பலா பட்டறை: மாயவலை..100ஆவது பதிவு..

மாயவலை..100ஆவது பதிவு..

அவரவர் உமிழ்ந்த
சொற்களிலிருந்து
முளைத்துவிடுகிறது
அவரவர் செடிகள்.

அவரவர் சொற்கள்
அவரவர் செடிகள்
அதனதன் வீரியங்கள்
அதனதன் விருட்சம்.
நீரூற்றி வளர்ப்பது மட்டும்
என் பாடு.
நோய் பட்டும்
பூச்சி தின்றும் இறந்துவிட்டன
சில செடிகள்.
வளர்ந்த மற்றவை
பூக்கத்தொடங்கி
ஒரு ஏப்ரல் மாதத்தில்
கனியத்தொடங்கின
அவரவர் பூக்கள்.
அதனதன் கனிகள்
அதனதன் சுவை
அதனதன் குணம்.
அவரவர்க்கு
அவரவர் பழங்களை
பறித்துக் கொடுப்பது மட்டும்
என் பாடு.- கவிதை - திரு.TKB காந்தி
புத்தகமாய் தொகுப்பு : கூர்தலறம். வெளியீடு: அக நாழிகை.

இது நூல் விமர்சனமல்ல. ஆனால் மிக அழகான கவிதைகள், இந்த தொகுப்பில் நான் வாசித்தேன். அய்யனார்கம்மா, கருவேலநிழல், நீர்க்கோல வாழ்வை நச்சி இனிதான் படிக்கவேண்டும்.


13-11-2009

அன்றுதான் முதல் பதிவு. இது 100 ஆவது பதிவு. பெரியதாய் எழுதி எதுவும் கிழித்துவிடவில்லை என்றாலும். யார் மனதையும் கிழிக்கவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். நிச்சயம் உங்களின் தொடர் பின்னூட்டங்களும், ஓட்டுகளும், அறிமுகங்களும், ஏதும் சொல்லாமல் வெறுமனே என் பக்கம் பார்த்து எண்களில் முகம் காட்டும் நண்பர்களும், எனக்குள் கிட்டத்தட்ட இறந்துவிட்டிருந்த எழுத்து தமிழை மீட்டிவிட்டது.

தின வாழ்வைப்போலவே, பதிவுலகமும் இருக்கிறது. எழுத்துக்களிலேயே முகம் தெரிகிறது. குறள்கள் சற்று வேறுமாதிரி மாற்றிக்கொள்ள தேவையாய் இருக்கிறது. தீயினாலும், நாவினாலும் சுட்டது ஆறிவிடுமோ என்னமோ, பதிவு இன்னும் பயங்கரம் ஆறவே ஆறாது என்று புரிகிறது.

 இங்கும் நட்புகளை காண்கிறேன், நிஜ வாழ்வில் நினைத்துக்கூட பார்க்க முடியாத நட்புகள் இந்த மாய வலை தருகிறது. அப்படி எனக்கு கிடைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.

நன்றி என்பதை தவிற வேறெதுவும் சொல்ல தெரியவில்லை. கவிதை, கதை, தொடர்கதை, அனுபவம், படங்கள் என எல்லாம் பகிர இங்குதான் முடிந்தது. எண்ணங்களை வெளிப்படுத்தத்தான் மிகுந்த பிரயாசை பட்டிருக்கிறோம். எனக்கே எனக்கென்று, நான் எழுதிய ஆனால் எல்லாருக்குமான ஒரு திறந்த புத்தகமாய் என் பக்கம் இருப்பதில் மகிழ்ச்சி.

100 என்பது ஒரு குறியீடுதான் விழும்போது எவ்வளவு அடிபடும் என்பதை எண்ணிக்கொண்டே ஒரு இளைப்பாரலாக இதுவரை ஏறிய படிகளில் உட்கார்ந்து பார்க்கிறேன், மற்றபடி வேறொன்றுமில்லை.

என் பக்கத்தில், எழுத்தில் ஏதேனும் குறைகள் இருப்பின் அது என்னுடையாதாகட்டும்.

நிறைகள் அனைத்தும் உங்களுக்கே சமர்ப்பணம்.


மீண்டும். மிக்க நன்றி.

ஷங்கர்...
”அடையாளங்கள்
 ஏதுமின்றியே வாழ நினைத்தேன்
 அடையாளமில்லாதவன் என்ற
 அடையாளம் என்னைப்பார்த்து
 சிரிக்கிறது..”
.


69 comments: