ஒரு பிரேமையே வளர்த்து விட்டிருந்தது.

முதன் முதலில் வாழ்க்கையில் ஒரு பிரசவம் பார்த்தேன் என்றால் அது அந்த 13, 14 வயதுகளில் லெட்சுமி பசு விழிகள் பிதுங்கி ஒரு அசாத்திய மௌனத்தோடு கன்று ஈன்ற ஒரு நாள் தான். சொல்லி மாளாத அவஸ்த்தை அது ஒரு நடுராத்திரி சமயம். எங்கள் பெரியப்பா பொறுமையாய் அதை தடவிக்கொண்டிருந்தார், மெதுவாக பனிக்குடம் வெளிவரத்துவங்கியது, கருப்பு நிறத்தில் உள்ளே திரவங்களுடன் ஒரு பலூன் போல அது வெளியே வரத்துவங்கியபோது லெட்சுமியின் கண்களில் அந்த வலியை பார்க்க முடிந்தது.  பெரியப்பா பனிக்குடம் கீறி லேசாக இழுத்து கன்றினை வெளிவரசெய்து அதன் குளம்புகளில் முனையை கிள்ளி விடுவார் (இல்லாவிட்டால் நடப்பதற்கு கஷ்ட்டப்படுமாம்). நஞ்சு தொங்க வீரிட்டு எழுந்திருக்கும் லெட்சுமி பாசத்துடன் தனது குட்டியை நக்கத்துவங்கும். பனிக்குட ஈரம் காய்ந்ததும் அடேங்கப்பா அந்த கன்று செய்யும் அட்டகாசம், அதன் அழகு முகம், துள்ளல் எல்லாமே எதிலும் வடித்து விட முடியாத ஒரு பேரானந்த மகிழ்ச்சி அது. அதுவரையில் தன் பெண்ணிற்கே பிரசவம் நடப்பது போல் கண்களில் நீருடன் பார்த்துக்கொண்டிருக்கும் என் பெரியம்மா லெட்சுமிக்கு தேவையான மருந்து உணவுகளை செய்து அதை சாப்பிட செய்து லெட்சுமியை கவனமாக பார்த்துக்கொள்வார். நஞ்சு எப்படா விழும் என்று நானும் என் பெரியம்மா பசங்களும் பார்த்துக்கொண்டிருப்போம், விழுந்ததும் அதனை கட்டி ஆல மரம் தேடி கட்டிவிட்டு வருவோம். அந்த மரம் அப்போது கருமாரி அம்மன் கோவிலை தாண்டி நேரே போனால் கோலடி ஊரின் ஏரிக்கரை ஓரம் வரும். சாயங்கால நேரங்களில் கடலை பயிர் போட்டிருக்கும் வயல்களில் இறங்கி திருட்டுத்தனமாய் மல்லாட்ட பறித்து சுவைத்த இடமெல்லாம் அது ஒரு கனாக்காலமாய் இப்போது வீடுகளாகிவிட்டது.

மாட்டுப்பொங்கல் சும்மா அதகளப்படும், மஞ்சள், குங்குமத்தில் பொட்டுகள் வைத்து, கொம்புக்கு வர்ணம் பூசி, கழுத்தில் மணிகள் கோர்த்த தோலாலான ஒரு பெல்ட் மாட்டி வீட்டிற்கு நடுவில் தலை வாழை இல்லை போட்டு எல்லா வித உணவுகளும் பரிமாறி பூந்து விளாசுங்க என்று விட்டு விட்டு வேடிக்கை பார்ப்போம். என்னமோ இனம் தெரியாத ஒரு கம்பீரம் அன்று லெட்சுமி முகத்தில் பார்க்க முடியும். ஜல ஜல என்ற மணிகள் சப்தத்துடன் அவைகள் சாப்பிட்ட பிறகே நாங்கள் சாப்பிடுவோம்.

லெட்சுமி பசு ? திடீரென நோய் தாக்கி அது மடிந்ததில் ரொம்பவே உடைந்து போய் இப்போது மாடுகள் வளர்ப்பதையே என் பெரியப்பா விட்டுவிட்டார். வைக்கோலுக்காக, புண்ணாக்குக்காக அலைந்ததெல்லாம் இப்போதும் நினைவுக்கு வருகிறது. லெட்சுமி பசு இறந்த இடம் இப்போது தங்கும் அறையாக மாற்றப்பட்டு விட்டது. அந்த வெறுமையான இடம் பார்க்க லெட்சுமியும் அதன் கலர்கலரான கன்றுகளின் ஆட்டமும் கண்களின் முன்னால் நிழலாடுகிறது.

குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது எங்காவது மாடுகள் பார்க்க நேர்ந்தால் அப்பா அந்த 'அம்பா' கொம்பு ஏன் இப்படி இருக்கு?, அது முட்டுமா? நாமளும் ஒரு 'குட்டியா அம்பா' வளக்கலாமா '? என்று என் பிள்ளைகள் கேட்க்கும்போது 'சரி' என்ற ஒப்புதல் வாய் வரை வந்துவிடும், சினிமா போஸ்டர்களே தடை செய்துவிட்ட இந்த ஊரில், வைக்கோலுக்கு எங்கே போவது என்ற யோசனையுடன் உனக்கு 'ரிமோட் அம்பா' வாங்கித்தாரேன் என்று சமாதானம் செய்வேன். நல்ல காலம் அது குட்டி போடுமா பால் கரக்குமா என்று பிள்ளைகள் இதுவரை கேட்கவில்லை. பாத தொடு உணர்வில்
சிலிர்ப்பிக் கொள்கிறது
லெச்சுமி பசு.

.


42 comments: