பலா பட்டறை: யாகாவாராயினும் நாகாக்க..

யாகாவாராயினும் நாகாக்க..எனது முந்தைய பதிவான எங்களின் குடும்ப மருத்துவர் இல் சொன்னது போல 2009 ம் வருடத்திற்கான, இலவச முழு உடல் சிகிச்சை முகாம் லஸ் கார்னர் அருகிலுள்ள ஹோட்டல் சங்கீதாவில் 27-12-2009 ஞாயிறு அன்று நடைபெற்றது சரியாக காலை 4.45 க்கு துவங்கிய இந்த பரிசோதனைக்கு அவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெரும் 100 க்கும் அதிகமானவர்கள் உடல் பரிசோதனை செய்ய வந்திருந்தார்கள், நான் என் தாயாருடன் சென்றிருந்தேன்.


நிகழ்ச்சியின் முக்கிய விஷயங்கள் :: 


இந்த இலவச உடல் சோதனை முகாம் சிறிய அளவில் டாக்டருடைய கிளினிக்கில் தொடங்கப்பட்டு இன்றைக்கு ஒரு மண்டபத்தில் நடத்தக்கூடிய அளவிற்கு இந்த  10 ஆவது ஆண்டில் வளர்ச்சி கண்டிருக்கிறது. தான் பரிந்துரைக்கும் மருந்து நிறுவனங்களின் துணையுடன் நவீன சிகிச்சை கருவிகளை கொண்டு மிக அத்தியாவசியமான உடல் பரிசோதனைகள் முக்கியமாக இருதயம் மற்றும் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கான SCREENING TEST கள் செய்யப்பட்டது. 


01. சர்க்கரையின் 3 மாத விகிதங்களை காட்டும் :  HbA1C.
02. சர்க்கரையால் பாதிப்புக்குன்டாகும் பாதங்களின் தொடு   
      உணர்விற்கான : VIBRATORY THRESOLD READING / NEUROPATHY  
      SCREENING.
03. இருதயத்தின் நுண்ணிய சப்தங்களை பதிவிடும் PCG - PHONO-
      CARDIOGRAM.
04. எலும்பு அடர்த்தியை சொல்லும் BONE DENSITY REPORT.
05. ரத்தத்தின் க்ளுகோஸ் சொல்லும் (சாப்பாட்டிற்கு முன்பு ஒருமுறை / 
      பின்பு ஒருமுறை ) BLOOD GLUCOSE ANALYSIS. (CBG -  CAPILLARY BLOOD 
      GLUCOSE)
06. நுரை ஈரல்களின் செயல்திறன் அறியும் LFT - LUNG FUNCTION டெஸ்ட்.
07. 11 வகையான அளவுகளை சொல்லும் MICROALBUMINURIA TEST. இது 
      சிறுநீரில் உள்ள ALBUMIN அளவை காட்டுகிறது. சிறுநீரக செயல்பாடு 
      இதன் மூலமும் கண்டறியப்படுகிறது.
08. BMI BODY MASS INDEX எனப்படும் உடலின் அளவுக்கேட்ற்ற உடல் 
      கொழுப்பு கண்டறிதல்.
09. தைராயிடு சுரப்பிகளுக்கான பரிசோதனை. 


போன்றவைகள் செய்யப்பட்டன. மருத்துவ கேள்வி பதில் (QUIZ) போட்டியும் நடந்தது. சரியான பதில் சொல்லியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் 'உணவே மருந்து மருந்தே உணவு' என்ற தலைப்பில் ஒரு சிறிய பட்டிமன்றமும் நடந்தது. முதலில் நடக்கும் உணவிற்கு முன்பான ரத்த பரிசோதனைக்கு பிறகு முதலில் காபியும் பிறகு சுவையான சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. பட்டிமன்றம் QUIZ போன்றவை காலையிலிருந்து காத்திருந்து பரிசோதனை செய்ய வந்த வயதானவர்களுக்கு நல்லதொரு பொழுது போக்காக நிறைய அறிவுபூர்வமான் மருத்துவ  விஷயங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாக அமைந்தது. 


கடைசியாக சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுக்குறிப்புகள், பொதுவான ஆரோக்கிய உணவிற்கான சந்தேகங்களை போக்கினார் ஒரு டயடிசியன்.   


மதியம் நல்ல சாப்பாட்டுடன் CAMP இனிதே நிறைவு பெற்றது. 


கருத்து பரிமாற்றத்தின் போது டாக்டர் கூறிய சில விஷயங்கள் திகைக்க வைத்தன::


தென் கிழக்கு ஆசியாவில் சர்க்கரை நோய் (அல்லது குறைபாடு) மிக அதிக அளவில் பரவுவதாக குறிப்பிட்டார்.


 வம்சா வழி என்பது போய் இப்போது குறைந்த பட்சம் 40 விழுக்காடு ஆபத்து சர்க்கரை வம்சாவழி இல்லாத மக்களுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் SENSEX போல இந்த அளவுகள் மிக வேகமாக மாறிக்கொண்டிருப்பதாகவும் சொன்னபோது கொஞ்சம் 'திக்' கென்றுதான் இருந்தது.


முன்பெல்லாம் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு வந்தால் 60 சதவிகிதம் மற்றவர்களுக்கும் வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது இப்போது கண்டிப்பாக அனைவருக்கும் வரும் என்ற அளவில் வாழ்வியல் முறை மாறிவிட்டதாக கவலையுடன் குறிப்பிட்டார்.


 நல்ல உணவு, நடை பயிற்சி, உடற்பயிற்சி, தொடர்ந்த உடல் பரிசோதனைகள் போன்றவை மட்டுமே ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை குறைபாடுகளிலிருந்து (வேறு பலவற்றிலிருந்தும்) நம்மை காப்பற்றும் என்பதையும் கூறினார் (BP மற்றும் DIABETIC,etc ).


'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது போல நம்மை அறியாமல் நமது பழக்க வழக்கங்களினால் ஏற்படும் மேற்படி குறைபாடுகள், முதல் கட்ட அளவில் கண்டுபிடிக்கப்பட்டால் தொடர் சிகிச்சை மூலம் நலமான வாழ்வு வாழ வழி வகுக்கும். நான் நல்லாத்தானே இருக்கேன், எனக்கு எதுக்கு பரிசோதனை என்று நினைக்கும் நண்பர்களுக்கான ஆராச்சி முடிவுகள் நல்ல செய்திகளை சொல்லவில்லை. 


வேலை பளு, சரியான தூக்கம் இல்லாதது, நேரத்திற்கு சாப்பிடமுடியாதது, புகை, மது, இன்ன பிற ஆரோக்கிய கேடு வஸ்துகள்... 'நீ மாட்டுவடா' என்று சர்க்கரை தோய்ந்த ரத்த அழுத்த கத்திகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றன. 


நல்லது என்று நஞ்சை உண்ணும் முன்பு இது பசிக்கா அல்லது ருசிக்கா என்று சுய பரிசோதனை செய்வது நலமென்பது என் கருத்து. நம்மை சார்ந்து நம் குடும்பம், பல குடும்பங்கள் ஒரு ஊர், பல ஊர்கள் சேர்த்து நாடுகள்... நம்மாலான உலகு... நாம் செய்யும் தவறுகள் நமது சந்ததியே பாதிக்கும் எனும்போது 'யாகாவாராயினும் நாகாக்க' என்பதை புது அர்த்தத்தில் இந்த புத்தாண்டில் புரிந்து கொள்வோம். இனிய ஆரோக்கியமான வளமையான சந்ததிகளுக்கான புத்தாண்டாக இந்த 2010 ஆரம்பிக்கட்டும்.


கடைசியாக :: எல்லோரும் ஆரோக்கியமாக இன்புற்றிருக்கவேயன்றி வேறொன்றும் வேண்டேன் பராபரமே..        


அனைவருக்கும் எனது மனம் கனிந்த 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள். 


பின் குறிப்பு ::
எனது மொக்கைகளுக்கும் (இப்படித்தான் பல பிரபல பதிவர்கள் போடறதுனால!!) ஆதரவு தந்து, பின்னூட்டமிட்டு, நட்பாய் தொடரும் நல் உள்ளங்களுக்கு என்னுடைய எல்லா பதிவுகளையும் சமர்ப்பிக்கிறேன். நன்றி..நன்றி..நன்றி.   


       


       
'


    


      
        


                        

23 comments: