பலா பட்டறை: ஒழுங்கான சிக்கல்கள்..

ஒழுங்கான சிக்கல்கள்..


‘க்ளிங்’,,
”சார்”
”சொல்லுங்க”
”யுரேகா ஃபொர்ப்ஸ் லேர்ந்து வரோம்”
நான் மாடியில் நின்றிருந்தேன், இரண்டு இளைஞர்கள் டை கட்டிக்கொண்டு கையில் பெரிய பையுடன், ”சார்..ஜஸ்ட் பத்து நிமிஷம் ஒரு டெமோ பாருங்க பிடிச்சிருந்தா வாங்கிக்குங்க.” நிறைய நாட்களாகவே வாக்குவம் கிளீனர் வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்,
”சரி மேல வாங்க”
பையை திறந்து ப்ளக் சொறுகி, உய்ய்ய் என்ற சப்தத்துடன் ஒட்டடைகள் உறிஞ்சியும், தரையிலுள்ள தூசுகள் விழுங்கப்பட்டும் வித்தை காமிக்கப்பட்டது, போதாத குறைக்கு உறியப்படும் காற்று வெளியேறும் ஒரு சிறிய குழாய் வழியில் ஒரு ப்ளாஸ்டிக் பந்தினை அந்தரத்தில் ஆட விட்டு அவர்கள் வேடிக்கை காட்ட, என் குழந்தைகளும் அதற்கு சினேகமாகிவிட்டன, நான் டை கட்டிய இளைஞர்களை பார்த்தேன் டார்கெட் முடித்த சந்தோஷம் தெரிந்தது. சரி என்று முடிவெடுத்து வாங்கிய பின்புதான் தெரிந்தது, அதனால் எனக்கு எவ்வளவு பெரிய ஆபத்து என்று.

ஒரு சுப யோக ஞாயிற்று கிழமை முதன் முதலாய் உபயோகிக்க துவங்கினேன், உபயோகம் சரிதான் (மவனே முடியல) என் முதுகு கிழிந்து விட்டது. தூசு தும்புகளுடன் ஒட்டடை அடிக்கும் வீட்டிலுள்ளவற்களுக்கு சுகாதாரமாய் இருக்குமே, இப்போ நல்லா சுத்தமாகிவிட்டதே என்ற சந்தோஷம் அடுத்த ஞாயிறுக்கிழமை காணாமல் போய், நம் எறும்பு ராஜகோபால் மிரட்டுவது போல அண்டத்திலுள்ளதே பிண்டத்தில் என்று மீண்டும் வீடு முழுவதும் தூசும் ஒட்டடையும், திரும்பவும் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்கும்போது பிள்ளைகள் இரண்டும் பக்கத்தில் வந்தது, ”ஏம்ப்பா அதுல ஒட்டடை அடிக்க போறியா??”

”ம்ம்ம் ஏன் கண்ணு அப்பாவுக்கு ஹெல்ப் பண்ண போறீங்களா??”

”இல்லப்பா நீ அத போட்ட உடனே நாங்க அதுல பால் வெச்சி காத்துல பறக்க விட்டு விளையாடுவோம்.” என்னுடைய அப்பா என்னையே பார்த்துகொண்டிருந்தார். அந்த வாக்குவம் கிளீனர் வரும் வரை ஒட்டடை முதல், எல்லாவிதமான சின்ன சின்ன வேலைகளும் அப்பாதான் வீட்டில் ஒரே மகன் என்ற பாசத்தில் எங்கம்மா எனக்கு அதிக பட்ச வேலை கொடுத்தது சுயமாய் நான் பல் விளக்குவது மட்டுமே. தாய் பாசத்தின் முழு மொத்த சோம்பேறியாக இன்றும் நானிருப்பதற்கு என் தாயே போற்றி!. இன்றைக்கும் தன் கையால் சோறு பிசைந்து, தட்டில் போட்டு, ஸ்பூன் வைத்து சாப்பிட தறும்போது என் மனைவி காதில் புகை வரும். என்னமோ அப்படி பழகி விட்டது.

”ஏண்டா குழந்தைங்க பால் பறக்க விட்டு விளையாடறதுக்கா 12000 ரூவா கொடுத்து இத வாங்கின?”
“இல்லப்பா நீங்க ஒட்டடை அடிக்கும்போது தூசி எல்லாம் விழுந்து, ஏற்கனவே வீஸிங் இருக்கு அதான்..”
“சரிடா ஒனக்கு இருக்கறது வாரத்துல ஒரு நாள் அதுலயும் இத தூக்கிட்டு பாதி நாள் போயிடிச்சின்னா ரெஸ்ட் வேணாமா?? 40 ரூவாய்க்கு ஒட்டட குச்சி வாங்கி அடிக்கற வேலைக்கு போய் இத வாங்கி இப்படி அவஸ்த்த படனுமா??” நான் மீண்டும் நான் வாங்கியதை நியாயப்படுத்துக்கொண்டே இருந்தேன். சரி போ என்று அப்பாவும் விட்டுவிட்டார்.

அன்புதான் என்றாலும் அப்பாவும் அம்மாவும் வேறு வேறு, என்னை என் போக்கில் விட்டவர் என் தந்தை, டீன் ஏஜ் குறும்புகளில் ஒரு முறை வயிறு முட்ட குடித்துவிட்டு வீட்டு வாசலில் கால் தடுமாறி நின்றபோது கடிந்து கொள்ளாமல் பாய் விரித்து, படுக்கச்சொல்லி ம்று நாள் மாலை கண் விழித்ததும், காபி போட்டு கொடுத்த என் அப்பா சொன்ன வார்த்தை ”குடிக்கிறது தப்பில்ல ஆனா இது உன் வயசுக்கு ரொம்ப அதிகம், வேனும்னா வீட்டுல வாங்கி வெச்சிக்கோ டைய்லி கொஞ்சம் குடி உடம்புக்கும் நல்லது,”

எனக்கு பிறகு குடிக்க ஆரம்பித்து விட முடியாமல் ”அது இல்லாம முடியல மச்சி” என்று சொல்லும் என் நண்பர்களுக்கு நான் அதிலிருந்து மிக சாதாரணமாய் வெளிவந்தது ஆச்சரியம். ஆனால் எனக்கு என் தந்தை கொடுத்த சுதந்திரம் என்னை காப்பாற்றியது, கூட இருந்த நண்பர்களின் வீட்டில் மண்டகப்படி நடக்க, நான் எது செய்தாலும் என்னை காயப்படுத்தாத என் தந்தையின் சுதந்திரம் என்னை பயமுறுத்தியது, ”வேணாம்டா” என்று நான் சொல்லி வெளியே வந்துவிட்டேன். எந்த பழக்க வழக்கத்திற்கும் அடிமையாகாமல் அந்த சுதந்திரம் என்னை காத்தது. களவும் கற்று மற என்று கற்றேன் மறந்தேன்.

ஆனால் காலம் நம்மை அப்படியே விடுவதில்லை அது நமக்கு பல வேடங்கள் தரும். மகன் குடும்ப தலைவராக மாறும் சூழ்நிலை பெற்ற தந்தையிடமே பேச முடியாத சில சங்கடங்களை ஏற்படுத்தும்.

”வயசாயிடிச்சுப்பா பாங்க் கணக்கு க்ளோஸ் பண்ணிடலாம், கை எல்லாம் நடுங்குது திடீர்னு, நேர்ல வாங்கன்னு சொன்னா டக் குன்னு கிளம்ப முடியாது, ரேசன் கார்டு, கேஸ் கனெக்‌ஷன் எல்லாம் கூட உன் பேருக்கு மாத்தனும்.”

”ஆங் ஆங் அதுக்கெல்லால் ஒன்னும் இப்ப அவசரமில்லப்பா பாத்துக்கலாம்..”

அலட்சியம் காட்டுவது போல பதில் சொன்னாலும் என் அப்பாவை நேர் கொண்டு பார்க்க முடியாத நடை முறை சிக்கல் அது. இரு குழந்தைகளுக்கு தந்தையான பின்பும் நான் என் அம்மா என்னை குழந்தையாகவே வைத்திருக்கிறார்,. என் தந்தை குடும்ப தலைவனாக்க காய் நகர்த்துகிறார். என் தந்தையும், நானும், என்குழந்தைகளும் ஒன்றாய் கை கோர்த்து நடக்கையில் வாழ்வின் தளர்ச்சியும், உறுதியும், மென்மையும் ஒரு சேர உணர்கிரேன். கடந்து வந்தவரின் தூரமும், கடக்கின்ற என் பயணங்களும், ஆரம்பித்திருக்கிற என் குழந்தைகளும் எறும்பு வரிசையாய் வாழ்வு நகர்ந்து கொண்டே இருப்பதை, வழி தேய்ந்து கொண்டே இருப்பதை, கண்டும் ஒன்றும் செய்ய இயலாத நிதர்சனத்தை புறம் தள்ளி, மகாபாரதத்தில் தருமனிடம் அசரீரி கேட்ட நகைப்புக்குறிய கேள்விக்கான பதிலாய் நம்பிக்கையுடன் நகர்ந்துகொண்டே இருக்கிறேன்.

என்ன செய்ய அடுத்த நொடிகள் நம்மால் நிச்சயமாக்கப்படுவதில்லை கடந்து போன நொடிகளில்தான் நம்மை நாம் பொறுத்திப்பார்த்துக்கொண்டு கர்வப்படவோ, வெட்க்கப்படவோ முடிகிறது. இது இதை இப்படி செய்ய வேண்டும் என்ற முன்கூட்டிய தீர்மானங்கள் நிறைவேற்ற மிகுந்த பிரயாசை, அயற்சி ஏற்படுகிறது. எதிர்கொள்வதை அதனதன் போக்கில் நல்லதா? சரி,.. இல்லையா? சரி... சுலபமாய் இடதுமில்லாது வலதுமில்லாது,  ஒரு அழகான படமெடுத்தும் எந்த வித உணர்ச்சியும் காட்டாத, கூப்பாது போடாத ஒரு கேமராவைப்போல் அமைதியாய் இருக்க முடியவில்லை.

ஞானி தவம் செய்கிறான் வந்த வாழ்வறுத்து, காமம் அறுத்து, பந்தமறுத்து, பிணைப்புகளில்லாத முற்றுப்புள்ளி வைக்க. வாழ்வின் இரை தேடலில் வெறுத்து, அறுத்துபோனவனுக்கு இறை ஒன்றே குறி. மோட்சத்தின் மையங்களில் மையல்.

ஒரு வேளை நம்மை போல் வாழ்க்கை தவம் செய்து வரம் பெறுவது அவனுக்கு பயமாய் இருந்திருக்கலாம், கடினமாய் இருந்திருக்கலாம், ஓயாது பேசி, தந்திரங்கள் பல செய்து, சொந்த பந்தம் சூழ, சூழ்ச்சிகளூடே பிண்டத்தில் அண்டத்தில் முடிவில்லாத வெளிகளில் முடிவினை தேடுவது முடியாத காரியம் என்று நடுங்கி, தனிமை தேடி ஓடியிருக்கலாம்.

நமக்கு இதுவே வாழ்வு, பேராசையோ போராட்டமோ, அன்போ துரோகமோ, நமக்கான தவங்கள் இவைதாம், சாதாரணமான கேள்விகளிள், நடைமுறை செயல்களில் வாழ்வின் முடிவுகள் எப்போதும் ஞாயபகப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கப்படுகிறது.  பயந்த ஞானிகளை போலவே, சாமியும் இங்கே வருவதில்லை, இந்த பூமியில் நேர்த்தியில்லாத நேர்த்தியை படைத்த அவனுக்கும் நம் நேர்த்தியான சிக்கல்கள் பயத்தை தந்திருக்கக்கூடும், இறப்புக்கப்பால் இருக்கும் ஒரு உலகத்தில் யார் கண்டது ஒரு வேளை நாம் நம்பும் கடவுள் நம்மை சாமியாக்கி கோவில் கட்டி தொழுதுகோண்டிருக்கலாம். எப்போதைய்யா வருவீர்கள் எமை காக்க என்று பாசுரங்கள் பாடிக்கொண்டிருக்கலாம். அக்கரைக்கு இக்கரை பச்சைதானே.  
.

32 comments: