பலா பட்டறை: எங்களின் குடும்ப மருத்துவர்

எங்களின் குடும்ப மருத்துவர்

என்னுடைய குடும்ப டாக்டர் ஒரு சிறந்த மனிதர். அவர் ஒருவரையும் வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை. ( எதாவது மருந்தோ, மாத்திரையோ அசட்டையாக மாற்றிகொடுக்க வாய்ப்புண்டு என்பதால் ) மேலும் பரிசோதனைகள் செய்து மருந்து குறிப்புகளை கணினி மூலமாக பிரிண்ட் எடுத்தே தந்துவிடுவார், அதில் மருந்து தயாரிப்பவரின் பெயர், என்ன ரசாயனம், எத்தனை நாளுக்கு, வேளைக்கு, என்ற எல்லா குறிப்புகளும் இருக்கும். சில முக்கியமான மருந்துகள் கடைகளில் கிடைக்க சிரமம் இருப்பின் அந்த மருந்து நிறுவனத்தின் விற்பனையாளர் செல் பேசி எண்ணையும் அதில் குறிப்பிட்டு தந்து விடுவார்.

மிகவும் முக்கியமாக அதில் மருந்து கடைக்காரருக்கும் ஒரு குறிப்பு இருக்கும் 'தயவு செய்து குறிப்பிட்டுள்ள மருந்து தவிர மாற்று மருந்துகளை தரவேண்டாம் - குறிப்பிட்ட எண்ணிக்கைகளுக்கு மேல் தரவேண்டாம் - நோயாளி வயதானவராக இருப்பின் அவருக்கு தயவு செய்து அதி ஜாக்கிரதையாக மருந்துகளை கொடுக்கவும் என்று பல குறிப்புகள் இருக்கும். ஏதோ ஒன்றை கிறுக்கி அதற்கு சம்பந்தமில்லாத ஏதோ ஒரு மருந்து வாங்கி அதனால் பல பின் விளைவுகளை நோயுற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதே அவரின் நோக்கம்.

வருடத்திற்கு ஒருமுறை தன்னிடம் சிகிச்சை பெரும் எல்லாவறையும் அழைத்து, ஒரு பெரிய மண்டபத்தில் இலவச முழு உடல் பரிசோதனையும் செய்வதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் சுமார் ஐந்தாயிரம் வரை செலவாகும் இந்த இலவச மருத்துவ முகாம் காலை சுமார் 4.30 மணிக்கு ஆரம்பிக்கும் சர்க்கரை, எலும்பு அடர்த்தி,கொழுப்பு, சிறுநீர் பரிசோதனை, நுரைஈரல் பரிசோதனை, ECG, சர்க்கரை நோய்க்கான பாதம் மற்றும் கண் விழித்திரை பரிசோதனை, மற்றும் பல பரிசோதனைகள் பல புகழ்பெற்ற மருந்து நிறுவனங்களின் துணையுடனும் அவர்களின் ஊழியர்களுடனும் நடத்தப்படும்.

இலவச காலை சிற்றுண்டி, மதிய உணவு, தேநீர் மற்றும் இலவச மருந்துகள் அல்லது மருத்துவ பானங்கள் போன்றவை நிச்சயம் அதில் இருக்கும். மாலை சுமார் 2.30 அல்லது 3.00 மணிக்கு முடிவடையும், இடையில் மருத்துவ கேள்வி பதில் அதற்கு பரிசு என்று ஒரு குடும்ப விழா போல இந்த மருத்துவ முகாம் இருக்கும்.

வருடம் பூராவும் தன்னிடம் சிகிச்சை பெற்று பணம் தருபவர்களுக்கு அவரின் ஒரு நன்றி போலவே அந்த விழா இருக்கும். சிகிச்சை பெற்று நலமுடன் வாழும் அனைவரும் டாக்டரை வாழ்த்தி விடை பெறுவோம்.

5 comments: