2009 ஜனவரி 2-ம் நாள் இருந்த இருசக்கர வண்டி கொஞ்சம் ஊடல் பண்ணியதால் மாற்றி விடலாம் என்று பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருக்கும் அந்த பிரபல ஷோரூமுக்கு போய் டிவியில் மின்னல் வேகத்தில் போகும் வண்டியை புறம் தள்ளி, ஸ்பெசல் மசாலா ’கண்டுபிடிப்பு 135’ ஐ தேர்வு செய்தேன்.
கொடுத்த வண்டி போக மீத தொகைக்கு, ஸ்பெசல் மசாலா பெயரிலேயே வழங்கப்படும் ஃபைனான்ஸ்சை தேர்ந்தெடுத்தேன், கேட்ட ஆவணங்களை கொடுத்து, ஈசிஎஸ் சில் பணம் ஒரு வருடத்திற்கு மாதா மாதம் எடுக்க கையெழுத்திட்டு அதற்கான காசோலையும், புகைபடமும் தந்து,. உடனடி டெலிவரி எடுத்து, பாடிகாட் தலைவரிடம் அட்டெண்டன்ஸ் போட்டு, ஓட்ட ஆரம்பித்தேன். வழக்கம்போல தின வாழ்வு நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது.
பிப்ரவரிக்கு மேல்தான் வங்கியிலிருந்து பணம் எடுக்கப்படும் என்று சொல்லி இருந்தார்கள். மார்ச், ஏப்ரல் வரை பணம் எடுக்கவில்லை திரும்பவும் ஷோரூமில் கேட்டதற்கு சில சமயம் அப்படி தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
மே மாதத்தில் முதல் ஏழரை ஆரம்பம்..
“ஹலோ மிஸ்டர்.சங்கர்”
“சொல்லுங்க”
“ஸ்பெசல் சாதா தோசை 135 வாங்கினீங்களே, பணம் கட்டலியே”
“இல்லைங்களே, என் கணக்குல உங்களுக்கான பணம் அப்படியே தான்
இருக்கு” காதில் போட்டுக்கொள்ளாத அந்த கடமை தவறாத வாடிக்கை சேவை குயில்..
“இல்லைங்க ஈசிஎஸ் பவுன்ஸ் ஆகுது, ப்ராப்ளம் உங்க பேங்லதான், கொஞ்சம் செக் பண்ணுங்க” எனக்கு கோவம் வந்தது.
“ஏம்மா ஈசிஎஸ்-னா ’ஸிஸ்டம் பேஸ்டு’தான, 10-ம் தேதி, பாங்க்காரன் கல்லாவ தொறந்த உடனே காசு கம்ப்யூட்டரே எடுத்திடும், உங்க ஸைடுல தவறு இருக்கும் பாருங்க.”
“இல்லைங்க எங்களுக்கு, பவுன்ஸ் ஆகுதுன்னு ரிப்போர்ட் வந்திருக்கு மொதல்ல பாங்க்ல செக் பண்னுங்க”
எனக்கு புரியவில்லை, சரி எங்கயோ தவறு, இப்பவே சரி பண்ணிடலாம்னு, என்னுடைய வங்கிக்கு போய் கேட்டா, ”
அப்படி ஒரு ஈசிஎஸ் ரிக்வெஸ்ட்டும் உங்க கணக்குக்கு வரலையே, அக்கவுண்ட்ல வேண்டிய பணமும் இருக்கு, நாங்க ஏன் சார் ரிட்டர்ன் அனுப்ப போறோம், வேணும்னா, மவுண்ட் ரோட்ல எங்க ஈசிஎஸ்-இன்சார்ஜ் இருக்காங்க போய் பாருங்க”
சரி என்று அங்கேயும் போனேன், அங்கிருந்த பெண்மணி தெளிவாய் சொல்லிவிட்டார்,
“இல்லைங்க, எதுவும் வரல, அவங்க பேப்பர மிஸ் பண்ணி இருப்பாங்க, ஸ்பெசல் மசாலா கம்பெனிலயே கேட்டுபாருங்க”
இதெல்லாம் நடப்பதற்குள், பல போன் அழைப்புகள், ஒருவர் காலம் காலையில் வீட்டிற்கே வந்து ..
“சார், டியூ கட்டலையே கேஷா தற்றீங்களா?”
அமைதியாய் நல்ல வார்த்தைகள் தேர்ந்தெடுத்து, நிலைமையை அவருக்கு சொல்லி, இனி இது போல வீட்டிற்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.
என் பெயரிலும், வங்கி பெயரிலும் தவறில்லை, இனி மசாலாதான் பதில் சொல்லவேண்டும் என்று ஜெமினி மேம்பாலத்தின் அருகில் இருக்கும் அவர்களின் தலைமை அலுவலகத்தில் போய் சம்பத்தப்பட்ட நபரை பார்த்து நடந்ததை சொன்னேன். அவரும் பொட்டியில் தட்டி உங்க லோன் அக்கவுண்டே அப்டேட் ஆகலியே என்று தேடி எடுத்து,
”சரிங்க சார், ஒண்ணும் ப்ராப்ளமில்லை , இதுவரைக்கும் உண்டானத பணமா இப்ப கட்டிடுங்க, மிச்சம் அடுத்த மாசத்திலிருந்து, ஈசிஎஸ் ல போய்டும்” எனக்கு பிசிறு தட்டியது, எப்படி நம்புவது...
”நீங்க இத ஒரு லெட்டரா கொடுத்துடுங்க, அப்பறம், நான் கேஷ் தரமாட்டேன், பணம் கணக்குல அப்படியேதான் இருக்கு ஈ சி எஸ்-ல மொத்தமா கூட எடுத்துக்கங்க, நோ ப்ராப்ளம்”
“இல்ல சார் லெட்டர் கொடுக்க எனக்கு அதிகாரம் கிடையாது, மெய்ன் சரக்கு மாஸ்டர் வந்ததும், கால் பண்றேன், லெட்டர் வந்து வாங்கிக்கங்க”
எதுக்கும் இருக்கட்டும் என்று ஒரு ஸ்டேட்மெண்ட் வாங்கிக்கொண்டு கிளம்பினேன். ஒவ்வொரு மாதத்திற்கும் பெனால்டியோடு நிறைய வரிகள் அடித்து என் பெயர் போட்டு தந்தார்கள்.
திரும்பவும், போன் கால்கள் தொடர்ந்தது, அதே பல்லவி, ஏன் சார் டியூ கட்டல, வீட்டுக்கு வந்து பணமா வாங்கிக்கலாமா..இன்ன பிற..ஒவ்வொருமுறையும் பொறுமையாய் நடந்த விஷயங்களை சொன்னேன்.. ம்ஹும் ஒரு மாற்றமுமில்லை, ஜூன், ஜூலை, பணம் அப்படியே இருந்தது. மீண்டும் ஒருமுறை தலைமை அலுவலகம் சென்று, கொஞ்சம் அழுத்தமாக பேசியவுடன்,
“சார் எதுக்கும் நீங்க ஒரு ஃப்ரெஷ் ஈசிஎஸ்-மாண்டேட் ஃபார்ம் வாங்கி தந்துவிடுங்களேன் ஒங்க பாங்க்லேர்ந்து, நான் பார்த்துக்கரேன்.”
”எனக்கு அது பிரச்சனை இல்லைங்க. ஒரு லெட்டர் குடுத்துடுங்க, இது வரைக்கும் நடந்த தாமதத்திற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்லன்னு, ஏன்னா நீங்க இப்ப இருப்பீங்க, நான் லோன் முடிஞ்சு, என் ஓ சி வாங்க வரும்போது வேற யாராவது இருப்பாங்க, பெனால்டி, அதுக்கு வட்டின்னு ஆரம்பிச்சா பிரச்சனை, அதனாலதான் லெட்டர் கேக்கறேன்”
திரும்பவும் அவர் ”இல்லைங்க எனக்கு அதிகாரம் இல்லை”
’அப்ப ஃபார்ம் கொடுங்க இன்னைக்கே இத ரெடி பண்ணிட்றேன், ஆனா எப்ப லெட்டர் தறீங்களோ அப்பதான் கொடுப்பேன், அதுவரைக்கும் எனக்கு யாரும் லூசுத்தனமா டியூ கேட்டு போன் பண்ணக்கூடாது”.
சொல்லிவிட்டு வந்துவிட்டேன். ஆகஸ்ட் மாதம் எனக்கு வேறு ஒருவர் போன் செய்தார்,
”தவறு நடந்துவிட்டது, நான் கடிதம் தர ஏற்பாடு செய்கிறேன்” என்றார்,
”ஒன்றும் பிரச்சனை இல்லை, ஈசிஎஸ் பார்ம் ரெடியாக் உள்ளது, பணமும் வங்கி கணக்கில் அப்படியே உள்ளது எப்போதுவேண்டுமானாலும் பணம் மொத்தமாய் எடுத்துக்கொள்ளுங்கள், அனால் கடிதம் முக்கியம்”
பூனாவில் உள்ள அவர்களின் அலுவலகத்திலிருந்தும் எனக்கு அழைப்பு வந்தது, கடிதம் தருவதாயும் கூடவே வாக்குறுதியும். அப்பாடி யாரோ செய்த தவறு, இப்போதாவது முடிகிறதே என்று நான் அவர் கூப்பிட்ட ஒரு நாளிள் சென்றேன். நான் வண்டி எடுத்தபோது கொடுத்த அனைத்து படிவங்களும், காசோலைகளும் தொலைந்து விட்டதாக (எட்டு மாதங்கள் கழித்து-என்ன ஒரு கண்டுபிடிப்பு!) தெரிவிக்கப்பட்டிருந்தது. சரி என்று நான் கடிதம் வாங்கி, புதிய ஈசிஎஸ்-படிவம், ஒரு காசோலையும் தந்துவிட்டு, காத்திருந்தேன். சரியாக செப்டம்பர் 10ம் தேதி பணம் எடுக்கப்பட்டிருந்தது, மொத்தமாக, ஆனால் ஒரு தவணை குறைவாக, சரி இடைப்பட்ட காலத்தில் விட்டிருப்பார்கள், அடுத்த மாதத்தில் எடுத்துவிடுவார்கள் என்று எண்ணி, விட்டுவிட்டேன். செப்டம்பர், 28ம் நாள் வழக்கம் போல பணி நிமித்தம் சில இடங்களுக்கு சென்று விட்டு, ஒரு முக்கிய வாடிக்கையாளரின் வீட்டில் காம்பவுண்டிற்கு உள்ளே, வண்டியை நிறுத்தி, பூட்டிவிட்டு, ஹெல்மெட்டை வண்டி மேல் வைத்துவிட்டு உள்ளே போய் 10 நிமிடத்தில் வெளியில் வந்து பார்த்தால் வண்டியை காணோம்.
அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று, புகார் செய்யும்போது, பணியிலிருந்த காவலர்,
“வண்டி ஃபைனான்ஸா”
“ஆமாம் சார், ஆனால் பணம் எல்லாம் ஒழுங்கா..”
“சார் எதுக்கும் நீங்க அவங்க கிட்ட ஒரு வார்த்த கேட்டுடுங்க, இந்த மாதிரி காரியம் எல்லாம், அவங்க தான் செய்வாங்க” சரி என்று எனக்கு கடிதம் தந்தவரை கூப்பிட்டேன், அவரோ மறுத்தார்,,
“எதுக்கும், ரெக்கவரி டிபார்ட்மெண்ட் நம்பர் தரேன், நீங்களே கேட்டுடுங்க” சரி என்று அழைத்தால், “வண்டி நம்பர் சொல்லுங்க, ஆமா வண்டி ச்சீஸ் பண்ணிருக்கோம், வந்து பணம் கட்டி எடுத்துக்கங்க”
”ஹலோ நான் எல்லா பணமும் கட்டியும் எப்படி எடுப்பீங்க, நான் கம்ப்ளெய்ண்ட் பண்னப்போறேன், உங்க மேல கேஸ் போடுறேன், என்ன நினைச்சிட்டுக்கீங்க உங்க மனசுல”
அவர் நக்கலாக ”நீங்க என்ன வேணா பண்ணிக்குங்க, வந்து, பணம் கட்டின ரசீது, காட்டினா வண்டி கிடைக்கும்” தொடர்பு துண்டித்தேன். பசி, கோவம், ஆத்திரம், கடிதம் கொடுத்து வாக்கு தந்தவனை அழைத்து கேட்டால், மழுப்பினான்,
போலீஸ்காரர், ”நீங்க புகார் கொடுங்க, தாயோளி அவனுங்கள இங்க வரவெச்சு ஒரு வழி பண்ணிடறேன்” அதற்குள் கூட இருந்த, உதவியாளன், அந்த ஏரியாவின் பெரிய மனிதரிடம் அழைத்து சென்றார். அவரோ..
“சார், கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால்லாம் ஒன்னும் ஆவாது, நீங்க மொதல்ல ஸ்பெஷல் மசாலா அபீஸுக்கு போங்க, வண்டிய பார்த்துடுங்க, அவங்க கிட்ட பேசுங்க, சுமூகமா முடிஞ்சிருச்சினா விட்டிருங்க” எனக்கு சரி என்று பட்டது. முதலில் வண்டி அவர்களிடம் இருப்பதை உறுதி செய்ய கிளம்பி போனேன்.
அங்கு சென்று ”சார் என் வண்டி சீஸ் பண்ணிட்டாங்க”
“அங்க போய், மொதல்ல ஸ்டேட்மெண்ட் வாங்கிட்டு வாங்க” வந்தேன்.
“என்ன சார் ஒரு டியூ கட்டல போல, அதான் வண்டி சீஸ் பண்ணிட்டாங்க” அதற்கு முன் வரியில் ஏன் மொத்தமாய் பணம் எடுக்கப்பட்டிருக்கிறது, என்ன இதுவரை நடந்தது எதுவும் அக்கரை இல்லை,
”நீங்க பணம் கட்டிட்டு வண்டி எடுத்துக்குங்க” எனக்கு கோவம் வந்தாலும் மொதல்ல நடந்ததுக்கு ஒரு ரெக்கார்ட் வேண்டுமென்று புத்தி சொல்லியது.
“
சார், நான் இது தெரியாம போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெய்ண்ட் கொடுத்துட்டேன், உங்காளுங்க, என் வண்டிய எடுத்த வீடு வேற ஒரு எம் எல் ஏ வோடது, இப்ப எஃப் ஐ ஆர், கான்ஸல் பண்னனும்னா, வண்டி உங்ககிட்டதான் இருக்குன்னு ஒரு லெட்டர் கேக்கறாங்க அதான்.
“அப்படியா, இந்தாங்க, பொஸஷன் லெட்டெர்” அந்த உன்னதமான ஸ்பெஷல் தோசை கம்பெனியின் கலெக்ஷன் அதிகாரி வண்டியை ’தூக்கிவிட்டது’ தாங்கள்தான் என்று, கையெழுத்து போட்டு தந்தார். மெதுவாய் நான் வண்டி வாங்கியதிலிருந்து நடந்த விஷயங்கள், தவறு அவர்கள் மீதுதான் என்று அவர்களின் பூனா அலுவலகமே ஒத்துக்கொண்ட லெட்டர் போன்றவைகளை காண்பித்து மொத்த அலுவலகமும் என்னை பார்க்கும் வ்கையில் சவுண்ட் விட்டதும். கையெழுத்து பார்ட்டியின் தலைமை அதிகாரி என்னை அழைத்து, அப்போதுதான் விவரங்கள் கேட்டார், சொன்னதும்,
“ஸோ சாரி சார், உங்கள் வண்டி இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள் வீடு வந்து சேரும்”
என்னால் முடியவில்லை, அலைச்சலும் கோபமும், பசியுமாய் ஒருவழி ஆகி இருந்தேன். சரி இதோடு விட்டது சனி என்று வீடு வருவதற்குள், அப்படியே, என் தந்தையிடம் சொல்லிவிட்டு ”ஸ்பெஷல் மசாலா 135” ஐ, வீட்டு வாசலில் விட்டு விட்டு ’எஸ்’ ஆகி இருந்தார்கள் இரண்டு பேர்,. வண்டியை சோதனை இட்டால், லாக் உடைக்கப்பட்டிருந்தது, ஹெல்மெட் சேதம், ஒரு சொட்டு கூட பெட்ரோல் இல்லை (பாதி டாங்க் நிரப்பி வைத்திருன்தேன்) உடனே மீண்டும் ஸ்பெஷல் மசாலா கம்பெனிக்கு போன்,
“ஓ அப்படீங்களா, நீங்க ஷோரூம்ல ரிப்பேர் பண்ணிடுங்க, பேய்மெண்ட் நாங்க பாத்துக்கறோம்” அடுத்த நான்கு நாட்க்கள் ஆயுத பூஜை லீவு, ஐந்தாம் நாள், கொடுத்து, லாக் செட் கிடைகாமல் வண்டி கையில் வர 10 நாள் ஆகி விட்டது. செலவு 800 சொச்சம்.
”சார் பணம் நீங்களே கட்டி விடுங்கள், பில்லை அபீஸில் கொடுத்துவிடுங்கள்” இது லெட்டெர் கொடுத்த புத்திசாலி. சரி என்று மீண்டும் ஸ்பெஷல் சாதா ஆபீஸ், பில்லை கொடுத்தால் கையெழுத்து பார்ட்டியின் தலைமை அதிகாரி ”சார் தீபாவளி முடிஞ்சதும், க்ளியர் பண்ணிடுறேன்,” ஒழியட்டும் என்று வந்துவிட்டேன். அனால் மனது ஆறவில்லை, அது எப்படி ஒரு தவறும் செய்யாமல் எனக்கு இந்த தண்டனை, மெதுவாய் கூகுள் ஆண்டவரிடம் விவரங்கள் சேகரித்தால் நிறைய பேர், தோசை சுட்டிருப்பது தெரிந்தது, கூடவே நுகர்வோர் உரிமைகள் பற்றியும் தேடியபோது, அடையாரில் ஒரு குழு நுகர்வோருக்காய் இயங்கி வருவது அறிந்து, அவர்களுக்கு மொத்த கதையையும் மின் அஞ்சல் செய்தேன்.
அதற்குள் நவம்பர், டிசம்பர் பணம் எதுவும் எடுக்கவில்லை என்று வங்கி கணக்கு சொல்லியது. மீண்டும் ஒரு தோசை நோக்கி பயணம், முதலிலேயே ஸ்டேட்மெண்ட் வாங்கி விட்டேன். அது அப்படியே தான் இருந்தது வட்டி மற்றும் அதற்கான குட்டியுடன், இப்போது உபரியாக வண்டி சீஸ் பண்னியதற்கு அபராதம் ஒரு 3000/- ரூபாய் கணக்கில் ஏற்றப்பட்டிருந்தது. சுருட்டி கையில் வைத்துக்கொண்டு, அதிகாரமில்லாத பார்ட்டியிடம் சென்று,
“2 மாதங்களாக என் கணக்கிலிருந்து பணம் எடுக்கபடவில்லை, திரும்பவும் வண்டி தூக்க ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்று கேட்டேன், வழக்கம் போல மண்டை சொறிந்து, கையெழுத்து பார்ட்டியின் தலைமை அதிகாரியிடம் அழைத்து சென்றார்,
“இல்லங்க, பெனால்டி எதுவும் போடமாட்டாங்க, நான் அப்பவே இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துட்டேன்” நான் மெதுவாய் ஸ்டேட்மெண்ட் நீட்டி
”நீங்க சொல்றது பழைய கதை, இப்போது சீஸ் பண்ணிய வகையில் ரூபாய்.3000/- சேர்ந்திருக்கிறது, உங்க ஸிஸ்டம் எல்லாம், வண்டிய தூக்கறதும், பெனால்டி போடறதும், காசு புடுங்கறதுமாகவே இருக்கே, கஸ்டமர் கிட்ட ஒரு வார்த்த கூட என்ன ஏதுன்னு கேக்கமாட்டீங்களா? பிரச்சனை தீக்கறதுக்கான வழியே யாரும் பேசாம, காசு ஒண்ணே குறியா இருக்கீங்களே, இதுதான் உங்க கம்பனி லட்சணமா? ”
“இல்ல சார், நான் என்னன்னு பாக்கறேன், பெனால்டி எதுவும் வராது”
நான் வெறுத்து போய் எழுந்து வந்துவிட்டேன். அடையார் நுகர்வோர் குழுவிலிருந்து எனக்கு போன் வந்தது, முதலில் அவர்களுக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் அனுப்ப சொன்னார்கள், கொஞ்சம் அவகாசம் கொடுத்து பதில் கேட்க்கலாம் என்று, ஆயிற்று திரும்பவும் “சார் டியூ கட்டலயே” என்ற போன் கால் வந்த போது, மொத்த ஸ்பெஷல் மசாலா தோசை மாஸ்டர் எண்களையும் கொடுத்து அவர்களிடமே கேளுங்கள் என்று வைத்துவிட்டேன். 2 மாதங்களாகியும் பதில் வராததால் நஷ்ட ஈடு கேட்டு ஏன் உங்கள் மீது வழக்கு தொடுக்க கூடாது என்று இப்போது நுகர்வோர் சங்கத்திடமிருந்தே ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன். ம்ஹூம். அதிசயமாக இந்த மாதம் ஒரு தவணை மட்டும் பணம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மற்ற விஷயங்கள் கிணற்றில் போட்ட கல்தான்.
ஒழுங்காய் பணம் செலுத்திய எனக்கு நேர்ந்த கதி இதுதான், நானும் விடுவதாயில்லை, நுகர்வோர் நீதிமன்றம் எனக்கு என்ன நீதி வழங்கபோகிறது என்று பார்க்கபோகிறேன். இப்படி ஒரு மொள்ளமாரித்தனம் செய்தும் ஒரு கவலையுமின்றி செயல்படும் இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது என்று தெரிந்துகொள்ள ஆசை. எத்தனையோ விஷயங்களில் கண்டும் காணாது போவதுதான் இவர்களின் பலமென்றால், எனக்கு என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்..
(உங்களின் கருத்து எனக்கு உதவுமென்றால் தயவுசெய்து தெரியப்படுத்துங்கள்.
நிஜமாகவே இவ்வளவு பெரிய பதிவை பொறுமையுடன் படித்ததிற்கு நன்றி.
குடியரசு தின வாழ்த்துக்கள்.