பலா பட்டறை: கடவுளின் குழந்தைகள்..

கடவுளின் குழந்தைகள்..

    கடவுளின் குழந்தைகள்..







DOWN SYNDROME  எப்போதும் எனக்கு தோன்றுவது இதுதான்: எதுனா பிரச்சனை வந்தா அழகா ஒரு பேர் வெச்சிட்டு அடுத்த வேலை பார்க்கப்போய்விடுகிறோம்.




பிறகு அதை பற்றிய ஏதேனும் பேச்சு வரும்போது ஹாங்..அந்த வியாதிக்கு என்னா பேரு?..-ன்னு ஞாபகப்படுத்தி ரொம்ப கஷ்ட்டம்ப்பா அது எப்படித்தான் சமாளிக்கிறாங்களோ.?.மற்றும் இன்ன பிற வசனங்களோடு நமது அன்றாட வேலைகளில் கரைந்து காணாமல் போகிறோம்.

இந்த குறைபாடுடைய குழந்தைகள் வளர்க்கும் பெற்றோர்களை நான் பார்த்திருக்கிறேன். வாழ்வில் நமக்கு பிரச்சனைகளற்ற விஷயங்களிள் நாம் சிறிது கூட கவனம் செலுத்துவதில்லை என்பதற்கு அவர்கள் உதாரணம். அது ஒரு குறைபாடு என்று சொல்வதற்கு நமக்கு தகுதி உண்டா? தெரியாது. இத்தனைக்கும் ஒரு குரோமோசோம் அதிகமான குழ்ந்தைகள் அவர்கள். யார் வீட்டில் இறப்பு நிகழவில்லையோ அவர்கள் வீட்டு சாம்பலை எடுத்து வாருங்கள் நான் இறந்தவரை உயிர்ப்பிக்கிறேன் என்ற வாக்கியம் நினைவுக்கு வருகிறது.

துரு துரு குழந்தைகள் வளர்ப்பதற்கே சலிப்படையும் நாம் அந்த குழந்தைகள் வளர்க்கும் பெற்றோர்களை ஒரு முறை கவனித்தால் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடும், அர்ப்பணிப்பும், ஒரு தவமும் தெரியும். முக்கியமாய் தந்தைகளை நான் பார்த்த வரையில் கிட்டத்தட்ட ஒரு ஞானியின் நிலையில் அதிகம் பேசாமல் அன்பு பாராட்டக்கூடியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

வளர வளர குழந்தையாகவே இருக்கும், எல்லாவற்றிற்கும் ஒரு உதவி தேவைப்படும் அந்த கடவுளின் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் என்றும் பெற்றோர்களே. சலிப்பே இல்லாத எதிர்பார்ப்பில்லாத ஒரு அன்பை காலம் முழுதும் வழங்க தயாராகும் முடிவெடுக்க நிரம்ப தைரியமும், பொறுமையும் வேண்டும்.



சாப்பாட்டில் ஒரு குறை இருந்தாலும், வண்டி ஓட்டிக்கொண்டு போகும்போது சிக்னலில் சில நொடிகள் காத்திருப்பதற்கும், வரிசையில் நிற்க முடியாது குறுக்கு வழி தேடி அரசாங்கத்தை குறை சொல்லி, அடம் பிடிக்கும் குழந்தையை ‘சனியனே ’ என்றும், இன்னும் பலவற்றை தினக்கடைமையாகவே மாற்றி கடைசி ஓவரில் சொர்ப்ப ஓட்டங்களில் தோற்கும் அணிக்காக ஒரு நாளை முழுவதும் வீணாக்கும் நமக்கு எதிர்பார்ப்பில்லாத அன்பென்பது வேற்றுகிரக வாசிகளின் மொழியாகத்தான் தெரியும்.




இது பண்ணனும்னா எனக்கு என்ன லாபம்?


எனக்கு எப்பொதும் வியப்பளிக்கும் இந்த வசனம் நான் முதலில் கேட்டது 17 ஆவது வயதில் வேலைக்கு போனபோது.  என்னுடைய குடும்பத்துக்கான சம்பாத்தியம் என்பது என்னுடைய பள்ளிப்படிப்பு முடிந்த உடனே தொடங்கிய ஒன்று. கூடப்படித்த நண்பர்கள் எல்லாம் அழகாய் கல்லூரிக்கு செல்ல, நான் வேலைக்கு போனது எனக்கே ஆச்சரியமான ஒன்று. அந்த சிறிய வயதில் வேலை எனக்கு பல வயதில், அனுபவத்தில் முதிர்ந்த நண்பர்களை தந்தது. நிறைய படாமலே பட்டு தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை தெரிந்துகொண்டேன். கூடவே புத்தக படிப்பும் சுதந்திரமான பெற்றோரும், கூட பிறந்தவர்கள் யாருமில்லாத தனிமையும் பல வயதுக்கு மீறிய யோசனைகளை மூளையில் தண்ணீர் விட்டு வளர்த்துக்கோண்டே இருந்த நேரம். லாப நஷ்டங்களை பற்றி கவலைப்படாத ஒரு வாழ்க்கையை என் தந்தை சொல்லாமலே போதித்திருந்தார், சம்பாதித்ததை விட இழந்தவைகள் அதிகமான அவரின் வாழ்வில் ’இன்றைய பொழுது இனிதே கழிந்ததது நன்றி!’ என்ற எளிய சூத்திரம் மகிழ்ச்சியை அள்ளி தந்துகொண்டிருந்தது. இதுதான் வேண்டுமென்ற எந்த எதிர்பார்ப்புமற்று இன்றைக்கும் என்னால் வாழ முடிகிறதென்றால் அதற்கு என் தந்தையே முழு முதல் ஆசான். அதனாலேயே இந்த லாப நஷ்ட்ட கணக்குகள் என்னை கொஞ்சம் சங்கடப்படுத்தும்.

" ஏன்? நான் என்னாத்துக்கு செய்யனம்? என் டைம் ஓவர், வேற யாராவது செய்யட்டும்" போன்ற கேள்விகளுக்கான எனது விளக்கங்களில் நான் கேலிப்பொருள் ஆக்கப்பட்டேன். நான் முகமூடி அணிந்து மனிதர்களை சந்திக்க முடிவெடுத்த்து அப்போதிலிருந்துதான்.

ஆனால் தினசரி வாழ்வில் வேலைக்காகவும், பொது ஜன கூடலுக்காகவும் என்னால் அணியப்பட்ட அந்த முகமூடி இந்த மாதிரி குழந்தைகளையும், அவர்களை கொஞ்சும் பெற்றோர்களையும் பார்க்கும்போது காணாமல் போய் விக்கித்து நிற்க வைக்கும். உடனே மனம் வேக வேகமாய் கணக்கு போட்டு

 ”ஏன்ப்பா உனக்கு இப்படி ஒரு குழந்தை பிறந்தால் நீ என்ன பண்ணுவ?”

என்று என் சுய ரூபத்தை தட்டி எழுப்பும். ஒரே அடியில் தட்டி நசுக்கி, அதை சாகடித்துவிட்டு சர்வ நாசம் செய்து, எதிர் வரும் பெண்ணின் இடுப்பையோ, எதாவது விளம்பரத்தையோ பார்த்து, நினைத்து என்னால் ஏன் கடந்து போக முடியவில்லை? பலமுறை நான் யோசித்தும் எனக்கு கிடைக்காத பதில் அது.

இம்மாதிரி குழந்தைகள் இரண்டு பேர் என் வாழ்வில் மிக நெருக்கமாய் கண்டதுண்டு. நடக்க முடியாது, புன்னகைத்த முகத்துடன் நம்மை பார்த்து ஏதோ சொல்லவரும் அவர்களின் மொழி என்னால் ரசிக்கமுடியாமல் மெதுவாய் தலை கோதி சிரித்துவிட்டு வந்திருக்கிறேன். எந்த வித சங்கோஜமும் படாமல் பெற்றோர்களும் என்னை குழந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கும்போது. என்னுடைய இருப்பே தெரியாது ஜடமாய் உணர்ந்த நேரங்கள் அதிகம். ஏன் இப்படி ஒரு படைப்பு என்று படைப்புகளின் மீதே வெறுப்பு வந்ததுண்டு. ஆனால் மனிதம் சோதிக்க, அன்பை சோதிக்க, இவ்வுலகில் நம் இருப்பின் நோக்கத்தை சோதிக்க ஏதோ ஒரு சக்தி செய்யும் வேலையாக இருக்குமோ என்று எனக்கு நானே சமாதானமாகி இருக்கிறேன். தனக்குப்பின் யார் அந்த குழந்தையை கவனித்துகொள்வார்கள் என்ற கவலை கூட வெளிக்காட்டிக்கொள்ளாது, தினம் தினம் உடல் துடைத்து, பள்ளிக்கு அழைத்து சென்று, பல வித வழிகளில் அவர்களை சுயத்தில் நிற்க வைக்க அக்குழந்தைகளின் பெற்றோர்கள் செய்யும், காட்டும் அன்பு எதாலும் ஈடு செய்ய முடியாத ஒன்று.

"எனக்கு என்னா தருவ?" என்று ஆரம்பித்து உன் மதம், என் மதம், நான் பெரியவன், நீ சிறியவன், உன் யோக்கியதை, என்தை போன்ற எந்த பேறறிவு கழிசடையும் தெரியாது மற்ற ஜீவ ராசிகளை போல தனி மொழியில் அவர்கள் நமக்கு, எந்த எதிர்பார்ப்புமில்லாத வாழ்வை போதிக்கிறார்கள்.

அங்கே மொழிகள் தேவை இல்லை, வழிபாடு தேவை இல்லை, முகஸ்துதி தேவை இல்லை, பொறாமையோ, போட்டியோ, மற்றவனை அழித்து நான் வாழ வேண்டுமென்ற அசாதாரண தத்துவங்களோ இல்லை. வெறும் சிரிப்பு, சில ஒலிகள், பேதமில்லாத வாழ்வு. கடவுளின் குழந்தைகள் இப்படித்தான் இருக்க வேண்டும். மனிதர்கள் வயிற்றில் பிறந்து மனித க்ரோதங்கள் மறுத்து, பிறப்பின் ஸ்ருதியை வாழ்க்கை முழுவதும் பற்றி இருக்கும் அவர்களைப்போல் இருக்க எந்த ஞானியாலும் முடியாது.        

இப்படி பாதிக்கப்பட்ட ஒரு தன்னம்பிக்கையான குழந்தையின் பக்கத்தை பாருங்கள்.

மனித வாழ்வில் அன்பும், பகிர்தலும், சக ஜீவன்களை மதித்தலும் இப்போது மிக அவசரமாக, அவசியமாக கையிலெடுத்து பயன்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது. நம்முள்ளே அந்த விதையை நட்டு அகிலமெங்கும் தூவுவோம்.




.
    


            







45 comments:

sathishsangkavi.blogspot.com said...

முற்றிலும் வித்தியாசமான பகிர்வு...

இனிய தைத் திருநாள் வாழ்த்துக்கள்....

கலையரசன் said...

தோல்வியிற் கலங்கேல் என்பது போல ஊக்கம் தரும் இடுகை, தலைவா!!

கலையரசன் said...

தோல்வியிற் கலங்கேல் என்பது போல ஊக்கம் தரும் இடுகை, தலைவா!!

Vidhoosh said...

மிகவும் அருமையான பதிவு. மொழியும் நடையும் அருமையாகிக் கொண்டே வருகிறது ஷங்கர்.

வாழ்த்துக்கள்.

வித்யா

கே.என்.சிவராமன் said...

அன்பின் ச(ஷ)ங்கர்,

ரொம்ப உருக்கமா எழுதியிருக்கீங்க. தேர்ந்தெடுத்து எழுதின சொற்கள்ல உணர்வு கொப்பளிக்குது...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

சைவகொத்துப்பரோட்டா said...

நெகிழ்ச்சியான கட்டுரை நண்பரே. நல்ல விதையை தூவி உள்ளீர்கள், நன்றி.

Chitra said...

ுரு துரு குழந்தைகள் வளர்ப்பதற்கே சலிப்படையும் நாம் அந்த குழந்தைகள் வளர்க்கும் பெற்றோர்களை ஒரு முறை கவனித்தால் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடும், அர்ப்பணிப்பும், ஒரு தவமும் தெரியும். முக்கியமாய் தந்தைகளை நான் பார்த்த வரையில் கிட்டத்தட்ட ஒரு ஞானியின் நிலையில் அதிகம் பேசாமல் அன்பு பாராட்டக்கூடியவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ..........உண்மை, உண்மை, உண்மை. அந்த பெற்றோர்களிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.
அவர்களை பற்றி எழுதி என்னை போல பலரை சிந்திக்க வைத்ததற்கு நன்றிகள் பல.

என் நடை பாதையில்(ராம்) said...

//*மனித வாழ்வில் அன்பும், பகிர்தலும், சக ஜீவன்களை மதித்தலும் இப்போது மிக அவசரமாக, அவசியமாக கையிலெடுத்து பயன்படுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது. நம்முள்ளே அந்த விதையை நட்டு அகிலமெங்கும் தூவுவோம்.*//

vasu balaji said...

ம்ம். உணர்வு பூர்வமான எழுத்து. ஆடிஸ்ம் உள்ள குழந்தைகளின் பெற்றோர், அல்ஸ்ஹீமர்ஸ் நோயாளிகளின் பிள்ளைகளிலும் நான் இவர்களைக் கண்டிருக்கிறேன். வாழ்க்கையே ஒரு தவமாய் வாழ்பவர்கள்.

S.A. நவாஸுதீன் said...

அடர்த்தியான, அழுத்தமான வார்த்தைகள் தேர்ந்தெடுப்பு, உணர்வுகளை வெளிப்படுத்திய விதம், ஒரு உன்னதமான இடுகையை தந்திருக்கின்றீர்கள் சங்கர்.

ரொம்ப நெகிழ்வா இருக்கு.

ஹேமா said...

மனநெகிழ்வான கட்டுரை.இன்னும் மனதில் ஈரம் கசியும் மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.
எத்தனயோ பெற்றோர்கள் இப்படியான குழந்தைகளால் எதிர்காலம் குறித்து மனதால் கஸ்டப்படுகிறார்கள்.

ரோஸ்விக் said...

ஆமாம் சங்கர். இது போன்ற குழந்தைகளை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். எவ்வளவு சகிப்புத் தன்மை, பொறுமை, அன்பு இருந்தால் அந்த குழந்தைகளை அவ்வளவு பக்குவமாக வளர்ப்பார்கள்.
நல்ல தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் இந்த பதிவு என்னை மிகவும் ஆட்கொண்டது.

தேவன் மாயம் said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!

மாதேவி said...

நெகிழ்வான நல்ல பதிவு.

கள்ளம் கபடமில்லாக் குழந்தைகளையும் பெற்றோர்களையும் அவர்களுடைய மிக்க அன்பையும் கண்டு நெகிழ்ந்திருக்கிறேன்.

பெற்றோர்கள் செய்யும் தியாகம் சொல்லக் கூடியதல்ல.

Starjan (ஸ்டார்ஜன்) said...

தன்னம்பிக்கையே வெற்றியின் அடையாளம்

நெகிழ வைக்கும் செய்தி ...

Radhakrishnan said...

மனிதம் சொல்லும் புனிதமான பதிவு. அன்புதனை விதைப்போம்.

மீன்துள்ளியான் said...

பலா நீங்க சொல்லுறமாதிரி அவங்க கடவுளின் குழந்தைகள் மட்டும் அல்ல .. இந்த உலகத்தின் துக்கங்களை நமக்காக தங்கி கொண்டு அவர்களை அறியாமலே இந்த உலகத்தின் மகிழ்ச்சியின் மூல வேர்களாக இருக்கிறார்கள் ..

கண்டிப்பா மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் அழுத்தமான பதிவு இது .. நன்றி பலா எங்களை யோசிக்க வைச்சதுக்கு

மரா said...

ரொம்ப யோசிக்க வைக்கிறீங்களே..இதைதான் அவ்வையார் பாட்டி ‘கூண்,குருடு,செவிடின்றி பிறத்தல் அரிது’னு சொன்னாங்களோ.
உருப்படியான பதிவு.தொடருங்கள்...

ஜான் கார்த்திக் ஜெ said...

நல்ல பல மாற்றங்களை உங்களுடைய இந்த பதிவு தரும்.. அருமை பலா!

Thekkikattan|தெகா said...

தேவையான பதிவு. மாற்று ஷுவிற்குள் நின்று யோசிக்க வைக்கும் கட்டுரை.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க ஷங்கர்

இந்த இடுகை விகடன் குட் ப்ளாக்ஸ்ல

வாழ்த்துக்கள் ஷங்கர்...!

பா.ராஜாராம் said...

great!

nice..

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமையான பதிவு

நட்புடன் ஜமால் said...

பக்குவம்.

Thenammai Lakshmanan said...

மனதை கலங்கடித்த பதிவு ஷங்கர் என்ன செய்ய முழுமையான அன்பு ஒன்றுதான் ஒரே தீர்வு

விஜய் said...

மிக மிக வித்யாசமான பதிவு

இது போன்ற குழந்தைகளுடன் வாழும் பெற்றோர்களின் மனநிலை மிகுந்த வேதனைக்குரியது

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

விஜய்

சீமான்கனி said...

அருமையான பகிர்வு பாலா இவர்களுக்கு உள்ள உருவ ஒற்றுமை கூர்ந்ந்து பார்த்தது உண்டா??பதிவுக்கு பாராட்டுகள்...பொங்கல் வாழ்த்துகள்....

Paleo God said...

மிக்க நன்றி சங்கவி.
மிக்க நன்றி கலை.
மிக்க நன்றி வித்யா ஜி
மிக்க நன்றி சைவகொத்துப்பரோட்டா
மிக்க நன்றி சித்ரா ஜி
மிக்க நன்றி ராம்
மிக்க நன்றி வானம்பாடி சார்
மிக்க நன்றி நவாஸ் ஜி
மிக்க நன்றி அசோக் ஜி
மிக்க நன்றி ஹேமா ஜி
மிக்க நன்றி ரோஸ்விக்
மிக்க நன்றி தேவன்
மிக்க நன்றி மாதேவி
மிக்க நன்றி ஸ்டார்ஜென்
மிக்க நன்றி வெ.ராதாகிருஷ்ணன்
மிக்க நன்றி மீன்ஸ்
மிக்க நன்றி மயில்ராவணன்
::))

Paleo God said...

பைத்தியக்காரன் said...
அன்பின் ச(ஷ)ங்கர்,

ரொம்ப உருக்கமா எழுதியிருக்கீங்க. தேர்ந்தெடுத்து எழுதின சொற்கள்ல உணர்வு கொப்பளிக்குது...

தோழமையுடன்
பைத்தியக்காரன்//

அன்புள்ள சிவா,
15 வருடங்களுக்கு பிறகு சந்தித்ததில் மகிழ்ச்சி..பள்ளி நினைவுகள் மனதில் அப்படியே இருக்கிறது.

வேறு சந்தர்ப்பத்தில் நட்பாய் உரையாட ஆசை..::))

மிக்க நன்றி.
வ்ருகைக்கும் வாழ்த்துக்கும்.

Paleo God said...

ஜான் கார்த்திக் ஜெ said...
நல்ல பல மாற்றங்களை உங்களுடைய இந்த பதிவு தரும்.. அருமை பலா//

நன்றி நண்பரே..:))

Paleo God said...

Thekkikattan|தெகா said...
தேவையான பதிவு. மாற்று ஷுவிற்குள் நின்று யோசிக்க வைக்கும் கட்டுரை//

மிக்க நன்றி..::))

Paleo God said...

பிரியமுடன்...வசந்த் said..
நல்ல விஷயம் சொல்லியிருக்கீங்க ஷங்கர்

நன்றி வசந்த்..::))

இந்த இடுகை விகடன் குட் ப்ளாக்ஸ்ல
//

நீங்கள் சொல்லித்தான் தெரிந்தது::))


வாழ்த்துக்கள் ஷங்கர்...மிக்க நன்றி::))

Paleo God said...

பா.ராஜாராம் said...
great!

nice.//

நன்றி பாரா..ண்ணே::))

Paleo God said...

T.V.Radhakrishnan said...
அருமையான பதிவு//

நன்றி சார்..::))

Paleo God said...

நட்புடன் ஜமால் said...
பக்குவம்//

நன்றி ஜமால்..::))

Paleo God said...

thenammailakshmanan said...
மனதை கலங்கடித்த பதிவு ஷங்கர் என்ன செய்ய முழுமையான அன்பு ஒன்றுதான் ஒரே தீர்வு//

நன்றி சகோதரி..::))

Paleo God said...

விஜய் said...
மிக மிக வித்யாசமான பதிவு

இது போன்ற குழந்தைகளுடன் வாழும் பெற்றோர்களின் மனநிலை மிகுந்த வேதனைக்குரியது

பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

விஜய்//

நன்றி விஜய்..::))

Paleo God said...

seemangani said...
அருமையான பகிர்வு பாலா இவர்களுக்கு உள்ள உருவ ஒற்றுமை கூர்ந்ந்து பார்த்தது உண்டா??பதிவுக்கு பாராட்டுகள்...பொங்கல் வாழ்த்துகள்...//

நன்றி கனி..::))

Paleo God said...

குட் ப்ளாக்ஸ் ல தேர்ந்தெடுத்த விகடனுக்கும் நன்றி...::))

RaaKu saamy said...

Mikka arumai,,,

ithae anupavam yaenakkum undu,,,

குலவுசனப்பிரியன் said...

//ஆனால் மனிதம் சோதிக்க, அன்பை சோதிக்க, இவ்வுலகில் நம் இருப்பின் நோக்கத்தை சோதிக்க ஏதோ ஒரு சக்தி செய்யும் வேலையாக இருக்குமோ என்று எனக்கு நானே சமாதானமாகி இருக்கிறேன். //
மண்ணாங்கட்டி. நம்நாட்டில் பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்திற்காக கொல்லப்படும் நிலையில், டௌன் சின்றொம் மூலமாக சோதித்துத்தான் மக்களின் அன்புகொள்ள போகிறர்களா? இங்கே நல்ல செயலாய் உள்ளவர்களின் பாடே பெரும்பாடாக இருக்கும்போது (லிவிங்-ஸ்மைல் வித்யா நினைவிற்கு வருகிறார்), உதவி வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு கிடைப்பது, அவர்கள் பாவப்பட்டவர்கள் என்று தொனிக்கும், வறட்டு தத்துவம்தான். உங்கள் இடுகையும், வந்துள்ள பெரும்பான்மையான பின்னூட்டங்களும் இத்தகையதே. என் மகன் (down-syndrome 8 வயது) பிறக்கும் முன்பு வரையில், என் நிலைப்பாடும் இப்படித்தான் இருந்தது.
அமெரிக்காவில் டௌன் சின்றொம் உள்ள குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ள போட்டி நிலவுகிறது. மக்கள் பல வருடங்களாக காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள். இதுவல்லவா ஆரோக்கியமான உண்மை நேயம் கொண்ட சூழல்.

Paleo God said...

என் மகனுக்குப் பேச்சு வர வேண்டியும் அதேபோல் விரதமிருந்திருக்கிறேன். நான் இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன் ஆனால் என் மகனுக்கு ஏழுவயதாகியும் பேச்சு வரவில்லை. நான் அவனுக்கு மரபணுக் கோளாறால் (டவுன் சின்ட்ரோம்) ஏற்படும் குறைகளை உணர்ந்து, சக அமெரிக்கர்கள் போல இருப்பதை நேசிக்கக் கற்றுக்கொண்டேன். சில அமெரிக்கர்கள் எந்நாட்டவர்க்கும் இலக்கணம் சொல்லும் வகையில் வாழ்கிறார்கள். நான் ஒரு ஆண் குழந்தை ஒன்றை தத்து எடுத்துக்கொண்டால் என் மகனுக்கு உதவியாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். கலிபோர்னியாவில் வசிக்கும் பெண்மணி ஒருவர், தன் ஒரு குழந்தைக்கு இந்தக்குறை இருப்பினும், அதேபோல் மேலும் ஒரு குழந்தையை தத்தெடுத்துக் கொண்டதை அறிந்து என் குறுகிய மனப்பான்மையை எண்ணி நாணிப்போனேன்.//

அன்பு குலவுசனபிரியன் மேலே உள்ளது தாங்கள் இட்ட இடுகை, உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் என் வந்தனம்.
//மண்ணாங்கட்டி. நம்நாட்டில் பெண்ணாய் பிறந்த ஒரே காரணத்திற்காக கொல்லப்படும் நிலையில், டௌன் சின்றொம் மூலமாக சோதித்துத்தான் மக்களின் அன்புகொள்ள போகிறர்களா?//

நான் நம் மக்களை எங்கே தூக்கி நிறுத்தி சொன்னேன்?

//இங்கே நல்ல செயலாய் உள்ளவர்களின் பாடே பெரும்பாடாக இருக்கும்போது (லிவிங்-ஸ்மைல் வித்யா நினைவிற்கு வருகிறார்), உதவி வேண்டிய நிலையில் உள்ளவர்களுக்கு கிடைப்பது, அவர்கள் பாவப்பட்டவர்கள் என்று தொனிக்கும், வறட்டு தத்துவம்தான். உங்கள் இடுகையும், வந்துள்ள பெரும்பான்மையான பின்னூட்டங்களும் இத்தகையதே.//

அதேதான் நானும் சொல்லவந்தது.. நல்லபடியாய் இருப்பவர்கள் நல்லபடியாய் பிறந்த குழந்தையை வருங்கால வரதட்சனைக்காக கள்ளிப்பால் கொடுத்து கொல்லும் சூழலில், இதுபோல பிறந்த குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களின் மனம் வறட்டு தத்துவமா? மனிதமா?

உங்களை போன்று அமெரிக்காவில் ஞானம் பெற்றவர்கள் இல்லை அவர்கள். இங்கே அந்த அளவுக்கு வசதிகளும், அறிவும் இல்லை. இருப்பினும் அந்த குழந்தைகளை எப்படியாவது சரி செய்துவிட அவர்கள் முனையும் அன்பும் அரவணைப்புமே எனது இடுகை, இது மிகை படுத்தப்பட்டதல்ல, நான் நேரில் கண்டது.

//என் மகன் (down-syndrome 8 வயது) பிறக்கும் முன்பு வரையில், என் நிலைப்பாடும் இப்படித்தான் இருந்தது.//

நான் கண்டவர்களிடம் எந்தவிதமான கழிவிரக்கமும் (அவர்களின் குழந்தை பற்றி) இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். மேலும் அமெரிக்காவில் ஒரு குழந்தையை அவ்வளவு சீக்கிரம் சாகடிக்க முடியாது இங்கே அது சுலபம் . இருப்பினும் அந்த பெற்றோர்கள் குழந்தைகளை நல்லபடியாய் வளர்க்க முற்படுவது உங்களுக்கு மண்ணாங்கட்டி என்பது வருத்தமளிக்கிறது. :(

//அமெரிக்காவில் டௌன் சின்றொம் உள்ள குழந்தைகளை தத்து எடுத்துக்கொள்ள போட்டி நிலவுகிறது. மக்கள் பல வருடங்களாக காத்திருப்பு பட்டியலில் இருக்கிறார்கள். இதுவல்லவா ஆரோக்கியமான உண்மை நேயம் கொண்ட சூழல்//

அமெரிக்கர்களின் பல முகங்கள் மனித நேயம் இல்லாதவை அந்த சொன்னால் நீங்கள் இதை வாபஸ் வாங்கிக்கொள்வீர்களா? குழந்தை நேயத்துக்கே வருகிறேன் FOOD INC என்ற படத்தில் ஒரு குழந்தைக்கு அமெரிக்கா அளித்த நீதியை திரையில் பாருங்கள்.

உங்கள் மன வருத்தம் எனக்கு புரியும், மொத்தமாய் நீங்கள் மண்ணாங்கட்டி என்பது சரி இல்லை என்பதற்காகவே இந்த பதில். ஏதேனும் தவறென்றால் மன்னிக்கவும்.

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

இந்தப்பதிவை இப்போது தான் படிக்க வாய்ப்பு கிடைத்தது.உருக்கமான பதிவு.

குலவுசனப்பிரியன் said...

//ஏதோ ஒரு சக்தி செய்யும் வேலையாக// நான் கடிந்துகொண்டது நம் பெற்றோர்களையோ உங்களையோ இல்லைங்க. அந்த பொல்லாத சக்தியை.

cheena (சீனா) said...

அன்பின் ஷங்கர்

என்ன சொல்வது - தெரியவில்லை - மனம் நெகிழ்கிறது - அழுகிறது - நாம் சிறிது சிந்தித்தல் வேண்டும். ம்ம்ம்ம்ம்ம்

//புன்னகைத்த முகத்துடன் நம்மை பார்த்து ஏதோ சொல்லவரும் அவர்களின் மொழி என்னால் ரசிக்கமுடியாமல் மெதுவாய் தலை கோதி சிரித்துவிட்டு வந்திருக்கிறேன். எந்த வித சங்கோஜமும் படாமல் பெற்றோர்களும் என்னை குழந்தைக்கு அறிமுகம் செய்து வைக்கும்போது. //

என்ன செய்வது - என்ன பேசுவது எனத் திணறும் நிலையில் தான் நாம் இருக்கிறோம் - மனம் அழும் - வெளியே தெரியாது. இயல்பு.

நல்லதொரு சிந்தனையில் எழுந்த - எழுதிய இடுகை.,

நல்வாழ்த்துகள் ஷங்கர்
நட்புடன் சீனா