பலா பட்டறை: பலா பட்டறை :: உயிர் வியாபாரம்..

பலா பட்டறை :: உயிர் வியாபாரம்..


Prime Mover அப்படித்தான் டீசலில் ஓடும் இன்ஜினை சொல்ல வேண்டும். அதன் வாலில் பொறுத்தி இருக்கிறது எதுவோ அதன்படி கூப்பிடுவது வழக்கமாகி விட்டது. கியர் பாக்ஸ் போட்டு ஓட்டினால் லாரி, பஸ், கார் போன்ற வாகனங்கள், புரொபெல்லர் போட்டால் போட் அல்லது கப்பல், ஒரு ஆல்ட்டர்னேட்டருடன் இனைத்துவிட்டால் மின்சாரம் தரும் ஜெனரேட்டர், எதில் இன்ஜின் பொருத்தப்படுகிறதோ அதன் படி அது அழைக்கப்படுகிறது.


விவேக் ஒரு படத்தில் காமெடி பண்ணுவது போல 750 அல்ல அதற்கு மேலேயே ஸ்பேர் பார்ட்ஸ் உள்ள ஒரு எந்திர ஜீவன் அது.

நிற்க. இது டீசலால் ஓடும் இன்ஜினை பற்றிய பாடமல்ல. ஆனால் இது என் தொழில். இந்த தொழில் எனக்கு கற்று தந்தது அதிகம், கற்றது குறைவு. சாதாரண ஃபான்ஸி கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசாங்க, ராணுவ விமான ஓடுதளங்கள் என பல இடங்களுக்கு பழுது நீக்க, வேலைக்கான முன்னேற்பாடுகளுக்காக என்று நான் பயணப்பட்டிருக்கிறேன். குடிக்க தண்ணியும் சோறும் இல்லாத இடங்கள் முதல், நட்சத்திர ஹோட்டல்களில் ராஜ உபசாரம் என்று கலவையான அனுபவங்கள் எனக்கு கிடைத்திருக்கிறது, எதுவாய் இருந்தாலும் சரி எனக்கு எல்லாம் ஒன்றுதான் என்று மனதளவில் தயாராகியிருந்தபடியால் போகும் இடம், சூழல், அங்குள்ள மனிதர்கள் போன்றவை எனக்கு ஆர்வத்துடன் பயணப்படவும், வேலை முடிக்கவும் போதுமானதாக இருந்தது. சலிக்காமல் ஒவ்வொரு முறையும் டீசல் இன்ஜினின் செயல்பாடுகள் வாடிக்கையாளருக்கு விளக்க வேண்டியிருக்கும், சின்ன சின்ன விஷயங்கள் அவர்களுக்கு சொல்லி புரிய வைத்து அடுத்த முறை அதே தவறு நிகழாமலிருக்க திரும்ப திரும்ப அதன் செயல்பாடுகள் விளக்க வேண்டியது மனதில் மனனம் செய்து பதிந்துவிட்டது தூக்கத்தில் சட்டென்று எழுப்பிக்கேட்டாலும் கோர்வையாய் வந்துவிடும். எப்போதும் களப்பணி ஆற்றியதில்லை, எனக்கு மேஸ்த்திரி வேலை, கூட வரும் சக பணியாளர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வேலையை செவ்வனே முடிக்க உதவுவது மட்டுமே என் பணி.

சரி விஷயம் என்னவென்றால், ஒரு நாளில் மேற்படி வேலைகள் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாலையில் என் செல்பேசியில் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது பேசிய என் மனைவி உடனே வருமாறும், எனது அப்பாவிற்கு உடல் நிலை சரி இல்லை என்று சொல்லியபோது குரலில் கவலை தெரிந்தது. வீடருகில் வந்துவிட்ட படியால் பதட்டமில்லாமல் என்ன நடந்திருக்கும் என்ற யோசனையோடு உள்ளே நுழையும் போது வீட்டிற்கே வந்திருந்த ECG பரிசோதகர், இருதய ஒலி சீராக இல்லை என்றும் உடனடியாக மருத்துவமணைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றும் சொல்லி ECG வரை படத்தை கையில் கொடுத்து make it fast என்று சொல்லிவிட்டு கிளம்பினார். எங்கள் குடும்ப மருத்துவருக்கு உடனே செல் பேசியபோது அவர் திருச்சியிலிருந்தார். வடபழனி விஜயாவுக்கு செல்லும்படியும் தனது மருத்துவ நண்பருக்கு உடனே தகவல் தந்து ஆவண செய்ய சொல்கிறேன் என்று சொல்லும்போதே எனக்கு தலை சுற்றியது. நான் இருப்பது அம்பத்தூர் பாடி அருகில் மாலை நேரம் வடபழனி வரையில் என் அப்பா இருக்கும் நிலையில் கூட்டிச்செல்வதென்பது நேரமெடுக்கும் கடினம் என்று அவரிடம் விளக்கினேன். no problem ஷங்கர் பக்கத்தில் எங்கு முடியுமோ செல்லுங்கள் ஒரு மூன்று நாட்கள் அட்மிட் பண்ணி Hepparin ஊசி போட்டு நிலைக்கு கொண்டுவந்து விடுவார்கள், அதற்குள் நான் சென்னை வந்து விடுவேன், நீங்கள் சொன்ன தகவல்படி heart attack கிற்கு முன்னால் வரக்கூடிய ஒரு நிலை பயப்பட ஒன்றுமில்லை ஆனால் சீக்கிரம் முதலுதவி அவசியம் என்றதும் ஒரு ஆட்டோவில் அப்பாவை அழைத்துக்கொண்டு முகப்பேரிலுள்ள மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றேன். திடீரென்று நெஞ்சு வலி ஏற்கனவே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கோண்டிருக்கிறார், தகவல்கள் இந்த ஃபைலில் உள்ளது என்று விளக்கி அனுமதிக்கான ஏற்பாடுகள் முடிவதற்க்குள் ICU விற்குள் அப்பாவை சேர்த்து படுக்க செய்து, கொடுத்த மருந்து லிஸ்ட் படி உடனே வாங்கி வந்து தந்துவிட்டு அமைதியாய் அருகிலுள்ளவர்களை பார்க்கத்தொடங்கினேன்.அவசியமிருக்கிறதோ இல்லையோ ஒரு பையில் ஃப்ளாஸ்க், மாற்று துணிகள், தண்ணீர் பாட்டில் போன்றவை பெரும்பாலானவர்களின் கையில் இருந்தது. அம்மாவிற்கு ஒன்னும் பயமில்லம்மா என்று தகவல் சொல்லும் முன்பு எனக்கு ICU வில் அப்பாவை என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஏகப்பட்ட கெடுபிடிகள் ICU வில் அறுவை சிகிச்சை செய்யப்போகும் மருத்துவரை போல தலையில். வாயில் துணியும், காலில் பாதங்களை மூடியபடி ஒரு துணி என்று முகமூடி திருடனைப்போல் ஒருவாறாய் அனுமதி பெற்று உள்ளே சென்றேன். வித விதமான மருத்துவ உபகரணங்களின் ஒலிகளுக்கு நடுவில் நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட வயதானவர்கள் படுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பாவின் கட்டிலை அடைந்து முகம் பார்த்ததும் புரிந்தது Hepparin மயாஜாலத்தில் அப்பாவின் முகம் தெளிந்து விட்டிருந்தது. மனதில் நிம்மதியோடு "நல்லா ரெஸ்ட் எடுப்பா நான் வெளிலதான் இருப்பேன் தூங்கினாலே எல்லாம் சரியா போகும்" என்று ஆறுதல் சொல்லி வெளியில் வந்தேன்.

அது அதற்கான இடம் வரும்போதுதான் தெரிகிறது யாரோ எங்கேயோ எதற்கோ அவஸ்த்தை பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த இடம் நமக்கு பார்க்க அல்லது உணர கிடைக்கும்போது சுற்றி உள்ளவர்கள் வலி உணரமுடிகிறது. அதுவரை சங்கீதம் சந்தோஷம், உற்சாகம் நிம்மதியான வாழ்வு அமைதியான அழகான உலகம்.

மெதுவாய் சூழ் நிலைகளை உணர தொடங்கியபோது,அப்படி அப்படியே வேலைகளை போட்டுவிட்டு கவலை வழிந்த மனிதர்களை பார்த்த போது எப்போதோ அடித்த சிகரெட்டும், குடியும் நினைவிற்கு வந்தது. நாமும் ஒரு நாள் இப்படி யாரையாவது தூக்கமில்லாது அவஸ்த்தைப்பட வைப்போமா என்ற எண்ணம் எழுந்தது. கையில் உள்ள பணம் மொத்தமும் ஒரு ஐஸ் கட்டியாய் கரைய தயாராக இருப்பதாக தோன்றியது. அதைவிட தேவை இல்லாது வலி ஏற்படுத்தி அப்பாவை அவஸ்த்தை பட வைப்பார்களோ என்ற எண்ணம் கலவரப்பட வைத்தது.

இப்படியே இரண்டு நாட்கள் முடிந்தது அதே முகமூடி திருடனாய் அப்பாவை அடிக்கடி உள்ளே போய் பார்ப்பதும் வருவதுமாய் இருந்தேன். சாப்பாடு நல்லா இருக்குடா எண்ணை உப்பு எல்லாம் தேவையான அளவு போட்டு அருமையா தராங்க என்ற அளவில் கட்டிலில் உட்க்கார்ந்து கதா காலட்சேபம் நடத்த ஆரம்பித்ததும் ரசாயனங்களுக்கு மனதில் நன்றி சொல்லி டூட்டி டாக்டரிடம் எப்ப டிஸ்சார்ஜ் என்று கேட்டேன். சீப் டாக்டர் வந்தவுடன் தெரியும் என்றார். சரி என்று இரவு வீட்டிற்கு வந்து தூங்கி காலையில் பணத்துடன் மீண்டும் ஆஸ்பத்திரி சென்ற போது ICU வில் இருந்த அப்பாவை பொது வார்டுக்கு மாற்றிவிட்டதாய் சொன்ன சிஸ்டரிடம்

“ஏன் ஸிஸ்டர்”
“அவருக்கு சாயங்காலம் ஆஞ்சியோ, அனேகமா நாளைக்கு பைபாஸ் இருக்கும்”

புரிந்து விட்டது எனக்கு.. பணம் பறிக்க அடுத்த நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ICU வில் கூட்டம் இப்போது அதிகம். உள்ளே இடம் வேண்டும், அப்பாவை சாதாரண வார்டுக்கு மாற்றி ICU வில் புதிதாய் வருபவர்களுக்கு அட்மிஷன் நடந்து கொண்டிருந்தது.. மண்டைக்குள் ரத்தம் சூடாக ஸிஸ்டரிடம்..

“ஏன் ஸிஸ்டர் ஆஞ்சியோ ஃப்ரீயா பண்றீங்களா??” திடுக்கிட்ட அவர் “இல்லைங்க கொறஞ்சது ஒரு நாப்பதாயிரம் ஆகும்”.

“எனக்கு தெரிஞ்சு நான் அவருக்கு ஒரே புள்ள முடிவெடுக்க வேண்டியதும் நாந்தான். அப்போ யார கேட்டு மதியானம் ஆஞ்சியோ அப்பறம் பைபாஸ்ன்னு முடிவு பண்ணீங்க?”

“சாரி சார் எதுவா இருந்தாலும் நீங்க சீஃப் டாக்டர் கிட்ட பேசுங்க”

”அவர் எங்கங்க?”
”ஓ.பி ல இருக்கார் நீங்க உங்க அப்பா கூட இருங்க வருவாரு” சரி என்று அப்பாவை பார்க்க நடையை கட்டினேன். தினசரி செய்யும் தொழில் எனக்கு நினைவில் வந்தது. 'மருத்துவமனை', 'டாக்டர்' இதெல்லாம் வேலைக்காவாது இனி அதிற்சி வைத்தியம்தான் என்று முடிவோடு அப்பாவிடம் போனபோது அப்போதுதான் சாப்பிட்டு பக்கத்து கட்டிலிலிருக்கும் நபருடைய தினசரியை வாசித்துக்கொண்டிருந்தார்.

 அந்த ஜெனரல் வார்ட் சுத்தமாக இருந்தது. வழக்கம் போல மலயாள நர்ஸ்கள் அன்போடு கவனித்துக்கொண்டிருந்தார்கள். அப்பாவிற்கு எதிர் கட்டிலில் 19 வயது மதிக்கத்தக்க இளைஞனுக்கு மார்பில், கால்களில் சவரம் செய்து கொண்டிருந்தார்கள், ”அடப்பாவி இந்த வயதில் இவனுக்கென்ன??” கொஞ்சம் வயதான நர்ஸ் அந்த பைய்யனின் அம்மாவிடம்
”ஒன்னும் பயப்படாதீங்க, முக்கா மணி நேரத்தில வந்திடுவான். பூ மாதிரி ஆஞ்சியோ பண்ணி கூட்டிட்டு வந்துடுவாங்க குழந்தைகளே சர்வ சாதாரணமா பண்ணிக்குதுங்க. இந்தாப்பா இவர கூட்டிட்டு தியேட்டர் 3 க்கு போய்டு”.

நான் அந்த பையனை பார்த்தேன், ஒடிசலான தேகம். அழுகையுமில்லாமல், சிரிப்புமில்லாமல் ஒருமாதிரி மோன நிலைக்கு வந்திருந்தான். மெதுவாய் பச்சை நிற அங்கியில் சர்க்கர நார்க்காலியில் தள்ளிக்கொண்டு போனார்கள். கிட்டத்தட்ட 15 கட்டில்கள் இருந்த ஒரு ஹால் அது. அப்பொதுதான் வந்த ஒரு அரசியல் கட்சி வட்டத்தையோ, மாவட்டத்தையோ சட்டையை கழற்றி தயாராய் இருக்க சொல்லி இருந்தார்கள் அவரது கூட வந்தவர்கள் கையில் தடியாய் ஸ்கேன் செய்த ரிப்போர்ட்டுகள், இன்ன பிற மருத்துவ காகிதங்கள் ஒரு ஃபைலில் கத்தையாய் வைத்திருந்தார்கள். பேச்சு வாக்கில் திருவள்ளூரிலிருந்து 7  நாட்கள் அட்மிட் ஆகி பிறகு அவர்களின் ரெகமெண்டேஷன் படி நேரே ஆஞ்சியோ பண்ண முடிவாகி இருந்தது அப்ப "அந்த 7 நாட்கள் என்ன பண்ணினாங்க?" ’ஏதோ கூட்டு சதி’ புரிந்தது. மீண்டும் அந்த வயதான நர்ஸ் 'பயப்படாதீங்க' பல்லவிய பாட ஆரம்பித்திருந்தார். நான் முகம் திருப்பிக்கொண்டேன்.

இங்கே என்னமோ பிசகு. விருந்தோம்பல் முறையாக நன்றாக இருந்தாலும், அவர்களின் நோக்கம் நிச்சயம் உன்னத மருத்துவம் இல்லை. இது நம்ம கேஸ்தான் சுத்தமான வியாபாரம். பயத்தின் மூலதனம் கொண்ட வியாபாரம். யோசிக்க நேரம் கொடுக்காத மூன்று சீட்டு வியாபாரம்..வை ராஜா வை..மங்காத்தா வேலை.

நல்ல கச்சேரிக்கு தயாராக வேண்டியதுதான் என்று யோசித்துக்கொண்டே மனதில் திரைக்கதை வசனம் எழுத ஆரம்பித்தேன். வீட்டிலேயே கூகுள் செய்து இதற்கான விஷயங்கள் சேகரித்து வைத்திருந்தது கொஞ்சம் வேலையை சுலபமாக்கும் என்று தோன்றியது. நொண்டிக்கொண்டும், காறி துப்பிக்கொண்டும் வயதான பெரியவர்கள் கையில் சிறு நீர் குடுவையுடன் ஆஞ்சியோ முடிந்து உள்ளே போன நீல சாயம் மொத்தமும் வர அளவெடுத்துக்கொண்டு அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஆஞ்சியோவிற்கே இந்த பாடா??அப்பாவை பார்தேன் பய ரேகைகள் நன்றாகவே தெரிந்தது. ”எப்படிப்பா இருக்கு?”.. ”பரவா இல்லடா..எனக்கு கூட ஒரு பை குடுத்திருக்காங்க பாரு, அந்த சாயம் அளவெடுக்க”, ”இல்லப்பா நம்ம வீட்டுக்கு போயிடலாம் நம்ம டாக்டர பார்த்துட்டு அப்பரமா முடிவு பண்ணிக்கலாம்.” .மெல்ல என்னைப்பார்த்த அப்பா ”சரிடா” என்ற படி தூங்கிப்போனார்.

பசி காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் மண்டைக்குள் வலியோடு கச்சேரி நடத்த தயாராகி காத்துகொண்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தாதிகள், ஒரே கேள்வி
"சீஃப் டாக்டர் எப்ப வருவாருங்க?"
 ”அறியில்லா”,
 ”தா இப்ப வரும்”
 கடுப்பு ஏறிக்கொண்டிருந்தபோது அந்த வயதான நர்ஸிடம் போய்
"ஸிஸ்டர், என்னோட அப்பா கண்டிஷன் பத்தி சீஃப் டாக்ட்டர் கிட்ட பேசனம்..அதுவும் உடனே..காலைலேர்ந்து வெயிட் பன்றேன்".
 ”ஏங்க மொதல்லயே கேக்கக்கூடாது? அவர் ஊர்லயே இல்லயே ஹைதராபாத் போயிருக்கார்”

அது மருத்துவமனை என்பதையும் மறந்து கத்த ஆரம்பித்து விட்டேன்.
" காலையில் ஓ பி ல இருக்கரதா சொன்ன உங்க ICU Staff, இங்க இருக்கற டூட்டி நர்ஸ் எல்லாம் சொன்னது பொய்யா?? அப்ப யார் இன்னிக்கு எல்லாருக்கும் ஆஞ்சியோ பண்றது,? பண்ணறீங்களா இல்ல ஒரே DVD ப்ரிண்ட் எடுத்து எல்லாருக்கும் தரீங்களா?? Dont you have a system in this Hospital?? Who is incharge then i wanna see him now".

எனக்கே அசிங்கமாக இருந்தது தேவை இல்லாமல் அங்குள்ள எல்லாரையும் கலவரப்படுத்தி விட்டேனோ?? ஒரு நிமிஷம் என்று சொல்லி வெளியில் போன ஸிஸ்டர் 5 நிமிடங்களில் திரும்ப வந்து, "டுட்டி டாக்ட்டர் க்ரௌண்ட் ஃப்லோர்ல இருப்பார்..போய் பாருங்க" என்று சொல்லியதும் நான் படிகளில் கீழிறங்கி அவரை பார்க்கப் போன உடனே தெரிந்து கொண்டேன். இது சண்டை கோழி அல்ல தற்காப்பு பார்ட்டி.

சார் இங்க பாருங்க உங்க அப்பாவுக்கு லெஃப்ட் பம்ப் ஃபைலியர், சரியா மூச்சு விட முடியல ப்ராணவாயு பத்தல, அடைப்பு நிச்சயம் இருக்கும் ஆஞ்சியோ பண்றது பெஸ்ட். அவர் பேசுவது நான் டீசல் இன்ஜின் பற்றி என்னுடைய கஸ்டமருக்கு பாகம் குறித்து பாடம் எடுப்பது போல இருந்தது.

"ஒத்துக்கொள்கிறேன் டாக்டர். எங்கப்பாவுக்கு 76 வயது இருதய நோயாளி, தொடர் மருந்துகள் மற்றும், சிகிச்சை எடுத்து வருபவர், 75 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு நீங்கள் இதுவரை செய்த அறுவை சிகிச்சைகள் சக்சஸ் பர்செண்டேஜ் சொல்ல முடியுமா?? இந்த வயதில் ஆஞ்சியோ பண்ணினால் என்ன என்ன ஸைட் எஃப்பெக்ட் வரும்? மன, உடல் ரீதியில் வலி தாங்க முடியுமா? என் அப்பாவை சேர்த்த இந்த மூன்று நாட்களில் ஏன் ஒரு டாக்ட்டர் கூட என்னிடம் அவரின் நிலைமை பற்றி ஏதும் சொல்லவில்லை? குறைந்தபட்ஷம் அவருக்கு முன்னிருந்த, இருக்கிற வியாதிகள், அலர்ஜி, மருந்துகளின் ஒவ்வாமை ஏதாவது தெரியுமா? கேட்டீர்களா? உங்கள் விருந்தோம்பல் மகிழ்ச்சி, ஆனால் இது ஹோட்டலில்லை, நாங்கள் வந்திருப்பது, சிகிச்சைக்கு அல்லவா? நீங்களே முடிவெடுத்து ஆப்பரேஷனுக்கு தேதி குறிப்பது எந்த அளவுக்கு சரி?"

அவருக்கு புரிந்து போயிற்று. ’டீல் ஓவர்’ இதுக்கு மேல பேசினா வீண் வம்பு என்று அவர் நினைத்திருக்க வேண்டும்.

 ”மிஸ்டர் ஷங்கர்..இங்க நான் விஸிட்டிங் டாக்ட்டர்..உங்க அப்பாவ பார்த்தேன்..அவர் நல்லாதான் இருக்கார், இந்த வயதில் ஆஞ்சியோ பண்ணினால் சில சமயம் உயிருக்கு ஆபத்தாகவோ, பக்கவாதமோ வர ரிமோட் சான்ஸ் இருக்கு அதே சமயம் இந்த வயசுல பண்ணி நல்லா இருக்கறவங்களும் இருக்காங்க. என்னளவில் இப்போது உங்கள் தந்தைக்கு அது அவசியமில்லை. ப்ளீஸ் என் பேர இழுக்காதீங்க..வாலண்ட்டரா டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போய்டுங்க. நோ ப்ராப்ளம். ஹி ஈஸ் ஆல்ரைட்."

அது என்னை அப்புறப்படுத்துவதற்க்கான முயற்சி, அல்ல. தடாலென்று காலில் விழுந்த எஸ்கேப்புமல்ல,..உள்ளத்திலிருந்து வந்த வார்த்தை..எனக்கு புரிந்தது இவரால் இவ்வளவுதான் பேச முடியும். பாம்பின் கால் பாம்பறியும், வியாபாரங்கள் அப்படித்தான். கழிவுகள் மட்டுமே விளம்பரம் செய்யப்படும் லாபங்களல்ல.  கட கட வென்று பணம் செட்டில் செய்து, அப்பாவை வீட்டிற்கு கூட்டி வந்தேன். மறு நாள் அப்பாவுடன் குடும்ப மருத்துவரை சந்தித்தபோது, பரிந்துரை செய்திருந்த வீரிய மருந்துகள், அதனால் ஏற்ப்பட்ட கால் வீக்கம், பார்த்து நொந்து போனார். மீண்டும் ஒரு வழியாய் அப்பாவை சகஜ நிலைக்கு கொண்டுவர போதும் போதும் என்றாகிவிட்டது.

நான் இங்கே மருத்துவ மனையையோ, மருத்துவர்களையோ குறை சொல்ல வரவில்லை. காசு எல்லாருக்கும் வேண்டும்தான். ஆனால் அதனை அலட்சியமாய் சம்பாதிப்பதை நான் வெறுத்தேன். போன மாதம் 80 ஆவது வயதிற்கு முதன் முதலாய் கேக் வெட்டி என் அப்பா பிறந்த நாள் கொண்டாடினார். வெறும் மருந்துகளின் மூலம் அவரை நிம்மதியாய் வைத்துள்ள எங்கள் குடும்ப மருத்துவரை நான் தெய்வமாகவே பார்க்கிறேன்.  இருதய நோயாளிகளுக்காக மட்டுமே இயங்குகிற ஒரு மருத்துவமனை சரியான மருந்துகளை ஏன் பரிந்துரைக்கவில்லை? இத்தனைக்கும் வெறும் மூன்று நாட்கள் ICU வில் வைத்து ஊசி போட்டதற்கு நான் கொடுத்தது கிட்டத்தட்ட 30000/- ரூபாய்..

உள்ளே வருபவனை ஒரே அமுக்காய் அமுக்கி குறைந்தது 60000 அல்லது 75000 மினிமம் பட்ஜெட் ஆஞ்சியோ ட்ரைலர் எடுத்து DVD யில் போட்டு காமித்து,  முழு நீள பைபாஸ் படம் எடுக்க 2 லட்சத்திற்கு மேல ஆகும் எப்படி வசதி? சீக்கிரம் முடிவை சொல்லுங்கள் என்ற மிரட்டல் பேரம்தான் உறுத்தியது.

தெரிந்த நண்பரின் பிறந்த குழ்ந்தைக்கு ஓப்பன் ஹார்ட் இருதய அறுவை சிகிச்சை செய்தது எனக்கு தெரியும் அது மிகவும் முக்கியம் இல்லாவிடில் ஆபத்து, இன்று நெஞ்சில் அரையடி வடுக்களோடு அது செய்யும் லூட்டிகள் பிழைக்க வைத்த மருத்துவர்களை பார்த்து கீழே விழுந்து வணங்கத்தோன்றுகிறது. டீசல் இன்ஜின் பழுது பார்க்க நாங்களும் இதுபோன்றதொறு உத்தியை தான் பயன் படுத்துகிறோம் மிக சாதாரணமான வியாபாரம் ஆயினும் ஒவ்வொரு வேலைக்கு முன்பும் பின்பும் தொட்டு கும்பிட்டு பின்பே வேலை ஆரம்பிக்கும் நல்லபடியாய் வேலை முடிக்க அனுமதி கேட்கப்படும், நிமிடத்திற்கு 1500 முறை சுற்றும் ஆயிரக்கணக்கான உதிரிகள் உதிராமலிருக்க எப்போதும் ப்ராத்தனை இருக்கும் ஆனால் ஏதேனும் தவறானால் முழு பொறுப்பேற்று உடைந்தவைகளை மாற்றி மீண்டும் உயிர்ப்பித்து தருகிறோம்.

 இங்கு அதற்கு வாய்ப்பில்லை, சிறு பிசகும் மரணத்தை தரும், ஒரு குடும்பத்தின் , நம்பிக்கையின் ஜீவனோடு கத்தி சண்டை போடும் இவர்களை நம்பி வருபவர்களை துரோகம் செய்து பிழைப்பு நடத்துவதற்கு வேறு வேலை செய்யலாம்.

அந்த மருத்துவமனையிலுள்ளவர்களை தெய்வமாக நம்பி சிகிச்சைக்கு அழுதுகொண்டே வருபவர்களின் பயமும், பாசமும், கண்ணீரும், விசும்பல்களும், அறியாமையும் அதனதன் அளவுகளுக்கேற்ப பணமாய் மாறி கல்லாவில் நிறம்பிக்கொண்டே இருக்கிறது.

43 comments: