பலா பட்டறை


அக நாழிகை புத்தக வெளியீட்டு விழாவிற்கு நேற்று போயிருந்தேன்.. (நன்றி தகவல் : வித்யா அவர்கள் ) நல்ல கூட்டம், குளிர்ச்சியான மாலை பொழுது.. நான் முதன் முதலாக பங்கேற்கும் பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பு. பிரபலங்கள் திரு .ஞாநி, சாரு, பாஸ்கர் சக்தி, அஜயன்பாலா மற்றும் பல வலைபக்க நண்பர்கள் திரளாக வந்து சிறப்பித்திருந்தார்கள். பிரபல பதிவர்கள் : தண்டோரா, நிலாரசிகன், கேபிள் சங்கர் போன்றவர்களுடன் பேசியது மகிழ்ச்சி. நான் ரசித்த பல பதிவர்கள் வந்திருக்கலாம் இன்னும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது அவர்களுடன் பேச அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் வரும் என்று நினைக்கிறேன். வீட்டிலும், வெளியிலும், அலுவலகத்திலும், நண்பர்களிடத்தும் ஒவ்வொரு முகம் நம்மை அறியாமலே ஒரே முகத்தில் வந்து செல்லும் 'அந்நியன்' படத்தில் வருவது போல. வலைப்பக்கங்கள் லேசாக அதனை உடைப்பது இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் :-) ஒரே நபரின் இருவேறு முகங்கள் (வலைப்பக்க முகமும், நிஜ முகமும்) இங்கே காணக்கிடைக்கிறது.  ராஜ நாகத்தின் சீறும் ஓசை கேட்டு பயத்துடன் கூடையை திறந்தால் உள்ளே மெத்தென்ற ஒரு முயல் குட்டி இருப்பது போல எழுத்துக்களின் வீச்சுகளுக்கும் நண்பர்களின் முகங்களுக்கும் நல்ல வித்தியாசம் காணக் கிடைத்தது. (எனெக்கென்னமோ பெயருக்கும், எழுத்துக்கும், உருவத்துக்கும் பொருந்திவரும் ஒரே நபர் பாரதியார் தான் போல் தோன்றுகிறது)              

எளிமையான வகையில் புத்தகங்கள் வெளியீடு நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் தேனை தடவாமல், நிஜத்தை சொல்லி அன்பு எச்சரிக்கை விடுத்து பத்திரமாய் பயணப்பட வாழ்த்தினார்கள் (அவரவர்களுக்கே உரித்தான நடையில்) படைப்பாளர்கள் முகத்தில் கவலையும் எதிர்பார்ப்பும் கலந்தே தெரிந்தது.. அது அவர்களின் அடுத்தடுத்த படைப்புகளில் நல்லவிதமாய் மெருகேறி வருமென்று நம்புகிறேன். 

எத்தனயோ காலம் மன வயிற்றில் சுமந்து... ஒவ்வொரு குழந்தைக்கும் பாந்தமாய் பெயர் வைத்து மொத்தமாய் புத்தகமாய் நம்மிடையே தந்திருக்கும்..பா. ராஜாராம், நரசிம், லாவண்யா சுந்தரராஜன், என்.விநாயக முருகன், TKB காந்தி போன்ற அனைத்து படைப்பாளிகளுக்கும், ஆக்கமும் ஊக்கமும் தந்த அகநாழிகை திரு.வாசுதேவன் அவர்களுக்கும்  நன்றியும், வாழ்த்துக்களும்...         
*********************************
எல்லா புத்தகங்களும் வாங்கி வந்தேன்.. அமைதியான ஒரு நேரத்திற்காக காத்திருக்கிறோம் நானும் புத்தகங்களும்.  

                  

7 comments: